தற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல்

நல்லொழுக்க உறவு என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே இருவரின் விருப்பத்தால் ஏற்படும் காதல் உறவுதான். மாறான உறவுகளைச் சில நாடுகளில் சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றாலும் இல்லறம் போற்றும் நம் நாட்டில் இது நல்லறமல்ல!

ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை, தற்பால்சேர்க்கை, தன்பாலினப்புணர்ச்சி, ஒரு பாலீர்ப்பு, சமப்பாலுறவு, தன் பாலீர்ப்பு (Homosexuality) எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தம் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படுகிறது.

ஆணுடன் உறவு கொள்ளும் ஆண் அகஉறவன்(gay) என்றும் பெண்ணுடன் உறவு கொள்ளும்  பெண் அகஉறவள்(lesbian) என்றும்  அழைக்கப்படுகின்றனர்.

இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377  தற்பாலினத்திற்குள் அல்லது விலங்குடன் விருப்புடன் கொள்ளும் “இயற்கைக்கு மாறான பாலுறவு”  என்பதைத் தண்டனைக்குரிய குற்றம் என முன்னர் வரையறுத்தது. இப்பிரிவின்படி, இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொள்வோருக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ வாணாள் சிறைத் தண்டனையோ விதிக்கலாம். தண்டத்தொகையும் விதிக்கலாம் என இருந்தது.

தற்பால் சேர்க்கை என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. கிரேக்க, உரோமானிய, ஆரியக் காப்பியங்களில் இஃது இடம் பெற்றுள்ளது. கண்ணன் நாரதர் உடலுறவு முதலான பல ஆரியக்கதைகளும் தமிழிலும் குறிக்கப் பெற்றிருந்தாலும் தமிழர் நெறி என்பது இருபாலரிடையே ஏற்படும்  நல்லொழுக்க இல்லற நெறியே! கிரேக்கச் சொல்லான ஃகோமோவிலிருந்து(homo)  ஃகோமோ செக்சு என்னும் சொல் உருவானது. கி.பி 1869இல் செருமானிய உளவியல் வல்லுநர் கார்ல் மரியா கெர்ட்டு பெனி (Karl-Maria Kertbeny,) என்பவர் தற்பால்சேர்க்கையை ஃகோமோ செக்சு என்று குறிப்பிட்டார்.

தத்துவ ஞானி பிளாட்டோ போன்றவர்களும் தற்பால் சேர்க்கையை உயர்த்திக் கூறியுள்ளனர். கடந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டில் உயர்ந்த பொறுப்பிலிருந்த ஒருவர் தற்பால் சேர்க்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். குரல் கொடுத்தார் என்று சொல் வதை விட மருத்துவரிடம் இதற்கு ஆதரவாகச் சண்டையிட்டார் என்றே சொல்லலாம். அண்மைக் காலங்களில் தமிழ் நாட்டிலும் அங்கும் இங்குமாகத் தற்பாலுறவு ஏற்பட்டிருந்தாலும் இது தவறு என்ற அச்சத்துடனேயே இருந்துள்ளனர்.

காலந்தோறும் தற்பாலுறவு என்பது சிலரின் பழக்கமாக இருந்து வருகிறது. எனினும் பொது நிலையில் இதனை விரும்பத்தகாததாக, வெறுப்பிற்குரியதாகவே கருதியுள்ளனர். இதன் காரணமாகப் பல நாடுகளில் சட்டத்திற்கு எதிரானதாகவும் கருதப்படுகிறது. பல நாடுகள் சட்டப்படியான ஏற்பையும் வழங்கியுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

1980இல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு விவரத்தின் பொழுதே கல்லூரி மாணவியர் பலர், தற்பாலுறவு தவறல்ல என்று கருத்து தெரிவித்திருந்தனர். இத்தகைய கருத்துதான் பெருகி இன்று அதற்காகப் போராடிச் சட்ட ஏற்பையும் பெற்றுத் தந்துள்ளது.

திருநங்கையர் இச்சட்டத்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத்  தொடர்ந்து முறையிட்டு வந்ததாலும் தற்பால் சேர்க்கையர் தற்பாலுறவு ஏற்பிற்காகத் தொடர்ந்து போராடி வந்ததாலும், இந்தியாவில் தற்பாலுறவு தவறு என்ற நிலை மாறி 06.09.2018 இல் உச்ச நீதிமன்றமே இதனைத் தவறு என்று சொல்லும் சட்டமே  தவறு என்ற நிலைக்கு வந்துள்ளது.

