திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2

முன்னுரை

திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

திருவள்ளுவர் வழித்தோன்றல்கள்

திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே திருவள்ளுவன் என்பதுதான். தம் பெயரைக் காப்பாற்றும் வண்ணம் திருக்குறள் வழியில் வாழ்ந்து வரும் நற்பெருமகனாராகத் திகழ்கிறார். தமிழ்க்காப்புப் போராளி சி.இலக்குவனார் குறித்து வையகம் நன்கறியும். தமிழ்க்காப்பிற்காக இரு முறை சிறை சென்றவர்; திருவள்ளுவருக்குச் சிறப்பான விழாக்கள் எடுத்தவர்; திருக்குறள் வகுப்புகள் நடத்தி மக்களைத் திருவள்ளுவர் வழியில் வாழச் செய்தவர்; குறள்நெறி என்னும் திங்களிதழ், திங்களிருமுறை தமிழ் இதழ், திங்கள் இருமுறை ஆங்கில இதழ்,  தமிழ் நாளிதழ் நடத்தி மக்களிடையே குறள்நெறியைக் கொண்டு சென்றவர். அவருடைய மக்களுள் ஒருவரான இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறள் சான்றோராக வாழ்வதில் வியப்பு ஏதும்  இல்லை அல்லவா?

திருக்குறள் ஈடுபாட்டின் தொடக்கம்

இவர் 6-ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் ஆண்டுதோறும் பள்ளியிலும் பிற அமைப்புகளிலும் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றுள்ளார். இவ்வாறு முதன்முறையாக ஆறாம் வகுப்பில் 5 அதிகாரங்களைப் படித்து அவற்றில் ஒன்றை ஒப்பிக்க வேண்டும் என்றபொழுது ஏற்பட்ட ஆர்வமே இவரைத் திருக்குறளில் ஈடுபடச் செய்துள்ளது. முதல் போட்டியிலேயே முதல் பரிசு பெற்றதும் திருக்குறளை எப்பொழுதும் படிக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, போட்டி நோக்கத்தில் இல்லாமலே திருக்குறள்களைப் படித்தார். உயர்நிலைப் பள்ளி முடிக்கும் முன்னரே அறத்துப்பால், பொருட்பால் முழுமையும் மனப்பாடமாக அறிந்திருந்தார்.

 குறள்நெறியைப் பின்பற்றும் கடப்பாடு

இவர் 8-ஆம் வகுப்புப் படிக்கும் பொழுது ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தை ஒப்பித்துப் பரிசு பெற்றார். பரிசு பெற்றதால் படித்ததன்படி ஒழுக வேண்டும் என்று புலால் உண்பதைக் கைவிட்டார். இளம் மாணவப் பருவத்திலேயே திருக்குறள் படி வாழ்தல் வேண்டும் என்ற உணர்வுடன் இவர் இருந்துள்ளார் எனில் எத்தகைய பெருஞ்சிறப்பு அது. இப்படி ஒருவரைக் காணுதல் அரிதல்லவா? இத்தகையவரைப் பற்றி நான் பேசுகிறேன் என்றால் எனக்கும் சிறப்புதானே!

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டில் புதிய செயற்பாடுகள்

திருவள்ளுரின் 2000 ஆம் ஆண்டுப் பிறப்புதொடங்குவதற்கு முன்னர் இவரின் தந்தையார் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் 1968 ஆம் ஆண்டு இறுதியில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று மடல் எழுதும் முன்னர்த் திருக்குறளை எழுதித் தொடங்க வேண்டும் என்பது. அது முதல் அனைத்து மடல்களிலும் திருக்குறளை எழுதித் தொடங்கினார். இவரது மடல்களைப் படிக்கும் நண்பர்களும் உறவினர்களும் மறுமடல் எழுதும் பொழுது இவரைப் பின்பற்றித் திருக்குறளை எழுதினர். இவ்வாறு பிறருக்குத் திருக்குறள் ஆர்வத்தை உண்டாக்கினார்.

இவ்வாறு மாணவப்பருவத்திலேயே திருக்குறளைப் பின்பற்றவும் பரப்புவும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

அது முதற்கொண்டு தம்முடைய எல்லாப் பேச்சுகளிலும் எல்லாக் கட்டுரைகளிலும் ஏற்ற திருக்குறளைப் பயன்படுத்தித் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்; திருக்குறள் கருத்தரங்கங்களில் கட்டுரை படித்துத் திருக்குறளின் சிறப்புகளைப் பரப்பி வருகிறார்.

மாணவப்பருவத்திலேயே தமிழ் அமைப்புகள் வழித் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தினார். 1973 இல் தந்தையார் இறந்தபின் இறுதிக்கடன் நாளில்  திருக்குறள் ஒப்பித்தல், திருக்குறள்பற்றிய பேச்சுப் போட்டியை நடத்தினார். அது முதற்கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, திருக்குறள் பயிற்சி, திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் வழிச் சிறார் முதல் பெரியோர் வரை திருக்குறளில் ஈடுபாடு காட்டவும் திருவள்ளுவரைப் போற்றவும் வழிகாட்டுகிறார்.

