(தந்தை பெரியார் சிந்தனைகள் 17 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 18

2 . திருமணம்

வழக்கமாக நடைபெறுவது:

(1) திருமணம் என்பது-வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றால் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து உலக வாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒப்பந்தம் (contract) என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால் ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது.

(2) ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் – உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் ‘வாழ்க்கைத் துணை’ என்பதாகும். வாழ்க்கை என்பது சுதந்திர இன்பவாழ்க்கையே ஒழியக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல.

(3) திருமணமானவள் என்பதைக் குறிப்பதாகப் பெண்ணுக்குத் தாலி கட்டப் பெறுகின்றது. திருமணம் ஆனவன் என்பதைச் சுட்ட ஆணுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. இது தவறு. ஆண்பெண் இருவரும் சமம் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலிகட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமல் இருக்க வேண்டும். மோதிரம் மாற்றிக் கொள்ளும் முறையை மேற்கொள்ளலாம்.

(4) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை ஆண் அடக்கியாளும் மூர்க்கத்தனத்தின் சின்னம். பெண்களுக்கு அறிவு வந்தா லொழியத் தாலியை நீக்க முடியாது.

(5) சீர்த்திருத்தத் திருமணங்களிலும் 100க்கு 90 திருமணங்களில் இந்த அடிமைச் சின்னமாகிய தாலி கட்டும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்நிலைமாற வேண்டும் என்கிறார் பெரியார்.

(6) கல்யாணம் என்பதற்கு ‘வாழ்த்து என்பது பொருள். அது வாழ்க்கைத்துணை என்ற பொருளில் இல்லை. ஏதோ கறுப்பு ஆட்டை ‘வெள்ளாடு என்பது போலவும், கொடிய நஞ்சுள்ள நாகத்தை ‘நல்ல பாம்பு என்பது போலவும் இப்படித் தப்பான சொற்களை அமைத்துக் கலியாணம், திருமணம் என்றெல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனால் பார்ப்பனர் மட்டும் சரியான சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவை ‘தாராமுகூர்த்தம் ‘கன்னிகாதானம் என்பவை. ‘தானம்’ என்பது வடமொழிச்சொல். ‘தாராமுகூர்த்தம்’ என்பதிலும் இரண்டு சொற்களும் வடமொழிச் சொற்களே. தமிழர்க்கான காரியங்களில் வடமொழிச்சொல்லாக இருந்தால் அஃதொன்றினாலேயே அந்த முறை நமக்கில்லை என்று தெரிந்துவிடும். ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்து ஒருவனுக்குத் தாரைவார்ப்பது-தானம் தருவது என்பது கருத்து. நம் பழக்கப்படி ஆணும் பெண்ணும் சமஉரிமை கொண்டு இருத்தல் வாழ்க்கைத்துணை. மற்றொருவர் இது தமிழ்ச் சொல். பார்ப்பனன் வந்த பிறகுதான் இதை யெல்லாம் அழித்து விட்டுப் பெண்ணை அடிமையாக ஆக்கி விட்டான்.

(7) ஆண்-பெண் சம்பந்தத்திற்குத் தமிழில் இரண்டு முறைகள் சொல்வார்கள். ஒன்று கற்பு; மற்றொன்று காதல். கற்பிற்கு என்ன பொருள் சொன்னான் என்றால் பெற்றோர்கள் பார்த்து ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைப்பதாகும். காதல் என்பது ஆணும் பெண்ணும் தாங்களே சம்மதித்துக் கூடிவாழ்வதாகும். இதுதான் தமிழனுக்கு இழிந்த முறையாகும். இடையில் வரப் பெற்றதுதான் திருமணம் என்பதெல்லாமாகும்.

(அ) காதல் மணம்: இதுபற்றித் தந்தை பெரியாரின் சிந்தனைகள்:

(1) சுதந்திரமான காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு நாடோ ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும். நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத்தன்மையும் அடிமைத்தன்மையும்தான் பெருகும்.

(2) பழங்காலக் காதல் மணம் இன்று மிருகப் பிராய மணம் என்றே சொல்லவேண்டும். காதல் என்பது மிகமிகச் சாதாரண அற்பச் செய்தி. காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு காதல் பசிதீர்ந்ததும் சலிப்படைந்து அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்பதென்றால் அஃது இன்பவாழ்க்கையாக இருக்க முடியாது.

(3) ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான் பெரிதும் காதலின் முழுஇடத்தையும் பெற்று விடுகின்றது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் போதவே போதாது. ஆகையால் அறிவையும் நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்மையைக் கொண்ட வாழ்க்கைத் துணையிணைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

(4) காதல் மணம் என்பதற்குப் பலவீனத்தில்- அவசரத்தில்- மாட்டிக் கொண்டு பின்னால் தொல்லை அல்லது அதிருப்தி அல்லது சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிருப்பந்தம் ஆகியவற்றை அடைவதைத்தான் பொருளாகச் சொல்லலாம். (5) உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சமநிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு மற்றொருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

(6) திடீரென்று காதல் கொள்வது, பிறகு துன்பப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது, என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக்காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால்-காதலும் பொய், கடவுளும் பொய் என்றுதான் பொருள்; அருத்தம்.

