(தந்தை பெரியார் சிந்தனைகள் 18 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 19

 

2 . திருமணம் தொடர்ச்சி

 

(9) அறிவோடு சிக்கனமாக வாழவேண்டும். வரவிற்குமேல் செலவிட்டும் பிறர் கையை எதிர்ப்பார்ப்பதும், ஒழுக்கக்கேடான காரியங்களுக்கு இடங்கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டுக் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

(10) மணமக்கள் இருவரும் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை அன்புருவாக இருக்க வேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே என்று இராமல் மற்றவர்க்காகவே வாழ்கின்றோம் என்று எண்ணவேண்டும்.

(இ) சீர்த்திருத்தத் திருமணம்: இதுபற்றியும் ஐயாவின் சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்:

(1) கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமேயொழிய அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்பதே எங்களது ஆசை.

(2) ஆணும் பெண்ணும் பதிவு அலுவலகத்திற்குச் சென்று வாழ்க்கைத் துணையாகிவிட்டோம் என்று சொல்லிக் கையெழுத்தும் போட்டு விட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்துக்கு இதைவிட (சுயமரியாதைத் திருமணத்தைவிட) அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. 

(3) பெண்கள் உலகம் முன்னேற்றம் அடையவேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்படவேண்டுமானால், ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும்; உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்படவேண்டுமானால் சீர்திருத்தக் கல்யாணத்துக்கு இடம் அளிக்கப்பெற வேண்டியது முக்கியமான காரியமாகும்.

(4) வேறு எந்தக் காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கைச் சுதந்திரத்தில் சம சுதந்திரம் ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின், முதல் இலட்சியம் அதுவாகும். ஆதலால் அதுகுறித்து ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆகவேண்டும்.

(5) திருமணம் என்பது வயது வந்த அறிவு வந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமேயொழிய மற்ற யாருக்கும்-வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் தொடர்புடையதல்ல.

(6) இந்துமதப்பேரால், இந்துக்கடவுளர்களின் பேரால், அடிமையாக இருக்கும் இந்துப் பெண்களுடைய நன்மைக்குத்தான், அவர்களுக்கு சவுரியம் உண்டாகத்தான், அவர்களுடைய அடிமைத்ன்மையை ஒழிக்கத்தான்-இந்த மாதிரியான புரட்சிக்கரமான திருமணங்களை நாம் நடத்துகிறோம் என்பதை நமது பெண்கள் உணரவேண்டும்.

(7) நமக்கு மேலான மேல்சாதிக்காரன் என்பவனைப் (பார்ப்பானை), புரோகிதனை வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

(8) நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்னகாரியம் செய்கின்றோம் என்று அறிந்து கொள்ளாமலும் அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களை (சடங்குகளை)ச் செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.

(9) திருமணத்தில் சங்கீதம், நாட்டியம், காலட்சேபம் முதலியவற்றை மட்டும் ஏற்பாடு செய்யாமல் பல அறிஞர்களை அழைத்துக் கருத்துரை நிகழ்த்தவும், மக்கள் கேட்டுப் பயன் அடையவும் செய்து இருக்கிறார்கள். இதற்காக நாம் பாராட்ட வேண்டும்.

(10) மாறுதல் திருமணம் என்பது அடியோடு மூட நம்பிக்கையையும் தேவையற்றவைகளையும் விடுத்துப் பகுத்தறிவு அடிப்படையில் நிகழ்த்துவது என்பதாகும். திருமணம் என்பது மனிதனுக்குக் கவலையினை மாற்றத் தக்கதாக ஆகவேண்டும். 

(11) வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அநுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானவையாகும்.

(12) நமது திருமணம் திராவிடர் திருமணம்தான். ஆனால் இந்த முறையில்தான் திராவிடரின் பழங்காலத் திருமணம் நடந்ததென்றோ, அல்லது இப்படித்தான் திராவிடர் எதிர்காலத்திலும் திருமணங்கள் நடத்த வேண்டும் என்றோ நான் முடிவு கட்டவில்லை.

