திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா!

தமிழகத்தில் காலி யாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு  நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19 அன்று  இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உரிய தேர்தல் பணிகளும் தொடங்கி விட்டன. இவற்றுள் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல் தேவையில்லை. முந்தைய இடைத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற மரு.சரவணனையே வென்றவராக அறிவிக்க வேண்டும்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்  தொகுதியில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எசு. எம். சீனிவேல் தேர்தல் பரப்புரையின் பொழுதே நலக்குறைவுடன்தான் மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும் அதிமுகவின் செல்வாக்கான தொகுதி என்பதால் எளிதில் வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 அன்று மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. இப்பொழுதும் அதிமுக வேட்பாளர் ஏ. கே. போசு நலக்குறைவுடன்தான் இருந்தார். இருப்பினும் 55.65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

இரண்டாம் இடம் பெற்றிருந்த திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், இரட்டை இலை சின்னத்திற்கான ஏற்பினை மருத்துவமனையில் நினைவின்றி இருந்த செயலலிதாவிடம் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் கை விரல் பதிவு பெற்று வாங்கி வந்ததாகக் கூறுவதால் செல்லாது என்று வழக்கு தொடுத்தார்.

 ஏ.கே.போசின் வெற்றி செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச்சு 22 அன்று  தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், ஏ.கே.போசு வெற்றி செல்லாது என்பதால் இரண்டாவதாக வந்த தன்னைச் சட்ட மன்ற உறுப்பினராக  அறிவிக்க வேண்டும் என்கிற சரவணனின் கோரிக்கையை மறுத்தார் நீதிபதி.

நாம் இதனை இரு கோணங்களில் பார்க்க வேண்டும்.

 தி.ப.கு. தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்லது பலர் இது குறித்துக் கட்சியில் முறையிடுவதே பொருத்தமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வர இருந்த வாய்ப்பு மோசடியாக ஏ.கே.போசிற்கு வழங்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்பட்டதாக அவர்கள் கோரலாம். ஆனால், அவ்வாறு யாரும் முறையிடவில்லை. தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்துள்ளனர். அச்சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.கே. போசு வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் உரிய ஏற்பு மடல் ‘அ’, ‘ஆ’, படிவங்களில் அளிக்கப்பட்டு ஏற்கப் பெற்ற பின், வேட்பாளரின் சின்னம் இரட்டை  இலை என்பதில் மாற்றமில்லை. எனவே, வெற்றி குறித்து ஆராயத் தேவையில்லை.

அதே நேரம், இவ்வாறு முறைகேடாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதாக மடல் கொடுத்ததில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளதோ அத்தனை பேர் மீதும் குற்ற வழக்கு தொடுத்து உசாவி தண்டிப்பதுதான் முறை.  ஆனால், இது குறித்து உயர்நீதி மன்றமும் தக்க கட்டளை பிறப்பித்ததாகத் தெரியவில்லை. காவல் துறையோ,தேர்தல் ஆணையமோ நடவடிக்கை எடுதததாகவும் தெரியவில்லை.

தீர்ப்பு வரும் முன்னரே வெற்றி பெற்ற ஏ.கே.போசு மரணமடைந்தது தனிச் செய்தி.

உணர்வற்றவரிடம் ஒப்பம் பெற்றதாகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் செல்லாது என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. பொதுவாகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் தேர்வு முடிவு தவறு என்றால் அடுத்த நிலையில் உள்ளவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.  இந்த நடைமுறைக்கு மாற்றாக அவ்வாறு தீர்ப்பு உரைப்பதை அல்லது அறிவிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்காதது தவறாகப் படுகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

தி.மு.க. தரப்பில் உரிய மறு ஆய்வு முறையீட்டை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டாலும் தானாக முன்வந்து வழக்குக் கேட்பிற்கு எடுக்கும் உயர் நீதி மன்றம், தேர்தலில் வெற்றி பெற்றவராகத் தேர்தல்  ஆணையத்தால் அறிவிக்கப் பெற்ற ஏ.கே.போசின் தேர்வு செல்லாது என்பதால் அடுத்த இடத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர் மரு.சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

மேலும், இதனைத் தி.மு.க.வின் சிக்கல் எனப் பார்க்கக் கூடாது. மக்களாட்சியில் நம்பிக்கை உள்ள அனைவருமே, வழக்கமான நடைமுறைகளை ஆள்வோர்க்கு ஏற்ப மாற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி இரண்டாம் நிலை வாக்கு பெற்ற மரு.சரவணனை வெற்றி பெற்றதாக அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.

தீர்ப்பினை விருப்பம்போல் மாற்றி அமைக்கும் போக்கு இருப்பதாக மக்கள் கவலைப்படுவதைப் போக்க வேண்டும்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் வெற்றி பெற்றவரின் தேர்தல் செல்லாது என்னும் பொழுது அடுத்த நிலையில் உள்ளவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பதுமே நீதி உயிரோட்டத்துடன் இருப்பதற்கு அடையாளமாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல