தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 1/4 : மயிலை சீனி.வேங்கடசாமி
தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன?
1/4
பல நூல்கள் மறைந்துபோனதை அறிந்தோம். அந்நூல்கள் மறைந்துபோனதற்குக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். தலைச்சங்க, இடைச்சங்கக் காலத்தில், பாண்டிநாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள், இரண்டு பெரிய கடல் கோள்களினால் மறைந்து விட்டன. அப்போது அப்பகுதியில் இருந்த ஏட்டுச்சுவடிகளும் மறைந்துபோயின.
ஏரண முருவம் யோகம்இசை கணக் கிரதம் சாரம்
தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள
என்னும் செய்யுள், கடல் பெருக்கெடுத்துப் பாண்டிநாட்டின் பகுதியை அழித்தபோது, முதற்சங்க, இடைச்சங்க நூல்கள் மறைந்துபோனதைக் கூறுகிறது.
ஆனால், அதன் பிறகு உண்டான பல நூல்களும் மறைந்து போனதைக் காண்கிறோம். இவை மறைந்துபோனமைக்குக் கடல் கோள்கள் காரணம் அல்ல; வேறு காரணங்களால் இவை மறைந்தன. அக்காலத்தில் அச்சுப் புத்தகங்கள் இல்லாதது, பல நூல்கள் மறைந்து போனதற்கு முக்கியக் காரணமாகும். அச்சுப் புத்தகங்கள் அக்காலத்தில் இருந்திருந்தால், அப்புத்தகங்களின் படிகள் பலரிடத்தில் பல ஊர்களில் இருந்திருக்கும். அப்போது, சில இடங்களில் உள்ள புத்தகங்கள் அழிந்துபோனாலும் வேறு இடங்களில் அந்தப் படிகள் இருந்து, அந்நூல் மறைந்துபோகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும். அச்சுப் புத்தகங்கள் இல்லாத அக்காலத்தில், நூலின் படிகள் மிகச் சிலவே இருந்தன. அச்சில படிகள் நீர், நெருப்பு, சிதல் முதலிய காரணங்களால் அழிந்துவிடு மானால் அந்நூல்கள் அடியோடு அழிந்துபோகின்றன. இவ்வாறு மறைந்துபோன நூல்கள் பல.
சமயப் பகை காரணமாகவும் பல ஏட்டுச் சுவடிகள் மறைந்துபோயின. நமது நாட்டிலே, முற்காலத்தில் செழித்துப் பரவியிருந்த பௌத்த சைன மதங்கள் பல சமய நூல்களைக் கொண்டிருந்தன. அந்த மதங்கள் பிற் காலத்தில் குன்றிப்போய் மறைந்தபோது அச்சமய நூல்களும் மறைந்து போயின. ஆதரிப்போர் இருந்தால்தானே அவை வாழ்ந்திருக்கமுடியும்? அம்மதங்கள் மறைந்த காரணத்தினால், ஆதரிப்போர் இல்லாமல், அந் நூல்கள் மறைந்துபோயின. அம் மதத்தவர் அல்லாத ஏனைய மதத்தார், சமயப் பகை காரணமாக அந்த வேறு மத நூல்களைப் போற்றாமல் விட்டனர்.
குண்டலகேசி, விம்பசார கதை. சித்தாந்தத் தொகை திருப்பதிகம், புத்த சாதகக் கதைகள் முதலிய பௌத்த நூல்களும், சைன இராமாயணம், வளையாபதி, கிளிவிருத்தம், எலிவிருத்தம், சாந்தி புராணம், மல்லி நாதர் புராணம், நாரதசரிதை, பிங்கல கதை, வாமன கதை, பிங்கல கேசி, அஞ்சனகேசி, காலகேசி, தத்துவ தரிசனம், முதலிய சைன சமய நூல்களும் இவ்வாறு மறைந்துபோன நூல்களாம். மணிமேகலை, சிலப்பதிகாரம், சிந்தாமணிபோன்ற பௌத்த சமண சமயக் காவியங்களைச் சைவவைணவ சமயத்தார் போற்றிக் காப்பாற்றி யதன் காரணம், அவை இலக்கிய வளம் படைத்த காவியங்கள் என்னும் காரணம் பற்றியே. இவ்வாறு ஒருசில பௌத்த சமண சமய நூல்கள், அவற்றின் இலக்கியச் சிறப்புப் பற்றிப் போற்றிக் காப்பாற்றப்பட்டன என்றாலும் பௌத்த சைன சமயங்களின் ஏனைய நூல்கள் எல்லாம் மறைந்துபோயின.
மூடக்கொள்கை
சமயப் பகைமையினால் சிலபல நூல்கள் அழிந்தது போலவே, மூடக்கொள்கையினாலும் பல நூல்கள் அழிந்தன. பதினெட்டாம் பெருக்கு, கலைமகள் விழாவாகிய சரசுவதி பூசை, மாசிமகம் போன்ற காலங்களில் ஏட்டுச்சுவடிகளைக் கடலிலும் ஆற்று வெள்ளத்திலும் போடுகிற வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த மூட வழக்கம் சமீபகாலம் வரையிலும் இருந்தது. கல்வி அறிவில்லாதவர்கள், தங்கள் வீடுகளில் தமது முன்னோர் சேமித்துவைத்த ஏட்டுச் சுவடிகளைக் கற்கும் ஆற்றல் இல்லாமல், அச்சுவடிகளை ஆற்று வெள்ளத்தில்விட்டனர். இதுபோன்ற மூடத்தனம் உலகத்திலே எந் நாட்டிலும் காணமுடியாது. சிலர் ஏட்டுச் சுவடிகளை அடுப்பில் இட்டு எரித்ததும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்தாற்போல, கல்வி யறிவற்றவர் கையில் கிடைத்த ஏட்டுச்சுவடிகள் இவ்வாறு அழிந்தன.
“கற்பூர வாசனை கழுதைக்குத் தெரியுமா?”
வித்துவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்குடும்பத்திலுள்ள பொருள்களையும் சொத்துகளையும் பாகம் செய்து கொள்ளும்போது, ஏட்டுச்சுவடிகளையும் பங்கிட்டுக்கொள்வது வழக்கம். பங்கிட்டுக் கொண்டவர்களில் கல்வி அறிவில்லாதவர்களும் இருப்பார்கள். படிக்கத் தெரியாமல் இருந்தாலும் சுவடிகளிலும் பங்கு கேட்டு வாங்கு வார்கள். அவர்களிடம் சென்று ஏடுகளின் கதி யாது? பதினெட்டாம் பெருக்குக்கும், அடுப்புக்கும், சிதலுக்கும் அவை இரையாகிவிடும்
மயிலை சீனி.வேங்கடசாமி: மறைந்துபோன தமிழ்நூல்கள்
(தொடரும்)
Leave a Reply