பணிகள் வாயிலாகத் திருக்குறள் வழியில் பிறரை வாழச்செய்தவர்

  எப்பொழுதுமே கள்உண்ணாமை, சூது ஒழித்தல், பிறன்மனை விழையாமை முதலிய குறள்நெறிப்படி வாழும் குறள்நெறியாளர் இவர். பிறரையும் இவ்வழிகளைப் பின்பற்றி வாழச்செய்த பெருமகனார் இவர். இவர் சிறைத்துறையில் நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றும் பொழுது குற்றவாளிகளையும் இளங்குற்றவாளிகளையும் சென்றவிடங்களில் எல்லாம் மனத்தை அலைய விடாமல் நன்றின்பால் திருப்பிப் பொய்யாமை, கள்ளாமை, கள் உண்ணாமை, விலைக்கு உடல் விற்காமை என ஒழுக்க நெறிகளில் வாழச்செய்து சிறந்த சீர்திருத்தப்பணிகளை ஆ்ற்றியுள்ளார்.

கலைகள் வாயிலாகத் திருக்குறள் பரப்பும் திருக்குறள் கலைஞர்

திருக்குறள் முத்தமிழ் விழா நடத்தி அதில் இவரே, திருக்குறட் பாக்களுக்குக் காவடி மெட்டு அமைத்தும் பிற நாட்டுப்புற மெட்டு அமைத்தும்  காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம் முதலான நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திருக்குறளை நாட்டுப்புறக் கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்றவர் இவர் ஒருவரே! ‘திருக்குறள் இசையமுது’ முதலான பிறரது திருக்குறள் இசைப் பாடல்களையும் மேடையேற்றம் செய்து கலைகள் வாயிலாகத் திருக்குறளை மக்களிடம் பரப்பியுள்ளார்.

 குறட்பாக்களுக்குக் காலத்திற்கேற்ற விளக்கம் தரும் திருக்குறள் ஆய்வறிஞர்

இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறளுக்கு முழுமையான உரை நூல் எழுதினார் எனில் அது மிகச் சிறப்பாக அமையும். ஏனெனில் அவர் கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் திருக்குறளுக்குத் தரும் விளக்கங்கள் வாழ்வியலுக்கு ஏற்ற மக்கள் உரையாக விளங்குகின்றன. சான்றுக்குச் சில பார்ப்போம்.

  1. பற்றிலர் என மொழிப்பற்றிலரைக் குறித்தல்

 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி. (திருக்குறள் 506)

என்னும் குறளுக்குப் பெரும்பாலோர் சுற்றம் அற்றவர் என்றே குறிக்கின்றனர். மணக்குடவர்  ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க என்கிறார். பரிப்பெருமாள், ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க என்கிறார். பரிதி,  பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை நம்பாதே என்கிறார். இவர் மொழிப்பற்று அற்றாரை நம்பக் கூடாது எனப் பொருத்தமான இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருகிறார்.

 

  1. எண் எழுத்து என்பதற்கு மொழியைக் காக்க வேண்டும் என்ற விளக்கம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு. (திருக்குறள் 392)

இதற்குப் பெரும்பாலோர் எண்ணும் எழுத்துமாகிய இரு கலைகள் என்றும் இரு பொருள்கள் என்றும் விளக்கம் தந்துள்ளனர்  புத்துரை எழுதுபவர்கள் எண் என அறிவியலையும் எழுத்து எனக் கலையியலையும் கூறுவதாகக் கூறுவர்.

ஆனால் இலக்குவனார் திருவள்ளுவன் காலத்திற்கேற்பப் பொருத்தமான விளக்கம் தருகிறார்.

எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் அவ்வப்பொழுது சிலர் எழுத்தைச் சிதைத்து வருகின்றனர்; எண்ணையும் அழியச் செய்கின்றனர். எழுத்து அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும். எனவே, மொழியும் இனமும் அழியாமல் இருப்பதற்காக மொழியின் பகுதிகளாகிய எண்களையும் எழுத்துகளையும் அஃதாவது நாம் தமிழ் எண்களையும் எழுத்துக்களையும் கண்களெனப் போற்றிக் காக்கத் திருவள்ளுவர் வலியுறுத்துவதாக விளக்கம் தருகிறார்.

 

  1. நெருநல் என்பதற்கு நேற்றிருந்த நிலைமையைக் கூறுதல்

 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு. (திருக்குறள் 336)

இத் திருக்குறளுக்கு யாக்கை நிலையாமையாக, நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இறந்துவிட்டான் என்பர் பெரும்பாலோர்.

இலக்குவனார் திருவள்ளுவன் காலத்திற்கேற்ற விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரு பொறுப்பில்/பதவியில்/செல்வநிலையில்/செல்வாக்குடன் இருந்தவன் இன்று அதனை இழந்து நிற்கும் பதவி, செல்வாக்கு, செல்வம் நிலையாமையக் குறிப்பிடுகிறார்.  இது மிகவும் எக்காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது.

  1. மொழி யறிவினையும் மொழி வளர்ப்பையும் குறித்தல்

இவரது குறள்வழிச் சிந்தளை வளத்திற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு  அகரமுதல இதழின் (மார்கழி 16 – மார்கழி 22, 2048) தலையங்கம் ஒன்றில் பின்வருமாறு குறித்துள்ளார்:

நாட்டுமக்கள்மீது அன்பும் நாட்டுமொழி அறிவும் நாட்டையும் மொழியையும் முன்னேற்றும் திறமையும் பதவிகள் மீது பேராசையின்மையும் உடையவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 513)

இன்றைக்கு நமக்குத் தேவையானவற்றைத் திருக்குறள் வழி விளக்குவதில் இவர் வல்லவர் என்பதற்கு இவையே சான்று.

(தொடரும்)

–  பேரா. வெ.அரங்கராசன்

முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,

கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,

கோவிற்பட்டி 628 502