(ஈ) மறுமணம்: மனிதன் எப்பொழுது மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதுபற்றியும் ஐயா அவர்கள் சிந்தித்துத்துள்ளார்கள். அவருடைய சிந்தனைகள்:

(1) அவனுடைய முதல் மனைவி இறந்து போனகாலத்திலும்

(2) தன் மனைவி மற்றொரு ‘சோர நாயகனிடம்’ விருப்பங்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய காலத்திலும் மறுமணம் செய்து கொள்வதை யாரும் குறை சொல்வதில்லை.

(3) தீராத கொடியநோய் தன் மனைவியை பீடித்தகாலத்தில் மறுமணம் செய்து கொள்வதை எவரும் ஆட்சேபம் செய்வதில்லை.

(4) மனைவி புத்திசுவாதீனம் இல்லாமல் போய் விட்ட காலத்தில் மறுமணம் செய்து கொள்வதை எவரும் எதிர்ப்பதில்லை.

ஆகவே பகுத்தறிவுக்காரரும் அநுபவக்கொள்கையினரும் மேற்கண்ட சந்தர்ப்பங்களில் மறுமணம் செய்துகொள்வதை ஆட்சேயிக்க மாட்டார்கள்.

(உ) விதவை மணம்: விதவை மணம்பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள் இந்து சமூகத்தில் புரையோடிப்போன கீழான நிலையைக் காட்டுகின்றன.

(1) உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும் தன் துணைவி இறந்துபட்டவுடன் மறுமணம் புரிந்து கொள்ள முயலுகின்றான். அதுவும், வனப்பு மிகுந்த-எழில் கொழிக்கும்-இளம்நங்கையொருத்தியைத் தேர்ந்தெடுக்கின்றான்.

ஆயின், ஓர் இளம்பெண் தன் கொழுநன் இறந்துவிட்டால் அவள் உலக இன்பத்தையே துய்க்காதவளாயிருப்பினும்- அவள் தன் ஆயுட்காலம் முழுவதும் இயற்கைக்கு கட்புலனை இறுக்க மூடி, மனம் நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகின்றது. இஃது என்ன அநியாயம் என்று மனம் நொந்து அய்யா அவர்கள் வருந்துகிறார்கள்.

(2) விதவைத்தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து சமூகமும் இந்து மதமும் ஒரு காலத்தில் அழிந்து போனாலும் போகும் என்பது தந்தையின் கருத்து.

(3) கணவனிழந்த காரிகையை எப்படி ‘விதவை’என்கிறோமோ அது போலவே மனைவியை இழந்த கணவனை ‘விதவன்’ என்று வழங்க வேண்டும்.

(4) “மனித சமூகத்தில் மகளிர் விசயத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட வேண்டியது அவசியம். இது தீண்டாமையை ஒழிப்பதைவிட அவசரமாய்ச் செய்ய வேண்டிய காரியம் என்பது என் கருத்து”. அதிலும் விதவைக் கொடுமைஅடியோடு ஒழிக்கப்பெறவேண்டும். அது மனித தருமத்துக்கு மாத்திரமல்ல, சீவதருமத்துக்கும் விரோதமாகும் என்கின்றார்.

(5) “எதற்காக ஒரு பெண் விதவை” யாக இருப்பது என்பது எனக்கு விளங்கவில்லை; விதவைத்தன்மை என்பதைத் தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்பது வெகுநாளைய அபிப்பிராயமாகும்” என்கின்றார்.

(6) விதவைத்தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரித்ன்மையை தூண்டவும் அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்லவேண்டும்.

(7) விதவைத்தன்மைதான் விபச்சாரம் என்கின்ற பிள்ளையைப் பெறுகின்றது. பிறகு, ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்- எவ்வளவு மனைவிமார்களை வேண்டுமானாலும் மணக்கலாம்- என்கிற முறையே விபச்சாரம் என்னும் பிள்ளையை வளர்க்கிறது. கலியாண இரத்து இல்லை என்கிற முறை விபச்சாரத்தை நீடுழி வாழச் செய்கின்றது.

