தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர்

   கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும்  தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல  பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார்.

  சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை ஆவர். அதன்படி இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்பதாகும் ஆனால், இவர் அச்சுதானந்த சுவாமிகளிடம் சேர்ந்து சைவநெறியாளராக மாறிய பொழுது சோமசுந்தரம் எனப் பெயர் சூட்டிக் கொண்டார். தமிழ்ப்பழங்குழுவினரே நாயகர் என அழைக்கப்பெற்றனர் என்று, இவரைத் தமிழ்க்குடியினர் என மறைமலையடிகள் விளக்கியுள்ளார்.

    சோமசுந்தர(நாயக)ர்  பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும்  கற்றார்; புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.

  சோமசுந்தர(நாயக)ர் சிவஞானம்  என்னும் பெண்ணின் நல்லாளை மணம் புரிந்து இல்லறம் நடத்தினார். இவர்களுக்கு, சகதாம்பாள், விசாலாட்சி, உலோகாம்பாள் என மூன்று பெண்மக்களும் சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர்.

  சோமசுந்தர(நாயக)ர் பிள்ளைமைப் பருவத்தில் நன்னூல், யாப்பருங்கலக்காரிகை,   முதலான இலக்கண நூல்கள், திருக்குறள், நாலடியார், முதலான அறநூல்கள், பெரியுராணம், கந்தபுராணம்,  திருவிளையாடல் புராணம்,   கம்பராமாயணம்,  வில்லிபுத்தூரார் பாரதம், முதலான புராண நூல்கள், தேவாரம், திருவாசகம் முதலான 11 திருமுறைகள், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான 14 சித்தாந்த நூல்கள், ஒழிவிலொடுக்கம், வள்ளலார் சாத்திரம், திருப்போரூர் சன்னதி / சந்நிதி முறை முதலான எண்ணற்ற நூல்களை நன்கு கற்றுப் புலமை பெற்றார்; இளமைக்காலத்தில்,  கைவல்யம், ஞானவாசிட்டம்,  பிரவோத சந்திரதோயம்,  பிரபுலிங்கலீலை முதலான மாயாவாத நூல்களையும் கற்றார்; அடுத்து நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தினையும் இதன்உரை நூல்களையும்  ஆராய்ந்து கற்றார்.

   சோமசுந்தர(நாயக)ர் தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கராகப் பணியாற்றினார். ஆனால், உயிர்க்கொலை புரிந்து தோலை எடுத்து விற்பனைபுரியும் கொலைக்கூடத்தில் பணியாற்றவிருப்பமின்றி  வேலையை விட்டார்.  பின்னர் அவர், சென்னை நகராண்மைக்கழகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்து பணியாற்றினார். ஆனால், 1881 இல் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழடி விழாவிற்குச்செல்ல அரைநாள் விடுப்பு கேட்டதற்கு, அது புல்லிய காரணமென்றுகூறி விடுப்பு மறுக்கப்பட்டது. “பொய்யான காரணங்களுக்கு விடுப்பு தருவோர் மெய்யான காரணத்திற்கு அரைநாள் விடுப்பு மறுக்கிறார்கள்” எனக் கூறி வேலையைவிட்டு நீங்கி விட்டார். 

 பிற சமய நெறிகளில் ஆராய்ச்சியறிவு பெற்றுத் தாம் கொண்டிருந்த  சைவநெறிப் புலமையால், நாடெங்கும் சைவநெறிச் சொற்பொழிவுகள் ஆற்றி இறைநெறித் தொண்டராகத் திகழ்ந்துள்ளார்கள். இவரின் சமற்கிருதப் புலமையால், பிராமணர்களும் இவரைப் போற்றி மதித்தார்கள். தொன்மங்களில் சொல்லப்பட்ட இழிவான கட்டுக் கதைகளை மறுத்தும் அயலாரால் சிவமதத்தில் நுழைக்கப்பட்ட கொள்கைக் குழப்பங்களை அகற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றியமையால் முற்போக்காளர்களும் இவரது உரையை விரும்பிக் கேட்டனர். இவரது உரைச்சிறப்பை யறிந்த விவேகானந்தர் 1900 இல் சென்னை வந்திருந்தபொழுது இவரின் ‘சைவ சித்தாந்த’  உரையைக்கேட்டு மகிழ்ந்துள்ளார். பல்லாயிரம் செற்பொழிவுகள் நிகழ்த்திய பெரியார் இவருக்கு முன்னரும் பின்னரும் எவருமில்லை என்னும் சிறப்பிற்குரியவர் இப்பெருந்தகையார்.

 இவரது நூல்கள் பெரும்பாலும் சமற்கிருதக் கலப்பாகவே இருக்கும். ஆனால்சொற்பொழிவுகள் நல்ல தமிழில் அமைந்திருக்கும். நல்ல  தமிழில் சொற்பொழிவாற்றியவர் நல்ல தமிழில்  நூல்களை எழுதாமல் போனது தமிழுலகிற்கு இழப்பே ஆகும்.

“சோமசுந்தரத்தின் மாணவர் மறைமலையடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் சோமசுந்தரமும் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார்” என்று பிறர் குறிப்பிடுவது தவறாகும்.  1916 இல் தனித்தமிழ்இயக்கம் அமையும் சூழல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கு முன்னர் இருந்தே மறைமலையடிகள்  தனித்தமிழ் ஈடுபாட்டில் கருத்து செலுத்திவந்தார். எனவே, பிற்காலத்தில்தான் தனித்தமிழ்  ஈடுபாடு மறைமலையடிகளுக்கு வந்தது என்பது தவறாகும். எனவே, அதனால் தனிததமிழில் பேசவும் எழுதவும் சோமசுந்தரர்  ஈடுபாடு கொண்டார் என்பதும் தவறாகும்.

  இது குறித்து மறைமலையடிகள் விளக்கும் பொழுது அக்காலத்தில்,  சமற்கிருதப் புலவர்கள் தமிழ்நெறிக்கு மாறாக எழுதி வந்தமையால், சமயநூல் படைப்பாளர்கள்,  அவற்றை மறுப்பதற்காக இத்தகைய நடையைத் தேர்ந்தெடுத்திருந்திருக்கிறார்கள் என்கிறார். எனினும்,

இங்ஙனமாக வடநூல் தமிழ்நூல்களில் அரிதின்  உணர்தற்பாலனவாய்க் கிடந்த சமய நுண்பொருள்களையெல்லாம் எண்ணிறந்த சொற்பொழிவுகளானும் பற்பல நூல்களானும் வெளிப்படுத்திஇத்தென்னாட்டின்கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடரென உலவித் தமிழ்மக்கள் உள்ளத்துப் பரவியஅறியாமை இருளைப் போக்கிஅவர்க்கு அறிவொளி காட்டிய சித்தாந்த ஆசிரியரான சோமசுந்தரநாயகரவர்கள் தாம்அரிது முயன்றெழுதிய பல நூல்களையுந் தனிச் செந்தமிழ் உரை நடையில் எழுதியிருந்தனர்களாயின் அது தமிழுக்கும் அவை தமிழ்மக்கட்கும் விலையிடுதற்கரிய முழுமணிகள் நிறைந்த கருவூலமாய்ச் சிறந்து திகழா நிற்கும்”  என்றும் மறைமலையடிகள்  கூறுகிறார்.

 அதே நேரம்,  “அவர்கள் இயற்றிய பல தமிழ்ச்செய்யுட்களானும் ஆசார்யப் பிரபாவம் என்னும் தமதரிய  நூலின் பல இடங்களில் அவர்கள்  செந்தமிழ்ச் சுவை பெருகவெழுதிய உரைப்பகுதிகளானும்   இவர் தனித்தமிழில் எழுதும் வல்லமை பெற்றவர் என்பது நன்கறியப்படும் என்கிறார் மறைமலையடிகள் .

 மேலும் இவரது 39 அகவைக்குப் பின்னரே தனித்தமிழ்ப் பேரிலக்கணமான தொல்காப்பியமும் தனித்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலியனவும் வந்தமையால் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு பெறாமையும் தனித்தமிழ் நடை இல்லாமைக்குக் காரணம் என்கிறார் மறைமலையடிகள்.

