தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 தொடர்ச்சி)
2/2
தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2
3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை
ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர்.
ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தேர்ந்தெடுத்த பின்பு அவர் வேண்டா என்பது சரியல்ல. அவரின் செயல்பாடின்மைக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால், அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடும்பொழுதுதான் வழங்க இயலும்.
நாம்பொறுப்பின்றித் தகுதியற்றவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, “அவர் சரியல்ல; திருப்பியனுப்புங்கள்” எனப் பொறுப்பின்றிச் சொல்லலாமா?
பொதுவாக இந்தமுறை, கட்சி சார்பிலான தேர்தல் நடைமுறை உள்ள நாடுகளில் செயல்படுவதைப் பார்த்து ஆராயாமல், நம் மக்கள் இதனை வரவேற்கின்றனர். இங்கே நாம் வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கின்றோம். கட்சியடிப்படையில் கருதிப்பார்த்து நாம் வாக்களித்தாலும் நம் வாக்குகள் கட்சிக்கு அல்ல. அதன்சார்பில் நிற்கும் வேட்பாளருக்குத்தான். எனவே, வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர், அவருக்கு மாற்றாக மற்றொருவரை அனுப்பும் உரிமை கட்சிக்குக் கிடையாது.
அப்படியே இருந்தால் என்ன ஆகும்? முதலில் இடைத்தேர்தலில் குறிப்பிட்ட முறைகேடுகள், மக்கள்சார்பாளரை அச்சுறுத்தல் போன்றவையே பெருகும். இவை உண்மையான மக்களாட்சியாக அமையாது.
எனவே, கட்சிக்கு வாக்களிக்கும் முறையில் உள்ள திருப்பியனுப்பும் உரிமை என்பது நம் நாட்டுமக்களாட்சி முறைக்கு ஏற்றதல்ல என்பதை உணர வேண்டும்.
வாதத்திற்காக, இத்தகைய முறை இருந்தால் அதனை எவ்வாறு செயல்படுத்த இயலும்? எனப் பார்ப்போம். ஒரு தொகுதியில் 11பேர் போட்டியிட்டு 11% பெற்ற ஒருவர் வெற்றி பெற்றதாகக் கொள்வோம். அப்படியானால் அவரை எதிர்த்து 89% இனர் வாக்களித்துள்ளனர். இவரைத் திருப்பியனுப்ப 89% இனருக்கும் மேலல்லவா கையொப்பம் இட்டு அளிக்கவேண்டும். அல்லது இதற்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமா? இது புகுத்தப்படும் இடைத்தேர்தலாக அல்லவா அமையும்? எனவே முறையீட்டின் அடிப்படையிலோ மறு தேர்தல் அடிப்படையிலோ தொகுதி உறுப்பினரை அனுப்புவது என்பது மக்களாட்சித் தேர்தலுக்கு ஏற்றதல்ல. கட்சியாட்சித் தேர்தலுக்கு ஏற்ற இம்முறை மிகப்பெரியமக்களாட்சி நாடான நமக்கு முற்றிலும் பொருந்தாது.
4.வாக்குகள் அடிப்படையிலான சார்பாண்மை(விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்)
பேரறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்திய நடைமுறைதான் இது. பேரறிஞர் அண்ணா மாநிலங்களவையில் கன்னிப்பேச்சு என்று கூறப்படும் முதல்உரையிலேயே இதனை வலியுறுதியுள்ளார். என்றாலும் கட்சியாட்சி நடைபெறும் நாட்டில் நிலவும் இம்முறை மக்களாட்சிக்கு ஏற்றதல்ல.
கட்சித்தலைவர்களைத் தலைக்குமேல் வைத்துக்கொண்டாடியும் கட்சித்தலைவர்களின் அடிமைகளாக இருப்பதில் பெருமைப்பட்டும் கிடப்பதால்தான் தமிழ்நாட்டில் பல அவலங்கள் அரங்கேறுகின்றன. முறையான முதல்வராகஇருந்தும் பொம்மை முதல்வராகச் செயல்பட்டதும் மக்கள் முதல்வர் என்ற பெயரில் செய்திகள் உலாவந்தமையும் முதல்வர் பெயரில் எந்த ஓர் அறிவிப்போ செயல்பாடோ இல்லாமலிந்ததும் தமிழ்நாடு கண்ட காட்சிகளாகும். கட்சி முறைத் தேர்தலுக்கே நாம் மாறிவிட்டால் கட்சித்தலைவரின் முற்றதிகார(சர்வாதிகார) ஆட்சிக்கு வழிவகுத்து விடும்.
