தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

  தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.

 செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும் தமிழின்பால் திருப்ப வேண்டும்.

  முன்பெல்லாம் இதழ்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த அறிவுரை கூற முடிந்தது. ஆனால், இப்பொழுது பிழைகள் மலிந்து “இவை தவிர பிற யாவும் பிழைகளே!” என்று சொல்லும் வகையில்தான் பிழை மண்டிய நடைகள் உள்ளன.

  செய்தியை முந்தித் தரும் ஆர்வத்தில் தமிழ்ச்சொல் அறிய முற்படாமல் பிற சொல் பயன்படுத்துவோரும் உள்ளனர். வாழும் மொழி என்னும் அறியாமையில் பிற மொழிச்சொற்களும் பிற மொழி எழுத்துகளும் நிறைந்த போலித் தமிழில் எழுதுநரும் உள்ளனர்.

  சொற்சேர்க்கையின் பொழுது எழுத்துகள் மிகுதல், மிகாமை குறித்த இன்றியமையாமையை உணராமல், அத்தகைய இலக்கணம் தேவையில்லை என்று தவறாக எழுதுவதைப் பெருமையாகக் கருதுவோரும் உள்ளனர்.

  மரபுக்கவிதை எழுதத் தெரிந்தாலும் பிற சொல் கலந்தால்தான் புதுக்கவிதை எனத் தமிழைச் சிதைக்கும் கவிஞர்கள் படைப்புகளும் இதழ்களில் வருகின்றன.

  இயேசு(Jesus), பேதுரு(Peter), யோவான்(Jhon),  என்பன போன்று கிறித்துவர் இங்கே வந்த பொழுது பெயர்களைத் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே பயன்படுத்தினர். கடந்த நூற்றாண்டு வரை வந்த அயலவர்களும் எல்லீசன் என்பதுபோன்று தமிழ் மரபிற்கேற்பவே தங்கள் பெயர்களைப் பயன்படுத்தினர். இப்பொழுது நாம், நம் மொழிப்பெயர்களைச் சிதைத்துவிட்டுப் பிற மொழிப்பெயர்களை அவ்வாறே எழுத வேண்டும் என்று துடிக்கின்றோம். பெயர்ச்சொற்களைத் அயல் எழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிப்பிற்கேற்பவே எழுத வேண்டும்.

தமிழ்ப்போராளி இலக்குவனார், படைப்புகள் தொல்காப்பியர் வழியில்

அயற்சொல் கிளவி அயலெழுத்து ஒரீஇ

(அயற்சொற்கள் அயல் எழுத்து நீக்கப்பட்டு)

இருக்க வேண்டும் என்கிறார்.

  இவ்வாறு இதழ்கள் தமிழ் ஒலிப்பிற்கேற்ப் பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நல்லுணர்வை மக்களிடையே பரப்ப இயலும்.

 எனவே, இதழ்கள் பிற மொழிச்சொற்களுக்கும் அயலெழுத்துகளுக்கும் இடம் தராமல் (நல்ல) தமிழை மட்டுமே பயன்படுத்தி மக்களுக்கு வழி காட்ட வேண்டும். நல்ல தமிழைக் கற்க விரும்பும் அயல் நாட்டவர்களுக்கு இது பெரும் பயன் நல்குவதாக அமையும்.

  இதழ்கள் செய்திகளைத் தருவது மட்டும் தம் பணி எனக் கருதாமல், செய்திகளின் ஊடாக அன்னைத் தமிழையும் அறியச் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும்! வெல்லும்! வாழும்!

அயல்நாட்டிலிருந்து அருந்தமிழ்ப்பணி ஆற்றும் மின்மினி இதழ் பொன்விழா, நூற்றாண்டு முதலான பிற விழாக்களையும் காண வாழ்த்துகிறேன்.

தமிழ் வாழ்தலில்தான் தன் வாழ்க்கையும் உள்ளது என உணர்ந்து பிற இதழ்களுக்கு எடுத்துக்காட்டாக நல்ல தமிழை மக்களிடம் சேர்த்து நானிலம் புகழ நிலைத்து இயங்க வாழ்த்துகிறேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்