தோழர் தியாகு எழுதுகிறார் 1
தோழர் தியாகு எழுதுகிறார் – முன்னுரை
இனிய அன்பர்களே!
தாழி மடலுக்கு நான் எந்த வரம்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஊடகம் இடமளிக்கும் வரை உள்ளடக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும்.
தாழி மடலில் தன்வரலாறு, பிறர் வரலாறு, தன்னாட்டு வரலாறு. பன்னாட்டு வரலாறு, பொருளியல், அரசியல், மெய்யியல், கலை இலக்கியம், ஐயந்தெளித்தல், ஐயந்தெளிதல் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ இடம்பெறச் செய்வோம். சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், விலங்கிற்குள் மனிதர்கள் … இவற்றின் தொடர்ச்சியாக எழுத வேண்டியவை ஏராளம். சொல்லடித்தல் என்று நான் குறிப்பிடும் புதிய சொற்களின் உருவாக்கம். செவ்வகராதி படைக்க வேண்டும். அரைகுறையாக நிற்கும் தூய தமிழாக்க முயற்சிகள் தொடர வேண்டும். பழைய, புதிய நூல்களின் அறிமுகம். எழுதுபொருளுக்கு எல்லை என்பதே இல்லை! நீங்களும் முன்மொழியலாம். எழுதலாம்.
தாழியில் வெண்ணெய்த் தாழியும் உண்டு. முதுமக்கள் தாழியும் உண்டு. எதுவானாலும் உடையும் வரைதான் அல்லது புதையும் வரைதான். விரைந்திடு தோழா! என்பது எனக்கான என் கட்டளை!
தோழர் தியாகு எழுதுகிறார் 1
கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு
(இப்படி ஒரு பாலியல் கொள்கை?)
பொதுமைக் குமுகத்தில் பாலியல் விருப்பங்களையும் காதலையும் நிறைவு செய்து கொள்வது எப்படி இருக்கும்? அது சிக்கலற்றதாக இருக்கும்; எளிமையானதாக இருக்கும். கோப்பைத் தண்ணீர் அருந்துவது போல் அவ்வளவு எளிமையானதாக இருக்கும். முகன்மையற்றதாக (‘சர்வ சாதாரணமானதாக’) இருக்கும். அலட்டிக் கொள்ள வேண்டியிராத ஒன்றாக இருக்கும். பாலியல் தொடர்பான இந்தக் கொள்கை — இந்தக் கோட்பாடு — கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு (glass of water theory) எனப்படுகிறது.
பொதுமைக் குமுகத்தில் இதுதான் பாலுறவுக் கொள்கை என்றால், பொதுமைக் குமுகத்தைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்திடும் பொதுமையரின் பாலுறவுக் கொள்கையும் இப்படி இருப்பதுதானே இயல்பு? பாலியல் விடுமைக்காரர்கள் இப்படித்தான் கேட்கின்றார்கள். பாலுறவு தொடர்பான இந்தப் போக்கு பொதுமைக் கொள்கை என்றும் புரட்சிக் கொள்கை என்றும் போற்றப்படும் நிலை ஏற்பட்டால் என்னாகும்?
பாலியல் விடுமை (sexual freedom) என்ற பெயரால் இந்தக் கொள்கையை முன்னிறுத்துவோர் உண்டு. இப்படி முன்னிறுத்தும் அனைவரும் சொந்த வாழ்வில் பாலியல் விடுமையைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருப்பார்களோ என்று ஐயுற வேண்டா. ‘கற்புநிலை’யில் கண்டிப்பாக இருந்து கொண்டே நேர்மையாகவும் உண்மையாகவும் பாலியல் விடுமையை ஒரு கொள்கையாக வலியுறுத்துகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
‘பாலியல் விடுமை’ குறித்தும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு’ குறித்தும் உருசியப் புரட்சியின் தலைவர் மா இலெனின் பேசியுள்ளார். நெருங்கிய நண்பரும் அணுக்கத் தோழருமாகிய கிளாரா செட்கினுடன் உரையாடும் போது இலெனின் கூறிய பல செய்திகளையும் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளில் கிளாரா சுவைபடப் பதிவு செய்கிறார். நினைவுக் குறிப்புகளின் இந்தப் பகுதிக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு: ‘பெண்கள், மணவாழ்வு, பாலியல்’ என்பதாகும். இலெனின் சொல்வதைக் கேட்போம்:
புரட்சி நடந்து முடிந்து விட்டது. பாலுறவுச் சிக்கல்கள் தொடர்பில் ‘ஒழுக்கம் பற்றிய முதலாண்மைப் பார்வைகளை’த் திருத்தியமைக்கும் துடிப்பு நிறைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. போரும் புரட்சியும் நடந்த நிலைமைகளில் பழைய கருத்தியல் விழுமியங்கள் மறைந்து போயின, அல்லது நம்மைக் கட்டிப் போடும் படியான ஆற்றலை இழந்து விட்டன. போராட்டப் போக்கில் புதிய விழுமியங்கள் மெல்ல மெல்ல உருப்பெற்று வருகின்றன. மாந்தர்களிடையிலான –– ஆணுக்கும் பெண்ணுக்குமான —உறவுகளில் உணர்ச்சிகளும் எண்ணங்களும் புரட்சிய மாற்றங்கள் அடைந்து வருகின்றன. தனியொருவரின் உரிமைகளுக்கும் முழுமையின் உரிமைகளுக்கும் இடையே — தனியொருவர்களின் கடமைகளில் — புதிய எல்லைகள் வரையப்பெறுகின்றன. இது தொடர்பில் ஒரு குழப்பநிலை காணப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் சட்டென்று நடந்து விடாது. இது பையப்பைய நடந்தேறுகின்ற ஒன்று. இது வலிநிறைந்த செயல்வழி.
