(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி)

thamizh_and_malayalam_aதாய்த்தமிழும் மலையாளமும் 2

கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]

              

மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள் மலையாளம் தமிழின் புதல்வியே என்பதை நிலைநாட்டும்.

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாருக்கு முன்னதாகவே அறிஞர் கால்டுவல் அவர்களும் மொழி ஞாயிறு பாவாணர் அவர்களும் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த புதல்விகளுள் ஒன்றே மலையாளம் என ஆய்ந்துரைத்துள்ளனர். இவர்கள் போல வேறு அறிஞர்கள் சிலரும் தமிழே மலையாளமாக உருவெடுத்துள்ளதை விளக்கியுள்ளனர். இவ்வாய்வுரைகளின் துணைக் கொண்டு இவர்களின் கருத்திற்குத் துணை நிற்கும் வகையில் வேறு சில நோக்கில் சில கருத்துகளை இங்கு நாம் ஆயலாம்.

மலையாள இலக்கிய வரலாறு என்னும் சாகித்ய அகாதமி வெளியீட்டு நூலில் அதன் ஆசிரியர்   பி.கே.பரமேசுவரன் நாயர் கன்னடத்தைக் கரிநாட்டுத் தமிழ், துளுவைத் துளு நாட்டுத் தமிழ், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என அழைக்கப் பட்டுள்ளமையைக் குறிப்பிடுகிறார். இப்பொழுது பேச்சு வழக்கு அடிப்படையில் மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் அழைக்கப்படும் முறையிலேயே ஒரு காலத்தில் தமிழ் வழங்கிய பகுதிகளில் உள்ள தமிழ் அழைக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்தே தமிழ்தான் பேச்சு வழக்கிற்கு எழுத்து வடிவம் அமைக்கப்பட்டதன் காரணமாகவும் அதன்பின் தாய்த் தமிழுடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டமையாலும் தெலுங்காகவும் கன்னடமாகவும் மலையாளமாகவும் பிற மொழிகளாகவும் உருவெடுத்துள்ளது என்பதை உணரலாம்.

மேலும் அவர், மலையாளம் மூலத் திராவிட மொழியினின்று பிரிந்து தனக்கே உரித்தான உருவம் பெற்றுவிட்ட பிறகு முதலில் செந்தமிழின் ஆதிக்கத்திற்கும் பிறகு சமற்கிருதத்தின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு வளர்ந்திருக்கிறது என இந்நூலில் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மூலத் திராவிட மொழி என்னும் தவறான எடுகோளும் சமற்கிருதக் கலப்பு ஏற்பட்டது போன்று மலையாள மொழியில் நிலைத்த தமிழ்ச் சொற்களை ஆதிக்கம் என்று தவறாகக் கருதியமையும் மொழி வரலாற்றை நடுநிலையுடன் நோக்கும் வாய்ப்பைப் பறித்து விட்டது எனலாம்.

மேலும் அவர் இறைவழிபாட்டுப் பாடல்கள், பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகாத தொன்மையான வடிவத்தைக் காட்டுவன வென்றும் பல நூற்றாண்டுகட்கு முன்னர் நிலவியிருந்த நடைக்கு எடுத்துக் காட்டாக உள்ளவை என்றும் பழமொழிகளும் விடுகதைகளும் அன்றைய பேச்சு வழக்கைக் காட்டுவன என்றும் குறிப்பிட்டுப் பின்வரும் பாடலையும் பழமொழி, விடுகதைகளையும் எடுத்துக் காட்டுகிறார். (பக்கம் 12-13)

பாடல்:

 

                கத்தி பிடிச்சு கடுத்தில சூல முயர்த்தி

                கரத்தில் மழுப்பட யேந்தி

                நிண குடர் மால கழுத்திலணிஞ்ஞú

                கறுத்த நிறத்தில் உருட்டிய கண்ணும்

 

இப் பாடலில் பிடித்து-பிடிச்சு; கழுத்து-கடுத்து; மழுப்படை-மழுப்பட;குடல்-குடர்; மாலை-மால; அணிந்து-அணிஞ்ஞú எனச் சில சொற்கள் இலக்கணப் போலி அடிப்படையிலும் பேச்சு வழக்கிலும் அமைந்துள்ளன. எஞ்சிய யாவும் தனித் தமிழ்ச் சொற்களே!

 

பழமொழிகள்:

1.) கடய்க்கல் நனச்சாலே தலய்க்கல் பொடிக்கூ.

வேரை நனைத்தால்தான் நுனியில் முளைக்கும் என்னும் இப்பழமொழியில் நனைத்தாலே என்பது நனைச்சாலே எனவும் பொடிக்கும் என்பது பொடிக்கூ எனவும் வந்துள்ளன. (பொடித்தல் என்றால் முளைத்தல் எனப் பொருள்.) கடைக்கல், தலைக்கல் என்பனவற்றைக் கடய்க்கல், தலய்க்கல் என எழுதுவது பழந்தமிழ்ப் பழக்கமே.

2.) அக்கர நில்க்கும்போள் இக்கர பச்ச.

அக்கரை, இக்கரை என்பன அக்கர, இக்கர எனவும் நிற்கும்போழ்து என்பது நிற்கும் போள் எனவும் பச்சை என்பது பச்ச எனவும் வந்துள்ளன.

