தலைப்பு-திருவள்ளுவர்நாள் : thalaippu_thiruvalluvarnaal

 உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும். தமிழர்களின் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு இந்நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யலாம் ?

௧. இல்லந்தோறும் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து திருக்குறள் ஓதுதல் .

௨. உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்தல் .

௩.  நம் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களிடம் இனிப்பு வழங்கி வள்ளுவர் நாள் வாழ்த்து பகிர்தல்.

௪. சிறுவர்கள், மாணவர்களை ஒன்று கூடச் செய்து திருக்குறள் ஒப்புவிக்கச் செய்வதோடு திருக்குறள் காட்டும் நன்னெறியை கடைப்பிடிக்க உறுதி மொழி எடுத்தல்.

௫.  ஒவ்வொரு தமிழரும் இந்த நாளில் தங்கள் உடையில் சிறிய திருவள்ளுவர் உருவப் படத்தைக் குத்திக் கொள்ளுதல் வேண்டும்.

௬. அமைப்புகளாக இருப்பவர்கள் பிள்ளைகளுக்குத் திருக்குறள் போட்டிகளை நடத்துதல்.

௭.  தெரு முனைகளில் திருவள்ளுவர் உருவப்படத்தை நிறுவி அப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல்.

௮.  இல்லங்களில் , நகரின் சுவர்களில் புதிய வண்ணம் தீட்டித் திருக்குறள் எழுதுதல்.

௯.  திருவள்ளுவர் நாளில் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்.

௧௦. வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை, வள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்ட மண்டபங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருதல்.

  இவ்வாறு பல வழிகளில் திருவள்ளுவர் நாளைத் தமிழர்கள் கடைபிடிக்க வேண்டுகிறோம். தமிழகமெங்கும் திருவள்ளுவர் நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டால் உலகமே தமிழர்களின் ஒற்றுமையை, பெருமையை உற்று நோக்கும். இதன் மூலம் தமிழர்கள் தாங்கள் இழந்த அதிகாரத்தை, ஆளுமையை, வரலாற்றை, பண்பாட்டை மீட்டெடுக்கலாம்.

– தமிழர் பண்பாட்டு நடுவம்

தமிழர் மதம்