(7) ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்டபிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும்? திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்கவழக்கம் ஆகியவற்றை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-விருப்பம் (இறையனார் களவியல் கருத்தை ஒட்டியுள்ளது).

(8) காதல் மணத்தைவிட வாழ்க்கை ஒப்பந்த மணமே வாழ்க்கைக்கு மேலானதாக இருந்துவரக் கூடும் என்பது எனது கருத்து.

(9) திருமணம் அல்லது கல்யாணம், கன்னிகாதானம் ஆகியவை போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்மக்களாகிய நம்மவர்க்குக் கிடையாது. நம்மவர்க்கெல்லாம் மணவாழ்க்கை இல்லை; காதல் வாழ்க்கைதான் இருந்தது.

(ஆ) கலப்பு மணம்: இது பற்றியும் ஐயா அவர்களின் சிந்தனைகள்:

(1) கலப்பு மணம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எல்லா மக்களாலும் எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டும், வேதபுராண காலங்களில் இருந்தும், சுருதி, சுமிருதி ஆகியவற்றால் அனுமதிக்கப் பெற்றும் நடந்து வருகின்ற முறையே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்தி வருவதாகச் சொல்லிவிட முடியாது.

(2) உண்மையிலேயே கலப்புத் திருமணம் என்று கூற வேண்டுமானால் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். சாதிகளுக்குள் மிக உன்னத சாதி என்றும் கடவுளுக்கு அடுத்த தகுதி உடைய சாதி என்றும் கூறப்பெறும் பார்ப்பனர் சாதிதான் தலை தூக்கிநிற்கிறது. பார்ப்பனர் அல்லாத சூத்திரர் சாதி என்று சொல்லப் பெறுகின்ற சாதிதான் சமுதாயத்தில் மிகவும் கீழானது என்றும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. இந்த வேற்றுமை ஒழியவேண்டும். இந்த இரண்டு சாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் ‘கலப்புத் திருமணம்’ என்று கூறலாம்.

தம்பதிகளுக்கு ஐயாவின் அறிவுரை: இதுவும் சமுதாயத்திற்கு ஐயா அவர்கள் ஆற்றிய தொண்டு என்று கருதலாம். இத்திசையில் அவருடைய சிந்தனைகள்:

(1) மணமக்கள்- உயிர் நண்பர்கள். ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்து கொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவம் மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள்- அடுப்பூதுவதற்கே வந்தவள்-என்ற எண்ணமில்லாது பழகவேண்டும.

(2) மணமக்கள் பிள்ளைபெறுவதில் அவசரப்படக்கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.

(3) மணமக்கள்-வாழ்க்கையில் மற்றவர்களுக்காக உதவும் மனப்பான்மையை உடையவராக இருக்கவேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும் கேடாவது ஏற்படாதமாதிரி நடந்துகொள்ள வேண்டும். நல்வாழ்வும் நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப்பேற்றைக் குறைத்துக் கொண்டு வாழ்க்கை வசதிகளை நல்ல வண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

(4) மணமக்கள்-தங்கள் வாழ்க்கையில் வரவுக்கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கக் கூடாது. வரவு சிறிதாக இருப்பினும் அதிலும் ஒருகாசாவது மீதப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஒழுக்கம் என்பது இதுதான் என்பேன். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்வது விபசாரித்தனம் என்பேன். (5) வாழ்க்கையில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சிக்கனமாக வாழவேண்டும்.

(6) எந்தவிதமான சிரமம் வந்தாலும் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது என்ற எண்ணம் கொள்ளவே கூடாது. வெறுக்க வேண்டும். நாம் வாழவேண்டுமானால் மற்றவருக்கு உதவ வேண்டுமேயொழிய மற்றவர்களிடமிருந்து உதவியை எதிர் பார்க்கக் கூடாது.

(7) கணவன்-மனைவி என்பது இல்லை. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகளே என்பதுதான் உண்மை. இதில் ஒருவருக்கொருவர் அடிமை-எசமான் என்பது இல்லை. இருவரும் சம அந்தஸ்துள்ளவர்கள் ஆவார்கள்.

(8) மணமகன் மணமகளைத் தோழராகவே கருதவேண்டும். அறிவை மழுங்க வைக்கும் கோயிலுக்குப் போவதும் உற்சவத்திற்குப் போவதும் கூடாது. வெளியேபோக வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் கண்காட்சிகள், ஆலைத்தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், அருங்காட்சியகங்கள் முதலிய இடங்களைச் சென்று பார்க்க வேண்டும்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்

சென்னைப் பல்கலைக் கழகம்