திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிட ‘மாடல்’ ஏன்?
முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே!
தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம்.
கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளியலை விளக்குதல் / The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu” என்பதாகும். இதன் ஆசிரியர்கள் ஏ.கலையரசன், எம்.விசயபாசுகர் ஆகியோர். இந்த நூலின் தலைப்பு அடிப்படையில்தான் முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் திராவிட மாடல் என்று கூறுகின்றனராம்.. இந்த நூலும் தலைப்பும் பிடித்திருந்தது எனில் தமிழில் கூறியிருக்கலாமே!
Model – மாதிரி என்று சொல்லலாம். அல்லது இதன் அடிப்படையில் திராவிட மாதிரியம் எனலாம். மாதிரி தமிழல்ல என எண்ணித் தவிர்த்திருக்கலாம். அதற்கு வேறு தமிழ்ச்சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர ஆங்கிலச் சொல்லை யல்ல.
எனினும், மாதிரி என்பதும் தமிழ்ச்சொல்தான்.
மாதிரி1 என்பதற்குச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பின்வருமாறு விளக்கம் தருகிறது.
1. உண்மைக்கு ஒத்த நிலையில் இருப்பது; pattern, sample, specimen, model.
2. முறை; manner, way.
3. தன்மை; kind.
[மா = அளவு. மா → மாதிரி. ஒரே அளவுடையது, ஒன்று போலிருப்பது.]
எனவே, மாதிரி அல்லது மாதிரியம் என்று பயன்படுத்தலாம்.
அல்லது முன்முறை என்றாவது நன்முறை என்றாவது பயன்படுத்தலாம்.
1957 இல் மதுரைத் தெப்பக்குளம் எதிரில், கலைத்தந்தை தியாகராசர் ஒரு பள்ளியை நிறுவினார். அதன் பெயர் தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளி / THIAGARAJAR MODEL HIGH SCHOOL. (இப்பொழுது இது மேனிலைப்பள்ளியாகச் செயல்படுகிறது.) 1957 இலேயே நன்முறை என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கையில் அது நன்றாக மக்கள் உள்ளங்களில் பதிந்திருக்கையில் நாம் அச்சொல்லையே பயன்படுத்தி திராவிட நன்முறை என்று சொல்லாமே.
தமிழ் என்று சொல்லாமல் திராவிடம் என்று சொல்லலாமா என்ற வினா அடுத்து வருகிறது. அகநானூறு 31 ஆம் பாடலில் மாமூலனார்,
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தே எத்த பன்மலை (அடி 14-15)
எனக் குறிப்பிடுகிறார். இதனை விளக்கும் பொழுது தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்,
“இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காணப்படுகின்றதால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றிய “திராவிட” என்ற சொல்லே “தமிழ்” என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப் பொய் என்று அறியலாம்” என விளக்குகிறார். ‘பழந்தமிழ்’ நூலில் தமிழ்க்குடும்ப மொழி என்றுதான் குறிக்க வேண்டும் திராவிட மொழி யல்ல என்றும் தெளிவு படுத்துகிறார். காலந்தோறும் பல்வேறு இடங்களில் ‘திராவிடம்’ என்பது தமிழைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, தமிழ் எனக் குறிப்பதே சரி. ஆனால், நாம் அரசியல் குறியீடாகத் திராவிடம் என்பதைப் பயன்படுத்துகிறோம். பகுத்தறிவு, பெண்ணுரிமை, சீர்திருத்தம், சாதி ஒழிப்பு முதலான மறுமலர்ச்சிப் பணிகளுக்குக் குறியீடாகத் திராவிடம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்த, இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளையும் பணிகளையும் மட்டுமே குறிப்பதால் திராவிடம் என்ற சொல்லைக் கையாளுகின்றனர். தமிழின் சிறப்பைக் கூறுவதானால் பழந்தமிழ் என்பதே சரியாக இருக்கும். ஆனால், கடந்த நூற்றாண்டு தொடக்கமான அரசியலைக் கூறுவதானால் திராவிடம் என்பது சரிதான். இங்கே தமிழ் என்றால் 1967 வரை ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியாகிய காங்கிரசும் அடங்கி விடும். அரசியல் காரணங்களால் திராவிடம் என்பதை ஏற்கிறோம் என்பதற்காக ‘மாடல்’ என்னும் ஆங்கிலச் சொல்லை ஏற்க வேண்டுமா?
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்ச்சொற்கள் பயன்பாடு குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்னர்த் தெரிவித்த கருத்தே தாய்ச்சொற்கள் பயன்பாட்டிற்கான இலக்கணமாகும். அவர் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார்: “ஆங்கிலச் சொற்களை அறிமுகப்படுத்தி விட்டுப் பின்னர்த் தமிழ்ச்சொற்களை விளக்கிக் கொண்டிருக்காதீர்கள். எடுத்துக்காட்டாக fan என்று சொல்லி விட்டுப் பின்னர் விசிறி என்று சொல்லாதீர்கள். விசிறி என்று சொல்லிக் கொடுத்துவிட்டு fan என்பதை அறிமுகப்படுத்துங்கள்.” இவ்வாறு சில எடுத்துக்காட்டுகளுடன் கலைஞர் பேசியிருப்பார்.
நாம் குழந்தைகளுக்கு உறவுப்பெயர்கள், உணவுப் பெயர்கள், உடலுறுப்புப்பெயர்கள், உயிரினங்களின் பெயர்கள், எண்ணிக்கை முதலான அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் சொல்லித் தருகிறோம். பின்னர் அவற்றைத் தமிழில் சொல்லித் தரும்பொழுது குழந்தைகள் மனத்தில் ஆங்கிலச் சொற்களே மேலோங்கி இருக்கின்றன. எனவேதான், தமிழை அறிமுகப்படுத்துங்கள் எனக் கலைஞர் அறிவுறுத்தியது எக்காலமும் நாம் பின்பற்ற வேண்டிய பொன்மொழியாகும்.
கலைஞரின் வழியினும் சிறப்பான வழியில் நடைபோடும் அவர் மைந்தனின் ஆட்சியில் அவரது பொன்மொழியைப் புறக்கணிக்கலாமா? எனவே, முதல்வர் மு.க.தாலின் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். திராவிடமாடல் என்பதில் உள்ள ‘மாடல்’ என்னும் சொல்லைத் தூக்கி எறியுங்கள். பிறருக்கு முன்மாதிரியாக இருப்பதைக் குறிப்பிட எண்ணினால் திராவிட முன்முறை எனக் கூறுங்கள். எப்பொழுதும் நிலையான நல்லாட்சி என்று தெரிவிக்க விரும்பினால் திராவிட நன்முறை எனக் கூறுங்கள்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று(திருக்குறள் 100)
என்று வழிகாட்டுகிறார் அல்லவா தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
அவர் வழி யாட்சியில் தமிழ்க்கனியிருக்க அயற்காயைக் கவரலாமா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல-இதழுரை
Leave a Reply