திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!
தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும்.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504)
எனத் தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.
எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?
1967 முதல் என்று காலவரையைக்கூறுகிறார்களே, அப்படியானால் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியையும் வைகோ குறைகூறுகிறாரா? இவர் தி.மு.க.வில் இருந்த காலத்தையும் குறை கூறுகிறாரா? அப்படியானால் அப்பொழுதே ஏன் எதிர்க்க வில்லை என வினா எழாதா? பொதுவுடைமைக் கட்சிகள் இக்கட்சிகளுடன்தானே கூட்டணி வைத்திருந்தனர். அப்படியானால், தோழமைக் கட்சிகளாக இருக்கும் பொழுது ஏன் தட்டிக் கேட்கவில்லை?
தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்ட ஊழலின் தோற்றுவாயான பேராயக்கட்சியாகன காங்கிரசும், தமிழகத்தில் வேரூன்ற இயலாமல் தவிக்கும் மதவெறி பிடித்த பா.ச.க.வும் அவ்வப்பொழுது் இக்கட்சிகளின்மேல் ஏறி உலா வந்ததை மறந்துவிட்டு நல்லவர் வேடமிட்டு இவ்வாறு கூறுவதுதான் வேடிக்கை. பேராயக்கட்சியான காங்கிரசு இப்பொழுது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் தி.மு.க.வைத் தாக்காமல் இருக்கலாம். ஆனால், கூட்டணி இல்லாதபொழுது இப்படித்தான் பேசி வந்தது. இப்பொழுது ஒருவேளை கூட்டணி முறிவு ஏற்பட்டால் இப்படித்தான் பேசும். ஆனால் தமிழினப் பகை உணர்வில் ஊறியுள்ள இவ்விருகட்சிகளுக்கும் தமிழகக் கட்சிகளைப்பற்றிக் கூறுவதற்கு எவ்வுரிமையும் இல்லை.
நாமும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மீண்டும் அரியணை ஏற்கும் வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டா என்றுதான் கூறுகின்றோம்.அதே நேரம், இவ்விரு கட்சிகளும் ஆற்றிய மறுமலர்ச்சிப் பணிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்கு ஆற்றிய பிற பணிகளையும் மதிக்கிறோம். இருப்பினும் எதிர்ப்பது எதற்கு எனலாம்.
அதிமுக. தலைவியும் இன்றைய முதல்வருமான புரட்சித்தலைவி செயலலிதா அடிமைத்தனத்தை வளர்க்கும் பண்பாடற்ற செயலினை ஊக்கப்படுத்திவருகிறார். தனக்கு இணையாகக் கருத வேண்டிய அமைச்சர் பெருமக்களையே தன்னைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் நெடுஞ்சாண்கிடையாக விழச் செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறார். எல்லார்க்கும் பணிதல் என்பது நன்றே. ஆனால், இது பணிவன்று; தலைகுனிவு; வரலாறு பழிக்கும் இழிவான செயல்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் வரையறுக்கும் செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்பு (திருக்குறள் 389) இருப்பின், எண்ணிலடங்கா அவதூறு வழக்குகள் பெருகுமா?
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா விடும்பை தரும். (திருக்குறள் 510)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வகுக்கும் தமிழ்நெறியை உணராமல், துணிவு என்னும் போலிப்பெயரில் தடாலடி மாற்றங்களை நிகழ்த்துவாரா? ஆராய்ந்து பொறுப்பை வழங்க வேண்டும். வழங்கியபின் அதற்குரியவராக ஆக்கு வேண்டும் என்னும் தமிழ்நெறியை அறியாத செயல் பெருமைக்குரியதல்லவே! இத்தகைய செயல்கள் கட்சியில் வேண்டுமானால், வீரமங்கை என்னும் பெயரைப் பெற்றுத்தரலாம்! ஆனால், ஆய்ந்தாய்ந்து கொள்ளாக் கேண்மையாகத்தான் மக்கள் கருதுவார்கள். நிலையிலாப்பண்புடையாரிடம் நிலையான ஆட்சியை வழங்குவது அழகல்லவே!