“நாயகரவர்களின் அரிய பெரிய ஆராய்ச்சியுரைகள் தனிச்செந்தமிழ் உரைநடையில் எழுதப்பட்டிருக்குமாயின் அவை தமிழுக்குப் பெரியதோர் அறிவுக்களஞ்சியமாய் இருந்திருக்கும். ஆனால், அவை வடசொற்கலப்பு மிகுதியும் உடைய உரைநடையில் அமைந்தததே தமிழ்மொழிக்கு ஒரு பேரிழப்பாயிற்று.”

 என்றும் மறைமலையடிகள் தெளிவாகக்  கூறுவதால், சமயம் சார்ந்த நூல்களில் சமற்கிருதக் கலப்பு நடையே இவரின் நடையாக இருந்தது எனலாம்.

  செந்தமிழ்நடையில் பெரு விருப்பு கொண்டிருந்த  மறைமலையடிகள் தம் ஆசிரியர்போல் சமற்கிருதம் கலந்தும் சில நூல்கள் எழுதினார். தம் ஆசிரியரிடம் எவ்வாறு எழுத வேண்டும் என்று கேட்டதற்குச் சோமசுந்தர(நாயக)ர், “நீ என் நடையைப் பின்பற்ற  வேண்டா. உன் செந்தமிழ்நடை இனிமையாக உள்ளது. அதையே பின்பற்றுக” எனக் கூறி மறைமலையடிகளின் தமிழ்நடைக்கு ஊக்கமளித்துள்ளார்.

நூல்கள்:

 வேதசமாசம், பிரம்மசமாசம்  ஆகிய வழியில், உருவவழிபாடு கூடாதென்று வெளிவந்த நூலொன்ற‌ை மறுத்து 22 ஆம் அகவையில் எழுதிய  வேதபாஃக்யசமசகண்டநம  என்பதே இவரது முதல் நூலாகும்.

  சோமசுந்தர(நாயக)ருக்கும் மறைமலையடிகளுக்கும் இடையே ஆசிரியர் மாணவர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டுத் தந்தை-மகன் உறவுபோல் பிணைப்பு இருந்தது. சோமசுந்தர(நாயக)ர் மாசி 11, 1932 / பிப்.22, 1901 அன்று மறைந்தபோது மறைமலை யடிகள் சோமசுந்தரக் காஞ்சியைப் பாடினார். மேலும் சோமசுந்தரக் காஞ்சியாக்கம்,  ‘சோமசுந்தர நாயகர் வரலாறு‘ என்னும் நூல்களையும் மறைமலையடிகள் எழுதினார்.

வான்மதி மீனினநீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ

   மல்லலங் கற்பமரஞ் சிவம்வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ

நான்முக னான்மறையுட் பொருள்கூற  நலத்தக வந்ததுவோ

  நல்லகல்லாலமர் நம்பர் கைகாட்டுரை நாட்டவெ ழுந்ததுவோ

மான்மக ணாமகடூ மகள்கூடி வளந்தர வந்ததுவோ

   மாதவவாழ் வொடுமில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவே

சூன்முதிர் வண்பயனூன் முறைதந்து சுரந்திமட வந்ததுவோ

   சோமசுந்தர னெனூநாம மொடிங்கு நீ தோன்றிய தெங்குருவே

நாயினிழிந் தவெம்புன்மை களைந்து நலந்தர வந்தனையோ

  நல்லது தீயது நன்றுபகுத்து நவின்றிடவந்தனையோ

தாயினுமென் னுயர்தந்தை யினும்முயர் தன்மையில் வந்தனையோ

  தண்டமிழிற் படுவண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ

காயினுமல் லதுவப்பினு  மன்பது காட்டிட வந்தனையோ

  கன்மனமி யாவுமொர்நன் மனமாயெமைக் காத்திட வந்தனையோ

என மறைமலையடிகள் சோமசுந்தரக் காஞ்சியில் தன் ஆசான் சோமசுந்தர(நாயக)ர் குறித்துக்  கூறியுள்ளமை சோமசுந்தரரின் சிறப்பையும் இருவர்கிடையேயிருந்த உறவையும் தெள்ளிதின் விளக்குகின்றது.

– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி18092019