(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 தொடர்ச்சி)

94vaigaianeesu-name

6

பழமை மாறாத இந்து மரபைப் பின்பற்றும் இசுலாமியர்கள்

   சமயம் மாறினாலும் இந்துக்கோட்பாட்டின் படி இந்துக்கள் செய்கின்ற சடங்குகளை இன்றளவும் இசுலாமியர்கள் செய்துவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலத்தெய்வம் இருப்பது போல இசுலாம் மார்க்கத்திற்கு வந்தவர்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்த சடங்குகள் போல மாயாண்டி துணை, கருப்பாயி துணை, எடமலையான் துணை, பதினெட்டாம்பட்டியான் துணை, காமாட்சியம்மன் துணை என்றெல்லாம் ஏகப்பட்ட குட்டித் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.  இந்துக்கள்,  இதே போன்று  யா முகையதீன், யா அப்துல் காதர், யா அசுமீர் காசா, நாகூர் ஆண்டவர் துணை, அரைக்காசு அம்மா துணை, நாலாங்கல் அவுலியா துணை, ஆத்தங்கரை அவுலியாதுணை, பத்ரீன்கள் துணை எனத் தங்கள் வாகனங்களிலும் வீட்டின் முன்னாலும் எழுதி வைக்கின்றனர். அதன்பின்னர் காசி, சபரிமலை, பழநி, திருச்செந்தூர் முதலிய இடங்களுக்குப் பயணம் செய்வது போல முசுலிம்களும் நாகூர், ஏர்வாடி, முத்துப்பேட்டை, திட்டச்சேரி மன்சூர் தருகா என யாத்திரையை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறார்கள்.

  முசுலிம்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு செயலிலும் இந்துக்களின் வாழ்க்கை முறைகள்தான் விரவிக்கிடக்கின்றன. குழந்தை பிறப்பதற்காக இந்துக்கள் அரச மரத்தையும் ஆல மரத்தையம் சிலைகளையும் வலம் வருவது போல முசுலிம் தாய்மார்கள் கப்ருகளை(கல்லறைகள்) வலம் வருகிறார்கள். அங்குள்ள சாம்பிராணிச் சாம்பலையும் காய்ந்த பூவையும் திருவுணாவாகப் பெறுகிறார்கள்.

  பிள்ளை பிறந்தவுடன் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக இந்துக்கள் சின்ன தொட்டில்களைப் போல் செய்து கோவில்களில் தொங்கவிடுவார்கள். முசுலிம்களோ பூந்தொட்டில்களை தருகாவில் தொங்கவிடுகிறார்கள். மேலும் கைவலி, கால்வலி, உடம்புவலி என ஏதாவது வலி ஏற்பட்டால் தங்கம், பித்தளை, வெள்ளி போன்ற மாழைகளினால் உருவங்களைச்செய்து அதனைத் தாங்கள் நேர்ந்த குலதெய்வத்திற்கு இந்துக்கள் உண்டியலில் போடுவது போல முசுலிம்களும் உருவங்களை உண்டியலில் போடுகிறார்கள். இன்றும் நாகூர், ஏர்வாடி, முத்துப்பேட்டை போன்ற தருகாவில் இவற்றைக்காணலாம்.

 குழந்தை பிறந்த நாள், நட்சத்திரம் எல்லாம் குறிக்கப்படுகின்றன; சாதகம் கணிக்கப்படுகிறது. பிள்ளைக்குப் பெயர் சூட்டவும், தலைமுடியை இறக்கவும் இந்துக்கள் கோவிலுக்குப் போகிறார்கள்; முசுலிம்கள் தருகாவுக்குச் செல்கிறார்கள்.

 இந்துக்களில் சில பிரிவினர் ஆண் பிள்ளைகளுக்கு உபநயன விழா என்னும் பூணூல் கலியாணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அதே போல முசுலிம்களும் கவர அடைப்பு என்னும் மார்க்கக் கல்யாணம், விருத்தசேதம் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சி முதலானவற்றிற்கு விழா எடுக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்குக் காதுகுத்துவிழா, பூப்புனித நீராட்டுவிழா என்றும் எல்லா இடத்திலும் வேறுபாடின்றி நடைபெறுகிறது.

   மங்கலமுகூர்த்ததில் இந்துக்கள் தாலி கட்டுவது போல் முசுலிம்களும் காதோலை, கருகமணி கட்டுகிறார்கள். நல்ல நாள் பார்த்தல், ஆரத்தி எடுத்தல், இராகுகாலம், எமகண்டம் பார்த்துக் காரியம் நடத்துதல் எல்லாம் கடைப்பிடிக்கப்படுகின்றன. திருமணம் முடித்தவுடன் ‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்’ என்ற கோட்பாட்டின்படி திருமணம் ஆன பெண் தன்னுடைய கணவர் வீட்டிற்குச் செல்லும் முன், காலில் இந்துக்களைப்போல் மிஞ்சி அணிந்து, இந்துக்களின் மங்களச்சின்னமான குத்துவிளக்கு எடுத்துச்சென்று வீட்டிற்கு நுழையும் முன் ஆரத்தி எடுத்து அந்தத் தண்ணீரை முச்சந்தியில் ஊற்றிவிட்டு நெல் அளக்கும் படியில் நெல் அளந்து அதன்பின்னர் சாந்தி முகூர்த்த அறைக்குச் செல்வார்கள். பஞ்சாங்கம் பார்ப்பது, பில்லி, சூனியம் பார்ப்பது போன்று முசுலிம்களும் பால்கிதாபு என்ற நூலைப் பின்பற்றிச் செய்கின்றனர். வீடு குடிபுகுவதற்குமுன் தச்சுக்கழித்தல் என ஒரு சடங்கு பல பகுதிகளில் இந்துக்களிடமும், முசுலிம்களிடமும் ஒன்று போலவே காணப்படுகிறது. புதுமனை புகுவிழா என இந்துக்கள் கொண்டாடுவது போல முசுலிம்களும் பால் காய்ச்சும் விழா எனச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

  கெட்ட தேவதைகள், சாத்தான்களின் பிடியிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக தாயத்து, மந்திரக்கயிறு, காசுமுடிந்து கட்டுதல் போன்ற செயல்கள் இந்துக்களிடமும், முசுலிம்களிடமும் நடக்கின்றது. இந்துக்கள்  கொண்டாடும் கோவில் திருவிழாக்கள்போல், முசுலிம்கள் தருகா உரூசு என்று  கொண்டாடுகிறார்கள். யானை, குதிரை ஊர்வலங்கள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பால் முழுக்கு, சந்தன முழுக்கு, தேரோட்டம், கப்பலோட்டம் போன்றவை செய்து அதன்பின்னர் கோவில் திருவுணாபோலத் தருகாவில் திருவுணா காணிக்கை செலுத்திய அன்பர்களுக்கு அஞ்சலில் அனுப்பப்படுகிறது.

இறந்தபின்னர் இசுலாமியர்கள் சந்தூக்குப்பெட்டியில் பூப்பேடுவது, கல்லறையில் பூமாலை எடுப்பது, ஊதுபத்தி கொளுத்துவது, சடங்கு முடிந்த கையோடு ஆடு அல்லது கோழி அறுத்துச் சாப்பிடுவது என ஒற்றுமை இன்றும் இருமதத்தினரிடையேயும் காணப்படுகிறது. இந்துக்களிடம் வழங்கப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பிரிவுகளைப் பின்பற்றி சரிஅத்து, தரீகத்து அகீகத்து, மக்ரிபத்து என நான்குவிதமான வாழ்க்கைப் படித்தரங்கள் முசுலிம்களிடமும் உள்ளது.

இன்றைய தமிழக முசுலிம்களின் பல தலைமுறைக்கு முன் வாழ்ந்தவர்கள் இந்துக்களாகவே இருந்திருப்பவர்கள். அந்த மூதாதையர்களின் பழக்க வழக்கங்களும் வணக்க வழிபாடுகளும் சடங்குகளும் நடைமுறைகளும் இன்றைய முசுலிம்களின் வாழ்க்கை முறையிலிருந்து வணக்க வழிபாடுகளிலிருந்து முற்றாக விடுபடவில்லை.

99erwadi_santhanakkuudu(தொடரும்)

vaigaianeesu_name_peyar