தமிழ் ஈழம்பற்றி ஆதரவாளர்கள்போல் பேசும் இரு கட்சித்தலைவர்களுமே ஒரு தலைமுறைக்கும் மேலாக ஈழத்தமிழர்களைத் தமிழ்நாட்டில் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து உலாவரத் தடைசெய்து, கொத்தடிமைளினும் இழிவாக நடத்தப்படும் கீழ்நிலைக்குப் பொறுப்பானவர்கள். மனித நேய அடிப்படையில் இதற்குத் தண்டனையாகவாவது இவர்களுக்கு ஆட்சி வாய்ப்பு மறுக்கப்படவேண்டும். இதற்கு முன்பும் மாறி மாறி மறுக்கப்பட்டனவே என்றால், “என்னை விட்டால் நீ, உன்னை விட்டால் நான்” என இருவரும் எண்ணி வந்தமையால், இது குறித்த மறுசிந்தனைக்கு ஆட்படவில்லை. இரவு பகல் பாராமல் பணியாற்றும் காவல்துறையினரின் நற்பணிகள் வெளியே வரா வண்ணம் காவல் துறை அடக்குமுறையால் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர், போராடும் நாட்டுத்தமிழர்களும் உள்ளாகும் இன்னல்கள் சொல்லிமாளா.
ஊழலைக்காரணம்காட்டியும் இரு கட்சிகளையும் எதிர்க்கின்றனர். இதற்கான தகுதி எக்கட்சிக்கும் இல்லை. மக்கள் ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு வாய்ப்பளிப்பவர்களாக இருப்பதால் இது குறித்துக் கவலைப்படவில்லை. ஊழலற்ற ஆட்சிதான் நமக்குத் தேவை. என்றாலும் இந்தியாவெங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அவ்வாறிருக்க இவ்விரு கட்சிகளைமட்டும் குறை கூறிப் பயனில்லை. ஊழல் வழக்குகளில் இறுதித்தண்டனை வழங்கப்படாச் சூழலில் அவ்வழக்குகளின் அடிப்படையிலும் ஒன்றும் கூற இயலவில்லை. எனினும் அனைவர்க்கும் கட்டணமில்லாக்கல்வியை வழங்கி, அனைவருக்குமான வேலைவாய்ப்பை வழங்கி, மக்களிடையே சமநிலையை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அடுத்து அமையக்கூடிய ஆட்சியேனும் இதற்காக முயலட்டும்!
தமிழின உணர்வு பரவலுக்குக் காரணமான தி.மு.க. அதன் தலைமையின் – தலைமை என்றுகூடச் சொல்ல வேண்டா – தலைவர் கருணாநிதியின் முறையற்ற செயல்களால் காங்.கின் இனப்படுகொலை நிகழ்ந்தேறியது. ஈழத்தில் படுகொலை நடப்பதற்குக் காரணமாக இருக்கும் காங்.கின் துணையை வெட்கமின்றி நாடுகின்றார் அவர். அப்படியானால், தன் குடும்ப ஆட்சிதான், தான் ஊட்டி வளர்த்த இன உணர்வினும் மேலானது என எண்ணுகிறார். எனவேதான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறோம். அதே நேரம், கலைஞர் கருணாநிதியின் கடந்தகால தொண்டுகளைப் புறந்தள்ளிப் பொதுவாக அவரைப் பழிக்கக்கூடாது.
எனவே, குறைகூறுவோர் இன்னின்ன காரணங்களால் இக்கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடா எனத் தெளிவாகக்கூற வேண்டும். அவ்வாறு கூறுவதால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய தவறுகளைச் செய்யக்கூடாது என்ற தெளிவும் ஏற்படும்.
மாற்றுக்கட்சி அல்லது மாற்றுக்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழல் நிகழாதா என எண்ணலாம். அவ்வாறு மாற்றுஆட்சி அமையும் பொழுது கண்கொத்திப்பாம்பாக இருந்து தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் ஊழல் நடைபெறாவண்ணம் தடுப்பர்.
எனவே, தமிழ்மொழி, தமிழ்இன நலம் நாடும் நேர்மையான செம்மையான மாற்று ஆட்சி அமைவதை வரவேற்கும் அதே நேரத்தில் தேர்தல் பரப்புரையில் ஆண்ட, ஆளும் கட்சிகளைப் பொதுவாக எல்லாமே குறு்றச் செயல்தான் என்பதுபோல் பேசவோ எழுதவோ வேண்டா என்றும் வேண்டுகின்றோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 125, பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016
Leave a Reply