(8) விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாக இருந்தால் ஊர்தோறும் குப்பைத் தொட்டிகளும், ஓடைப்புறம்போக்குகளும், கள்ளிமேடும், ஊருணிகளும் எப்படிப் பிள்ளைகளைப் பெற முடியும்?

(9) பெண்களில் விதவைகள் என்ற ஒரு நிலைமை ஏன் இருக்கவேண்டும்? கல்யாணம் செய்துகொண்டால்தானே இந்தக் கொடுமை? கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக முடியும்? கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித நன்மை உண்டு. (அ) குழந்தை பிறக்காது என்பதுடன் விதவையும் ஆக முடியாது (ஆ) அடிமை நிலையும் சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது. உலகிலுள்ள சகலக் கொடுமைகளிலும் விதவைக்கொடுமையே அதிகமானது.

(10) ‘விதவைத் திருமணம்’ என்கிற தொடர் நம்முடைய பெண்கள் விசயத்தில்தான் சொல்லப்படுகிறது; ஆண்கள் விசயத்தில் சொல்லப்பெறுவதில்லை. எப்படி இந்த அம்மை (திருமதி சொருணம்) ஒரு கணவனை மணந்து அவர் காலமான பின்பு எப்படி ஒருவரை மணந்து கொள்கிறார்களோ அது போலவே ஆண்மகன் ஒருவரும் ஒரு மனைவி தவறி இரண்டாவதாக ஒரு பெண்ணை மணந்துகொள்கிறார். இதனை ‘விதவன்’ திருமணம் என்று தானே போட வேண்டும்? ஏன் அப்படிச் செய்வதில்லை?

(11) இந்த உலகில் கணவனை இழந்த பெண்கள்தாம் அதிகம். மனைவியை இழந்த ஆண்கள் அதிகம் இல்லை. காரணம் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் கணவனை இழந்த பெண்களை மணக்க யாரும் முன்வருவதில்லை.

(12) விதவைத் தன்மை என்பது நமது நாட்டில் மிகக் கொடுமையான முறையில் இருந்து வருகிறது. இதனை எந்தச் சீர்திருத்தவாதியும் கவனிப்பது இல்லை. விதவைகளின் வாழ்க்கை ஒரு சிறைக்கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிருப்பந்தம் ஒவ்வொரு விதவைக்கும் இருந்து வருகிறது. எப்படிக் கைதியானவன் சிறைக்கூட விதியை மீறவேண்டும் என்கிற ஆசைக்கும் அவசியத்திற்கும் உள்ளாகிறானோ அதுபோலவேதான் ஒவ்வொரு விதவையும் விதவைச்சட்டத்தை மீறவேண்டிய நிருப்பந்தத்துக்கு ஆளாகிச் சிரமப்படுகிறாள். இந்தக் கொடுமை நிரபராதியான ஒரு பெண்ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட்டால் இதற்கு என்ன மறுமொழி உள்ளது? இந்த 20-ஆம் நூற்றாண்டில் ‘தலை விதி’ என்றும் ‘கடவுள் செயல்’ என்றும் சொல்லி மக்களை எப்படி ஏய்க்க முடியும்?

(ஊ) குழந்தை மணம்: இதைப்பற்றியும் பெரியார் சிந்தித்துள்ளார். அவர் சிந்தனைகள்:

(1) குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்துக் குடும்பம் என்னும் குழியில் வீழ்த்திக் கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் போதிக்கவில்லை. (2) சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்டவர்கள்மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற ஏட்டுச் சுரைக்காயைப்போல் ‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா இடங்களில் எழுதிவைப்பது நகைச்சுவை விருந்தேயன்றி வேறு என்ன?

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்

சென்னைப் பல்கலைக் கழகம்