ஏன், வாக்குகள்அடிப்படையிலான சார்பாண்மை கேட்கின்றனர். எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம். மொத்தத்தில் 51% பெற்று ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. 49% பெற்ற பெற்ற மற்றொரு கட்சிக்கு ஒரு தொகுதிியல் கூட வெற்றி கிடைக்கவில்லை. அப்படியானால், அக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் விருப்பம் வீணாவதா என்கின்றனர். எடுத்துக்காட்டிற்காக இரு கட்சிகளைமட்டும் குறிப்பிட்டாலும், வாக்குகள் அடிப்படையில் கட்சிக்கான சார்பாண்மை இல்லையே என்பதுதான் சுட்டிக்காட்டப்படுகிறது. நம் நாட்டு மக்களாட்சி முறையில் ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை பெற்றவர் வென்றவாகிறார். நாடு முழுமையிலுமான வாக்குகள் அடிப்படையில் வெற்றியைக் கணக்கிட இயலாது. கட்சிகள் ஒட்டு மொத்த வாக்குகள் அடிப்படையில் சார்பாண்மை வேண்டுவதைவிடத் தொகுதி அடிப்படையில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக இதனைக் காரணமாகக் காட்டி நாம் கட்சிமுறைத் தேர்தலுக்கு முதன்மை கொடுத்தோமென்றால் நம்நாட்டு மக்களாட்சி முறை அடியோடு சிதைந்து விடும். மாறாக, நிழல் சட்ட மன்றம், நிழல் நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளை நாம் உருவாக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டாமிடம் பெற்றவர்களைக் கொண்டு சட்டம் இயற்றும் அதிகாரமில்லாத, அரசின் நிறைகுறைகளை ஆராய்கிற, மக்களின் குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுகின்ற நிழலவைகளை உருவாக்க வகைசெய்ய வேண்டும். இதனால், சட்ட மன்றங்களும் நாடாளுமன்றங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் விழிப்புடன் செயல்படவேண்டிய நிலைக்கு உந்தப்படும்.
ஆனால், இவ்வாறு நடைமுறைப்படுத்தினாலும் அடுத்த நிலைகளில் வாக்குகள் பெற்ற கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற வாதம் நிகழும்.கட்சிகள் மக்களின் உள்ளங்கவர்ந்து வாகை சூடுவதில் கருத்து செலுத்தாமல் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டுக் கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் சார்பாண்மை வேண்டுவது நமது மக்களாட்சி முறைக்கு ஏற்றதல்ல.
விரிவான கருத்தாய்வுகளை வெளிப்படுத்தவேண்டிய தலைப்பு இது. எனினும் சுருக்கமாக, நாடு முழுமையிலுமான வாக்குகள் அடிப்படையில் சார்பாண்மை என்பது வேட்பாளர்களைப் புறந்தள்ளி கட்சி முற்றாளுமைக்கு வழி வகுக்கும் என்பதால் விலக்கப்பட வேண்டிய ஒன்று எனலாம்.
ஆராய்ந்து பார்த்தால், செயல்பாட்டு முறைகளால் பண நாயகமாக மக்கள் நாயகம் மாறுவதைச் செம்மைாயன ஆட்சிமூலமே தடுக்க வேண்டும். மாறாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிறந்த மக்களாட்சி முறையைச் சீரழிக்கக்கூடாது. மக்களுக்கான ஆட்சிதான் மக்களாட்சியே தவிர, கட்சிகளுக்கான ஆட்சி அல்ல. குறைகளற்ற மக்களாட்சியை நிலவச் செய்து மாண்புகள் எய்துவோம்! மனம் மகிழ வாழ்வோம்!
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
(திருவள்ளுவர், திருக்குறள் 464)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 131, சித்திரை 18, 2047 மே 01, 2016
Leave a Reply