திருவள்ளுவப் பெயர்க்காரணம்: மு.இராகவையங்கார்
திருவள்ளுவப் பெயர்க்காரணம்:
திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக உள்ளன. ஒளவைப்பிராட்டியை ஆடல்பாடல் வல்ல விறலியர் கூட்டத்தவராகக் கொள்ள இடமுண்டு. ஆகவே, குலச்சிறுமை, அவரது கல்விப் பெருக்கிற்கும் கௌரவத்திற்கும் தடையாகப் பண்டைக் காலத்தில் இருந்ததில்லை என்று உறுதி கூறலாம். அதனால் நம் புலவர் பெருமான் வள்ளுவக் குடியிற் பிறந்து பெருமை பெற்றவர் என்று ஒரு சாரார் கொள்வதிற் குறையொன்றுமில்லை என்க.
இனி, அரசர்க்குக் கருமத் தலைவராய் உயர்பதவி வகித்தவர்க்கு வள்ளுவன், சாக்கை என்ற சிறப்புப் பெயர்கள் முன்பு வழங்கலாயின என்பது.
“வள்ளுவன் சாக்கை யெனும் பெயர் மன்னர்க்கு
உள்படு கருமத் தலைவர்க ளென்றும்”
என்று திவாகர சூத்திரத்தால் அறியப்படுகின்றது. உள்படு கருமத்தலைவர் அரசர்கீழ்க் காதியத்தலைமை வகிக்கு மதிகாரிகள். இதனால் இராசகாரிய வல்பராய் விளங்கியவர்க்கு வள்ளுவப் பட்டம் வழங்கி வந்த செய்தித்தெறியப்படும்.. . .
இத்தலைமை வகிக்கும் முதுகுடியில் அவதரித்தவரே நம் தெய்வப் புலவர் என்றும் அதனாற்றான் இத்தகைய ஒப்புயவர்வற்ற திப்பிய நூலைச்செய்யும் திறமையுடையராயினர் என்றும் கொள்ளுதலும் பொருந்தும்.
மு.இராகவையங்கார்:
திருவள்ளுவரைப் பற்றிய சில குறிப்புகள்:
செந்தமிழ் :தொகுதி 8 (1909-1910):
++
அருமையான செய்தி! தமிழ்ப் பாடநூலில் சிலப்பதிகாரப் பாடல் ஒன்றில், ‘வள்ளுவன் யானை மீது முரசறைந்து வந்தான்’ என்று படித்ததிலிருந்தும், வள்ளுவர் எனும் சாதியில் பிறந்தவர்கள் சோதிடத்தில் திறமை மிக்கவர்களாய் இருந்தார்கள் என்று வீட்டுப் பெரியவர்கள் சொன்னது கேட்டும் திருவள்ளுவரின் பெயரும் அந்தக் காரணத்தால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று வெகு காலமாய்க் கருதியிருந்தேன். ஆனால், இப்படி ஒரு காரணமும் உண்டு என்பதை இப்பொழுதுதான் அறிகிறேன். மிக்க நன்றி ஐயா!