குறிப்பாகச் சொன்னால் பாலியல் உறவுமுறைகள், மணவாழ்வு, இல்லறம் (குடும்பம்) — இவற்றில்தான் மாற்றத்தின் வலி கூடுதலாக உள்ளது.
முதலாண்மை+ (முதலாளித்துவ) மணவாழ்வின் சீர்கேடு பற்றி இலெனின் குறிப்பிடுவது இன்றைக்கும் நமக்குப் பொருத்தப்பாடு கொண்டுள்ளது. நமக்குள்ள சாதி மதச் சிக்கல் இந்தச் சீர்கேட்டை இன்னுங்கூட மோசமாக்கி விடுகிறது.
சீர்கேடு! ஊழல்! குப்பை! — இலெனின் சீறுகிறார்; முதலாண்மை (முதலாளித்துவ) மணவாழ்வை இப்படித்தான் சாடுகிறார். ஆணுக்கு விடுமை! பெண்ணுக்கு அடிமைத்தனம்! பாலியல் ஒழுக்கம், பாலுறவுகள் குறித்து வஞ்சகப் பொய்மை! இதைப் பார்க்கும் போது துடிப்பான நல்ல உள்ளம் கொண்டோர், உயர்வானவர்கள் ஆழ்ந்த அருவருப்பு அடைவார்கள்.
முதலாண்மை மணவாழ்வின் கட்டுத்தளையும் முதலாண்மை அரசுகளின் இல்லறச் (குடும்ப) சட்டங்களும் இந்தக் கேடுகளையும் பூசல்களையும் கடுமையாக்கி விடுகின்றன. புனிதமான தனிச் சொத்துடைமையின் வலிமை அப்படி! காசுக்கு விலைபோவதை, கெட்டழிவதை, இழிசெயல் செய்வதைப் புனிதமாக்கி விடுகின்றன. முதலாண்மைக் குமுகத்துக்கே உரிய வாடிக்கையான பொய்மை வேறு.
இந்த அழுகலுக்கும் போலித்தனத்துக்கும் எதிர்ப்பு தலைதூக்கி வருகிறது. தனியொருவரின் உணர்ச்சிகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வலிமைபொருந்திய பேரரசுகள் ஆட்டம் கண்டு, பழைய ஆட்சிமுறைகள் முறிவடைந்து வரும் நேரத்தில், ஒரு குமுக உலகம் முழுவதும் மறைந்து வரும் நேரத்தில், இன்பம் துய்க்கும் விருப்பமும் வேட்கையும் கட்டுக்கடங்கா வேகம் பெறுவது எளிதாகிறது. பாட்டாளியப் புரட்சிக்கு இணையாகப் பாலுறவிலும் மணவுறவிலும் ஒரு புரட்சி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிக்கல்கள் பின்னிக் கிடக்கின்றன. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள தவிப்பு எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதே என்கிறார் இலெனின். இக்காலத்தில் (அவர் காலத்திலும் நம் காலத்திலும்) இளையோர்க்குப் பாலியல் மனக்குறைகள் உள்ளன. அகவைக்கே உரிய வேகத் துடிப்புடன் அவர்கள் கலகம் செய்வதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்.
இந்த இளைஞர்களிடம் போய், முற்றுந்துறந்த முனிவர்களாக இருக்கச் சொல்வது, அழுக்கடைந்த முதலாண்மை ஒழுக்கத்தை அறிவுறுத்துவது…. இதை விடப் பெரிய பொய்மை வேறில்லை என்கிறார் இலெனின். பாலுணர்வு உடல்வகையில் வெளிப்படும் அகவையில் அதுவே மனத்தின் முதற்கவலை ஆகி விடுமானால் பெரிதும் கவனத்துக்குரியது.
அப்படியானால், என்ன சொல்ல வருகிறார் இலெனின்? பாலியல் விடுமைதான் தீர்வு என்கிறாரா? ‘கோப்பைத் தண்ணீர்க் கொள்கை’யைப் பரிந்துரைக்கிறாரா? நாளை சொல்கிறேன்.
+முதலாளித்துவத்திற்கு முதலிய என்னும் சொல்லைத் தோழர் தியாகு கையாள்கிறார். பொருட்குழப்பம் வரலாம் என்பதால் அவருடன் கலந்துபேசி முதலாண்மை எனக் குறித்துள்ளேன்.
தரவு: தியாகுவின் தாழி மடல் 1
Leave a Reply