இப்பொழுதும் ஓரறையில் அடைபட்டுக் கிடப்போர் இடையேயும், விடுதிகள், பள்ளிக்கூடங்கள், தனிப்பயிற்சி யகங்கள், சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகள் முதலான இடங்களில் இருப்போருக்குள்ளும் தற்பாலுறவு கொள்வோர் இருக்கின்றனர். இருப்பினும் சட்டப்படி தவறு என்பதாலும் ஒழுக்கக் கேடு என்று கடியப்பட்டதாலும் ஓரளவு மறைமுகமாகவே நிகழ்ந்தது. ஆனால், தண்டனைக் குற்றமாகக் குறிப்பிடும் சட்டப்பிரிவு நீக்கத்தால், தற்பாலுறவிற்கான ஏற்பால் ஒழுக்கக்கேடுகள் பெருகும் நிலை ஏற்படுகிறது. இதனால் திருமண வாழ்க்கையில் சிக்கல், பிளவு வரும் செய்திகளும் ஊடகங்களில் வருகின்றன. கட்டாயத் தற்பாலுறவு பெருகி இருபால் இளைஞர்களும் பாதிக்கப்படுவர்.

தற்பாலுறவு ஏற்பினால் பல தீமைகள் இருந்தாலும் இன அழிப்பு என்னும் பெருந்தீங்கு குறித்தே நாம் கவலைப்பட வேண்டியுள்ளது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

மனையறத்தின் மாண்பே மக்கள் பேறுதான். தற்பால் உறவால் மக்கள்பேறுக்கு வழியடைக்கப்படுகிறது. இல்லற நெறியின் அடிப்படையே வழி வழி மக்கட்பேறு பெருகிக் குடும்பம் தழைத்தல்தானே!

“மக்களைப் பெற்று மனையறம் காத்துச் சுற்றம் தழுவிச் சோர்விலாது சிறந்தன செய்து வாழ்தலே இல்லறம்” என்று தமிழர் நெறியைப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்.

அடுத்த தலைமுறை தோன்றும் வாயிலை அடைக்கும் பொழுது மக்கட் பேறு எங்ஙனம் பெருகும்? மக்கள் பெருக்கம் இல்லாமல் இனம் எங்ஙனம் பெருகும்? இனம் பெருக, இல்லறம் தழைக்க ஆணும் பெண்ணும் முறைப்படி இணைவதுதானே வாழ்வியல் நெறி.

பாலுறவு இன்றி அறிவியல் முறையில் மகப்பேறு அமைய ஆராய்ச்சி நடைபெறுவதாகச் செய்திகள் கூறுகின்றன. இம்முறை வந்தாலும்  முறையான மக்களினம் உருவாகாது, பெருகாது.

அங்கும் இங்குமாகத் தற்பாலுறவு நேர்ந்தாலும் அதனைச் சட்டப்படி சரியாக மாற்றி ஒழுக்கக் கேட்டை உயர்த்தக் கூடாது. சட்டம் என்ன கூறினாலும் அறவோர் தற்பாலுறவிற்கு எதிரான நிலைப்பாட்டை மக்களிடம் உருவாக்க வேண்டும். மக்களும் தங்கள் மரபினர் பெருக முடியாமல் போவதற்குக் காரணமான தற்பாலுறவை விலக்க வேண்டும். உலகில் மக்களினம் பெருக, நல்லறமாம் இல்லறமே வேண்டப்படுவது என்பதை உணர்ந்து நல்லறம் காக்க வேண்டும்.

மனநோயர்களை ஆற்றுப்படுத்திக் குணப்படுத்துகின்றோம் அல்லவா? அதுபோல் தற்பால் உறவினரையும் நல்வழிப்படுத்த வேண்டும். நடைமுறையில் யாரும் பாதிக்கப்பட்டால் அதனைச் சரி செய்ய வேண்டுமே தவிர கூடா ஒழுக்கமே ஏற்றது என்பதுபோல் செயல்படக்கூடாது. திருமண வாழ்க்கை கிட்டாதவர்கள், திருமண வாழ்க்கையில் துயருறுபவர்கள், தவறான வழியில் செல்லா வண்ணமும் கட்டாயமாகத் தற்பாலுறவில் தள்ளுபவர்களை நல்வழிப்படுத்தவும் மன வள மையங்களை அமைத்து முறையான நல்லுறவுகளையே பேண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கிறோம். பயிரை வளரவிடாமல் முளையிலேயே அழிக்க முயலலாமா?

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி