திராவிடப் பல்கலைக்கழகத்தின்

தமிழ்த்துறை மேம்பாடு!

உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?

 திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கல்வி பயில மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்தியாவின்  முதன்மை மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும். இவை திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. திராவிட மொழிகளில்(தமிழ்க்குடும்பமொழிகளில்) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 27 மொழிகளைப் பாதுகாத்திடவும், அந்த மொழிகளைப் பேசும் மக்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து உலகுக்கு எடுத்துக் கூறவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வ.ஐ.. சுப்பிரமணியத்தின் முயற்சியால் திராவிடப் பல்கலைக் கழகம் உருவானது.
தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் நிதியுதவியால் இந்தப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பருகூர் பகுதியில் ‘திராவிடப் பல்கலைக்கழகம்’ ஏற்படுத்த அப்போதைய தமிழக முதல்வர் செயலலிதாவை அணுகித் திட்டமிட்டார் வ.ஐ.. சுப்பிரமணியம்.

தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் ஒன்று சேரும் பகுதியாக இருப்பதால் பருகூர் பகுதியை வ.ஐ..சுப்பிரமணியம் தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக்க் கூறப்படுகிறது. பிறகு அவரது முயற்சி பல்வேறு அரசியல், நிருவாகக் காரணங்களால் தடைப்பட்டு கொண்டே வந்தது.
அதன்பிறகு 1995-ஆம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவை அணுகித் “திராவிடப் பல்கலைக்கழகம்’ அமைக்க வேண்டியதன்இ ன்றியமையாமையை எடுத்துக் கூறினார்.

உடனடியாக அதனை ஏற்றுக் கொண்ட என்.டி.ராமராவ், தனது அமைச்சரவையில் இருந்த சந்திரபாபு(நாயுடு)விடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.அமைச்சர் சந்திரபாபு(நாயுடு) தனது சொந்தத் தொகுதியான குப்பத்தில் “திராவிடப் பல்கலைக்கழகம்’அமைய ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார். அதற்காக அவர் குப்பம் நகரிலிருந்து 8  புதுக்கல். தொலைவில் உள்ள திருமலை திருப்பதி தேவத்தானத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ 1,400 காணி(ஏக்கர்) நிலத்தைப் பெற்றுத் தர முன் வந்தார்.

திராவிடப் பல்கலைக்கழகம் அமைய உள்ள இடத்துக்கு ‘சிரீ நிவாச வனம்’ என அழைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமலை திருப்பதி தேவத்தானம் நிலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு 1997-ஆம் ஆண்டு திராவிடப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதன் இணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவருக்கு நிருவாக முறையில் உதவிகள் புரிய ஆந்திர அரசில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த காசிப் பாண்டியன் இ.ஆ.ப. நிருவாக அலுவலராக நியமிக்கப்பெற்றார். திராவிடப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள முதன்மைச்சாலைக்குக் ‘காசிப் பாண்டியன் சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்டு வழக்கத்தில் உள்ளது.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிடப் பல்கலைக்கழகம் வளர்ந்து வந்தாலும், திராவிடப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இருந்து வரும் தமிழ்த்துறையின் வளர்ச்சியோ தேய்ந்து வருகிறது. 

திராவிடப் பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழி இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு பயில்வோருக்கும், மற்ற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி கட்டணம் முதலான பல்வேறு சலுகைகள், கல்வி உதவித் தொகை எனப“ பல்வேறு உதவிகளை வழங்கி ஆந்திர மாநில அரசு உயர்கல்வி பயில்வோரை ஊக்குவித்து வருகிறது.

திராவிடப் பல்கலைக்கழகத்தில் தற்போது பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 ஆயிரம் ஆகும். இந்நிலையில், தமிழ்த்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு பயில்வோர் எண்ணிக்கை முப்பது முதல் நாற்பது மாணவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ்த் துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் பயில பல்வேறு பிரிவுகள் உள்ளன. பல்கலைக்கழகம் அமைந்து உள்ள குப்பம் தொகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் குப்பம் தொகுதியை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களாகக் கிருட்டிணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்கள் உள்ளன. அண்டை மாநிலமான கருநாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல், பங்காருப்பேட்டை, மாலூர், முல்பாகல் பகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் உள்ளனர். இவர்கள் யாரும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில முன் வருவதில்லை.

 திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயிலும் ஒரு சில மாணவர்களின் கல்வி கட்டணச் சலுகைகள் பெறுவதற்குக் கூட தமிழக அரசின் தலைமைச் செயலகம் வரை சென்று போராடி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளதாகப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பணி புரிவோர் கவலை தெரிவிக்கின்றனர். இதற்குப் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதாகவும், காலத்தாழ்ச்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் வழியில் உயர்கல்வி பயில்வோருக்கு கல்விச் சலுகைகள், இரு மாநில எல்லைகளில் பயணம் செய்யும் பேருந்துகளில் கட்டணச் சலுகை, தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பழங்குடி மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்விச் சலுகைகள் தமிழக அரசு முறையாக வழங்கினால் தென்னிந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட திராவிடப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியும் தலை நிமிர்ந்து நிற்கும். இல்லையேல் திராவிடப் பல்கலைக்கழகத்தில் “மெல்ல தமிழ் இனிச் சாகும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் எனத் தமிழார்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க தேவையான கல்வி உதவித் தொகைகளையும், பேருந்து கட்டணச் சலுகைகளையும் விரைந்து வழங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி, காலத்தாழ்ச்சியைத் தவிர்க்கத் தமிழக அரசு  விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் மாணவர்கள் சேர ஊக்கப்படுத்த வேண்டும். திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

4 உதவிப் பேராசிரியர்களுக்கான சம்பளம் வழங்கக் கோரிக்கை: திராவிடப் பல்கலைக்கழகத்தில் 4 உதவிப் பேராசிரியர்கள் பணியிடம் தமிழக அரசின் உத்தரவாதத்தால் உருவாக்கப்பட்டது. அந்த 4 உதவிப் பேராசிரியர்களுக்கான சம்பளத்தைத் தமிழக அரசு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் 2 உதவிப் பேராசிரியர்கள் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே அந்த 2 பேராசிரியர்களுக்கும் தமிழக அரசு ஊதியம் வழங்கியது. பின்னர் அதற்கான நிதியை தமிழக அரசு வழங்காமல் விட்டு விட்டது. அதனால் அந்த 2 உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டபோது பல்கலைக்கழக நிருவாகம் மாற்று ஏற்பாடு மூலம் ஆந்திர அரசு நிதியிலிருந்து அவர்களுக்குச் சம்பளம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திர அரசால் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் நிதியிலிருந்து தமிழ்த் துறையில் 2 உதவிப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் திராவிடப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட 4 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்கிச் சரியான நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், தமிழார்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பிற துறை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை பெறுவது கேள்விக்குறி: தமிழகத்திலிருந்து சென்று திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை தவிர்த்து மற்ற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைப்பதில்லை. தமிழகத்திலிருந்து சென்று திராவிடப் பல்கலைக்கழகத்தில் மற்ற துறைகளில் கல்வி பயில வருபவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடையாது என ஆந்திர அரசு வழங்க மறுக்கிறது. அதே போலத் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்குச் சென்று தமிழைத் தவிர மற்ற துறைகளில் பயிலக் கல்வி உதவித் தொகை வழங்க இயலாது எனத் தமிழக அரசும் மறுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின்போது இடம் கிடைக்காதவர்கள் திராவிடப் பல்கலைக்கழகத்தில் சென்று சேருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போனால் அவர்கள் கல்வி கற்பதில் இன்னல் ஏற்படுகிறது. எனவே திராவிடப் பல்கலைக்கழகத்தில் மற்ற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் கல்வி உதவித் தொகையைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 இதுகுறித்துப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் விவேகானந்த கோபால் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ்த் துறையில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தமிழக அரசிடமிருந்து கிடைக்காமல் இருந்தது. பெருமுயற்சிக்குப் பிறகு தற்போதுதான் 2 ஆண்டுகளுக்கான கல்வி உதவித் தொகை கிடைக்கப் பெற்றோம். நடப்பாண்டுக்கான கல்வி உதவித் தொகைக்குத் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம் என்றார் அவர்.

 எம். அருண்குமார்

தினமணி 11.12.2017

http://www.dinamani.com/tamilnadu/2017/dec/11