தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி)

thamizh ezhuthugal 1

தமிழை அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்!

சோமன் பாபு (Soman Babu)

எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் கொடுத்தோமானால் நாளை???

சிவனேசுவரி தியாகராசன் (Shivaneswari Thiyagarajan)

இன்று உன் எழுத்தை மாற்று என்பர்; நாளை உன் மொழியை மாற்று என்பர்; நாளை மறுநாள் உன் பண்பாட்டையும் கலைகளையும் கொஞ்சம் மாற்றேன் என்று கெஞ்சுவர்; அதற்கும் அடுத்தநாள் உன் வரலாற்றையும் மாற்று என்று கூச்சலிடுவர்; இறுதியில்…? ‘உள்ளதும் போய்விட்டதே நொள்ளைக்கண்ணா’ என்று ஏமாற வேண்டியதுதான். தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு, தமிழ் மொழி மேலும் வளம்பெறவும், தமிழர் வாழ்வு உயரவும் உழைப்போம்!

பிரகாசு சுந்தரம் (Pragash Sundram)

 

  1.) மலேசியா= இது தமிழ்; 4 எழுத்துகளே. ஆங்கில எழுத்தில் MALAYSIA (ம்+அ+ல்+ஏ+ச்+இ+ய்+ஆ) 8 எழுத்துகள். எது சிக்கனம்? 2.) ‘ழ்’க்கு ஆங்கிலத்தில் மிகச் சரியான உச்சரிப்புடன் கூடிய எழுத்துரு உள்ளதா? (zh என்பது நாமாக வசதிக்கு ஏற்படுத்தியது). 3.) அவர் சொன்னதை ஓர் அரேபியனிடமோ, சீனரிடமோ, ஆங்கிலேயனின் அண்டை வீட்டான் பிரெஞ்சுக்காரனிடமோ சொல்ல வேண்டியதுதானே? ஏன்… அங்கிருந்து தொடங்கட்டுமே அவரின் மொழிப் புரட்சி!

பிரகாசு சுந்தரம் (Pragash Sundram)

இந்தக் கருத்துக்கு எனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல், கட்டுரையாளர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் ஆங்கில எழுத்துகளில் தமிழில் கருத்து தெரிவித்தது அவருடைய பிதற்றலுக்கு ஆதரவு தருவதுபோல் உள்ளது. முதலில் நாம் தமிழைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வோம். பயன்பாட்டை அதிகரிப்போம். இம்மாதிரியான எதிர்ப்பு இடுகைக்கே தமிழ் பயன்படுத்தவில்லை என்றால், இது வெறும் முழக்கமாகிவிடும். தயவுசெய்து தமிழிலே கருத்துகள் இடவும்! தமிழ் என்றும் நிலைத்திருக்கும்!

முகிலன் முருகன்

தமிழர் அல்லாதார்தான் கிரந்த எழுத்து வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள் என்று எங்களுக்கு நெடுநாளாகவே தெரியும். ஈரான் நாட்டின் தேசிய மொழி பாரசீகம். அவர்களுக்கு மொழி இருக்கிறது எழுத்து இல்லை. அதனால்தான் அரேபிய எழுத்தைப் பயன்படுத்துகிறார்கள். மலாய்க்காரர்களுக்கும் இதே கதிதான். நமக்கு எழுத்து, மொழி இரண்டும் உள்ளன. நமக்கு எதற்கு a ,b ,c? தமிழ் படிக்க மறுத்தவர்கள், மறந்தவர்கள் போட்ட கூப்பாடுதான் இவர் போன்ற நபர்கள்.  

தொரைசாமி (Dorai Samy)

இதற்கு என்ன அவசியம்? ஆங்கிலத்திற்கும் சமற்கிருதத்திற்கும் வக்காலத்து வாங்குவது அடிப்படைவாதம் இல்லையா? தாய் மொழிவழிக் கல்வியே சிறந்தது என்னும் அறிஞர்கள் எல்லோரும் அடிப்படைவாதிகளா? ‘இந்து’ நாளேடு தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராகச் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடவென்றே வருகிறது. அதில் இப்படித்தான் வரும்.

தமிழொலி ஏகாம்பரம் (Thamizholi Ekambaram)

 

எதிர்காலத்தில் தமிழ் வாழ வேண்டும்… வளர வேண்டும் என்று மிகப் பெரும் ஆவலோடு பேசுவதாகப் பாவனை செய்து ஒவ்வாத கருத்தைச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். தமிழுக்காகப் பேசுபவர்களை அடிப்படைவாதிகள் என்றும் பழங்குடிக் கும்பல் மனநிலையாளர்கள் என்றும் பச்சை குத்திப் பகடி பண்ணியிருக்கிறார்.

சுப.நற்குணன் (Suba Nargunan )

தாய்மொழியான தமிழை அழிக்கத் திட்டம் தீட்டிவிட்டார்களோ? பேசும் பேச்சில் பாதியை அழித்துவிட்டார்கள்!  

தமிழரசி இராமகிருட்டிணன் (Thamilarasy Ramakrishnan)

 

தனக்கென எழுத்து வடிவம் இல்லாத இந்திக்காரன்கூட இப்படிச் செய்ய மாட்டான். தனக்கென மிகச்சிறந்த எழுத்துரு கொண்ட நாம் இவ்வாறு சிந்திப்பது, பத்தினித்தனத்திற்குப் பக்கத்து வீட்டுப் பெண்ணை அடையாளம் காட்டுவதற்கு ஒப்பாகும். வேண்டாம் திரிவு புத்தி!

தமிழரசன் சுந்தரமூர்த்திTamilarasan Sundharamoorthy

 

(தொடரும்)