(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி)

துலுக்க நாச்சியார்

துலுக்க நாச்சியார்

4

தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும்

  கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

  தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சிறுபான்மை நலத்துறையின் அரசாணை எண்:85-29.7.2008). இவற்றைத்தவிர காயலர், (இ)லெப்பை, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ள எனவும், கேரள அட்டவணைப்படி மாப்பிள்ள, கெயி, தங்ஙள், மரைக்காயர், ஓசன், புலசன், துலுக்கர் எனவும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப்பொருத்தவரை இராவுத்தர், மரைக்காயர், (இ)லெப்பை, மாப்பிள்ளா, பதான்கள், பட்டாணி, உருது முசுலிம், தக்கினி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

துலுக்கர்

  பண்டைய காலத்தில் முசுலிம்களின் தலைநகரமாகத் துருக்கி விளங்கியது. ‘துருக்கியிலிருந்து வந்தவர்கள்’ என்னும் பொருளில் ‘துருக்கர்’ என அழைக்கப்பட்டனர். துருக்கர் என்பது காலப்போக்கில் துலுக்கர் என மருவியது. கம்பராமயணத்தில் “துருக்கர் தரவந்த வயப்பரிகள்” என்றும், கலிங்கத்துப் பரணியில் “பிடக்கர் குருக்கர் துருக்கர்” என்றும் குறிப்பிடப்படுகிறது. முசுலிம்களுடைய பள்ளிவாசல்களில் நகரா என்ற ஒருவிதமான இசை மூலம் தொழுவதற்கு அழைக்கப்பட்டது. தற்பொழுது காலமாற்றத்தால் ஒலிபெருக்கி வந்துள்ளது. இதே போன்று முசுலிம்கள் அணயும் தொப்பியானது துருக்கியில் இருந்து வந்ததாகும். தொப்பியின் நடுவில் குஞ்சம் போன்று வைத்திருப்பார்கள்.

இராவுத்தர் என்பதற்கான ஆவணம்-கல்வெட்டுகள்

 திருப்பெருந்துறை சிவன்கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும், அம்மண்டபத்திற்கு ‘குதிரை இராவுத்தர் மண்டபம்’ என்றும் பெயர்.

 விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள திரௌபதியம்மன் கோவில் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல்வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு ‘முத்தியாலு இராவுத்தர்’ என்று பெயர் வைத்துள்ளனர். இன்றளவும் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் முத்தியாலு இராவுத்தரை வழிபடுகின்றனர். மேலும் ஒரு முசுலிமுடைய கல்லறையும் சிறியதாக அக்கோயிலினுள் உள்ளது.(களஆய்வு புகைப்படம்)

இராவுத்தரை வணங்கும் இந்துக்கள்

  ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் ஒரு பிரிவினர், கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின் பெயர் ‘இராவுத்தனசாமி’, ஆண் குழந்தைகளுக்கு இராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகளுக்கு இராவுத்தம்மா என்றும் பெயர் வைக்கின்றனர். இராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘தில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். அவர்களுடைய குலமுதல்வருக்கு அவர் உதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குலதெய்வமாக வணங்குகிறார்கள் அப்பகுதி மக்கள்.

துலுக்க(க் கவுண்டர்)

 ஈரோடு மாவட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் ‘துலுக்கண கவுண்டர்’  என்று பெயர் வைத்துக்கொள்கின்றனர்.

  திருச்செங்கோட்டில் இதே கண்ணகுலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி திருக்கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ என்ற கல்லறை உள்ளது. பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி ஆகும்.[ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், முதல் தொகுதி எண் 43. கொங்குநாடு(1934) தி.சு.முத்துசாமிக் கோனார், பக்கம்-90.]

துலுக்க நாச்சியார்

  திருவரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் அமைந்துள்ள இறைவியை  ‘துலுக்க நாச்சியார்’ என்று இன்றும் அழைத்து வருகிறார்கள். இத்தெய்வத்திற்கு முஸ்லிம்களின் உணவு, உடைப் பழக்கத்தையொட்டி உரொட்டி, வெண்ணெய், கைலி(லுங்கி) வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் துலுக்க நாச்சியார்

மதுரை வண்டியூரில் துலுக்க நாச்சியார் பெயரில் கோயில் இருப்பதையும், பெருமாள் உற்சவத்தின்போது, உற்சவ மூர்த்தியான திருமால் துலுக்க நாச்சியார் கோயிலில் தங்கிச் செல்லும் ஐதீகம் நிலவி வருவதையும் கொண்டு ஆய்வு மேற்கொண்டால், திருவரங்கம் கோயிலில் இடம்பெற்றிருந்த குந்தவை நாச்சியாரின் செப்பு திருமேனியையே திருவரங்கம் பிராமணர்களின் வேண்டுகோளின்பேரில் அங்கிருந்து அப்புறப்படுத்தி சமயபுரம் பகுதியில் வைத்துள்ளது விளங்கும்.

94vaigaianeesu-name