3.) உரிநெல் ஊரான் போயிட்டு பற நெல் பந்நி திந்நு.

போய்விட்டு, பறை, பன்றி, தின்று என்பன முறையே பேச்சு வழக்கில் போயிட்டு,பற, பந்நி, திந்நு என வந்துள்ளன. உருவப் போதல்-உருவான் போதல்-ஊரான்போதல் என்னும் பொருளில் கையாளுவதாக எண்ணுகின்றனர். ஊராளப் போதல் என்பது ஊரான் போதல் என மருவி வந்துள்ளது.

4.) அரி நாழிய்க்கும் அடுப்பு மூந்நு வேணம்

அரிசி, நாழிக்கும், மூன்று, வேண்டும் என்பன முறையே அரி,நாழிய்க்கு, மூந்நு, வேணம் எனக் கடைக்குறையாகவும் பேச்சு வழக்காகவும் இடம் பெற்றுள்ளன.

5.) அரசன் சத்தால் படயில்ல.

செத்தால், படை என்பன முறையே சத்தால், பட எனப் பேச்சு வழக்காக வந்துள்ளன.

விடுகதைகள்:

 

1.)ஆன கேறா மல ஆடு கேறா மல ஆயிரம் காந்தாரி பூத்திறங்ஙி.

ஆனை(யானை), மலை, இறங்கி என்பன முறையே ஆன, மல, இறங்ஙி எனப் பேச்சு வழக்கில் வந்துள்ளன. ஏறா(த) என்பது (÷உறறா என்றாகிப் பின்) கேறா என வந்துள்ளது.(விலங்கேறா மலை என்பதுதான் இவ்வாறு சுருங்கிப் பொதுப் பொருளில் வந்ததோ?) காந்தும்காய் (மிளகாய்) காந்தாரி எனப்பெற்றுள்ளது.

2.) பின்னாலெ வந்தவன் முன்னாலெ போயி

   பின்னாலே, முன்னாலே, போய்விட்டான் என்பன முறையே பின்னாலெ, முன்னாலெ, போயி எனப் பேச்சு வழக்கில் வந்துள்ளன.

3.) காட்டில் கிடந்நவன் கூட்டாயி வந்நு

கிடந்தவன், கூட்டாக, வந்தான் என்பவை முறையே கிடந்நவன், கூட்டாயி, வந்நு என வந்துள்ளன.

இப்பழமொழிகளும் விடுகதைகளும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழ்ப் பழமொழிகளே.

இவை அனைத்தும் தமிழே மலையாளமாக வரி வடிவில் மாறியுள்ளது என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். ஆனால், நூலாசிரியர் “சொற்களைப் பற்றிய வரையில் தமிழ்க்கலப்போ சமற்கிருதக் கலப்போ இல்லாதவை, அன்றாட வழக்கிலிருந்த பேச்சு நடையாது என்பதைப் புரிந்து கொள்ள அவை உதவுகின்றன, நடையில் தமிழ் சமற்கிருதம் ஆகியவற்றின் சொற்சேர்க்கையோ இலக்கண விதிகளின் சார்போ இல்லையென்பது கவனத்திற்குரியது, “ என்றெல்லாம் இவற்றைப் பற்றித் தவறாக மதிப்பிடுகிறார்.

சேர நாட்டின் செந்தமிழ்ப்படைப்புகளைக் குறிப்பிட்டு விட்டு,மேலே சுருக்கமாகத் தந்துள்ள தகவல்களிலிருந்து “கேரள நாட்டின் கவிதை ஒளி செந்தமிழ் வாயிலாகத்தான் ஒளிர்வதாயிற்று என்பது விளங்கும்; இது மட்டுமன்றி ஆட்சி தொடர்பான விவகாரங்களும் அரசர்களின் ஆணைகளும் எழுதப்படும் அளவிற்குச் செந்தமிழ் முக்கியத்துவம் பெற்றிருந்ததால் கேரள மொழிக்கு உரிய வளர்ச்சி யுண்டாகவில்லை” என மலையாளம் தோன்றாத காலத்தில் இருந்தே மலையாளம் இருந்தது போன்று எழுதுகிறார்.

 

லீலா திலகம் என்னும் மலையாள நூல், பாட்டு இலக்கணம் பற்றிக் கூறுகையில், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துகளே கையாளப்பட வேண்டும்….சமற்கிருதப் பாவினங்களல்லாத பாவினங்களில் இயற்றப் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுவதில் இருந்தே மலையாளம் எனத் தனி எழுத்து வடிவத்தை உருவாக்கிய பின்பும் தமிழாகத்தான் அந்த மொழிவிளங்கியுள்ளது என்பது நன்கு புரியும்.

ஆனால், சமற்கிருதம் நீக்கப்பட்ட மலையாளம் என்பது தமிழ்மொழியே என்பதைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டாலும் ஒத்துக் கொள்ள முன்வராமலும் தனி மலையாளம் எனக் கதைக்கின்றனர்.

(தொடரும்)

1 Literature in Indian Language, Page. 104. 2 Literature in Indian Languages, Page. 105

– இலக்குவனார் திருவள்ளுவன்