தேசிய ஒருமைப்பாடும் தமிழும் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
பாரதியார் கருத்து
தேசிய ஒருமைப்பாட்டினை விரும்புவோரில் சிலர், ‘தமிழர் வாழ்க’, ‘தமிழினம் வாழ்க’ என்ற முழக்கங்களை வெறுக்கின்றனர். இது அறியாமை, இந்த அறியாமையைப் பாரதியார் வெறுத்தார்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு
என்ற வரிகளிலே – தமிழை வாழ்த்தி, பின் தமிழரை வாழ்த்தி, அப்புறம் பாரத நாடு முழுவதையும் வாழ்த்துகின்றார் பாரதி. தமிழை மறந்து ‘தமிழர்’ என்ற இன உணர்வைத் துறந்து, பாரதத்தை வாழ்த்தவில்லை. அப்படி வாழ்த்துவது தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சி ஆகாது. வீட்டை மறந்தவன் நாட்டை நினைப்பான் என்று நம்ப முடியாது. வீட்டுக்குத் துரோகி, நாட்டுக்கு மட்டும் தொண்டனாகிவிடுவானா? வீட்டையும் நாட்டையும் பிணைத்துச் செயல் புரிபவனே நம்பிக்கைக்குரியவன். இது பாரதியின் சித்தாந்தம்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ் மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ் ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லையகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே!
வானமறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
என்ற வாழ்த்துப் பாடலிலே, தமிழ் மொழியிடத்தும் தமிழரிடத்தும் தாம் கொண்ட எல்லையற்ற காதலை வெளிப்படுத்துகின்றார். தமிழின் திறத்தைக் கூறும்போது, ‘வானமளந்த தனைத்தும் அளந்தமொழி’ என்கிறார். இனி தமிழ் அடைய வேண்டிய வளர்ச்சியைக் கூறுங்கால், ‘வானமறிந்த தனைத்து மறிந்து வளர்மொழி வாழியவே’ என்கிறார். ஏற்கனவே வளர்ந்து வரும் மொழியாகிய தமிழ், இனியும், வளர்ந்தோங்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். ‘கலியுகம் அகல வையகம் வாழ – தமிழ் வாழ வேண்டும்’ என்கிறார். தமிழகத்திலோ, பாரதத்திலோ மட்டுமல்லாமல், ஏழ்கடல் நாடுகளிலும் ஏழ் கடலுக்கப்பாலும், தமிழ் மணம் வீச வேண்டும் என்கிறார். பாரதம் முழுவதையும் தாய் வடிவத்தில் கண்டு தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் மகாகவி தமிழரை – தமிழைத் தனிப்படுத்தி வாழ்த்துகின்றார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.
என்று தம் தாய்மொழியின் உயர்வினைப் பாடி மகிழ்கின்றார். இந்தப் பெருமை, பிற இந்திய மொழிகளைச் சிறுமைப்படுத்துவ தாகாது.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொல் பான்மை கேட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!
என்றும் பாடி, தமிழருக்குத் தாய்மொழிப் பற்றினைப் போதிக்கிறார்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
என்று தம் தாயினத்து மக்களுக்கு ஆணையிடுகின்றார்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை; வெறும் புகழ்ச்சி யில்லை;
என்று பெருமிதத்தோடு பாடுகின்றாரே, இதுவும் பிற மொழிப் புலவர்களைச் சிறுமைப்படுத்துவதுதானா? இல்லை. தாய்மொழிப் புலவர்களின் சிறப்பை மறந்த தமிழ் மக்களுக்கு அதனை நினைப்பூட்டிச் செயல்படுமாறு தூண்டிப் பாடியதேயாகும்.
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
என்ற வரிகளிலே- தமிழரைத் தமிழராக்க, தாய்மொழியில் பற்றுடையவர்களாக்க முயல்கின்றார் பாரதி.
(பாரதி கண்ட ஒருமைப்பாடு பக்கம் 394).
குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/ 15.09.1964
Leave a Reply