தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை
(தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் தொடர்ச்சி)
முத்துக்குமார் மரண சாசனம்
நமக்குக் கைகாட்டி; கலங்கரை விளக்கம்!
தமிழ்நாட்டின் அரசியலை ஒரே ஓர் உயிர், ஒரே ஒரு நொடியில் முற்றிலும் மடைமாற்றி விட்டது. தமிழரின் நலனைக் காவு கொடுக்கும் தன்னலப் பதவிவெறி அரசியல் பின்னங்கால் பிடறியில் அடிவிழ ஓட்டம் பிடித்து விட்டது. வாக்கு வேட்டை அரசியல் அம்மணப்பட்டு அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறது. தமிழ் மக்களை விடுவிக்கும் தமிழ்த் தேசிய சமூக நீதி அரசியல் வீறு கொண்டு எழுகிறது. அது சுட்டெரிக்கும் சுடு நெருப்பாய் சுழன்றெரியத் தொடங்கி விட்டது. முத்துக்குமார் மூட்டிய தீ தமிழ்ப் பகையை முற்றாக அழித்தெரிக்காமல் அணையப் போவதில்லை.
ஆனாலும் ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது. வெற்றுணர்ச்சிக்கு ஆட்பட்டு வீணாகி விடக் கூடாது. செல்ல வேண்டிய திசைவழியிலும், சென்றடைய வேண்டிய குறியிலக்கிலும், தீர்மானிக்க வேண்டிய முடிவுகளிலும் தெளிந்த தெளிவும், ஊசலாட்டமில்லா உறுதியும் வேண்டும். முத்துக்குமாரே நமக்கு வழிகாட்டுகிறார். “கடந்த முறை நடந்தது போல், உங்கள் போராட்டத்தின் பலன்களைச் சுயநலமிகள் திருடிக் கொள்ள விட்டு விடாதீர்கள்” என எச்சரிக்கிறார். அவரின் மரண சாசனம் நமக்குக் கைகாட்டி, கலங்கரை விளக்கம்!
முத்துக்குமார் இந்திய ‘வல்லாதிக்க அரசியலை’யும் தமிழ்நாட்டின் ‘கங்காணி அரசியலை’யும் தெளிவாகப் படம் பிடிக்கிறார். ” இந்திய ஏகாதிபத்தியம்” என்ற சொல்லாடல் அவரின் சரியான அரசியலைக் காட்டுகிறது. இந்திய வல்லாதிக்கம் அண்டை நாடுகளை அரட்டி மிரட்டும், மக்களைச் சுரண்டிக் கொழுக்கும். இந்தியத் துணைக்கண்டத் தேசிய இன மக்களைத் தன் காலடியில் நசுக்கிக் கசக்கி அரத்தம் குடிக்கும். அது கையெட்டும் தொலைவில் ஒரு தேசிய இனம் விடுதலை பெற்று விடச் சம்மதிக்குமா? அது தன் சுரண்டலைப் பாதிக்கும் என்பதை உணராமல் இருக்குமா? அதனால்தான் ஈழ விடுதலைப் போராட்டத்தை எவ்வழியிலும் – முத்துக்குமரர் குறிப்பிடுவதைப் போல், “திருட்டுத்தனமாக”வேனும் – அழித்து ஒழித்து விடத் துடிக்கிறது.
அதிகாரவர்க்கம் பற்றியும் ஆழமான புரிதலை முத்துக்குமார் கொண்டுள்ளார். “பயங்கரவாதமென்பது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரசுபரப் புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று” என்கிறார். பாக்கித்தானும் இந்தியாவும் சேர்ந்து உருவாக்கியதோ இல்லையோ, பயங்கரவாதம் என்பது இன்று உலகளவில் வல்லாதிக்க ஆற்றல்கள் தங்கள் நலன்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சூத்திரமாய் உள்ளது. வல்லாதிக்கம் தொடர்ந்து நிலைபெற எப்பொழுதுமே அதற்கு ஓர் எதிரி தேவை; எதிரி இல்லையென்றாலும் அது எதிரியை உருவாக்கிக் கொள்ளும். 9/11 நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்க வல்லாதிக்கம் இராக்கு, ஆபுகானித்தான் பயங்கரவாதங்களைத் தோற்றுவித்தது. வெனிசுலா, ஈரான், வடகொரியா என அப்பட்டியலை நீட்டிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வல்லாதிக்கத்திற்கு பாகித்தான் பயங்கரவாதம், காசுமீர் பயங்கரவாதம், அசாம் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலப் பயங்கரவாதம், மாவோயிசப் பயங்கரவாதம் எனப் பல பயங்கரவாதங்கள் தேவைப்படுகின்றன. இப்பட்டியலில் விடுதலைப்புலிப் பயங்கரவாதம் இப்பொழுது முன்னிலை பெறுகிறது. கூடிய விரைவில், தமிழ்த் தேசியப் பயங்கரவாதமும் இதில் இடம்பெறலாம். “நாளை நம் மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?” என்ற முத்துக்குமாரின் கேள்வி இதையே நம்மிடம் எச்சரிக்கையாய் முன்வைக்கிறது.
இந்திய வல்லாதிக்கம் பற்றிய புரிதலுக்கு இந்தியக் கட்டமைப்புப் பற்றிய தெளிவு வேண்டும். முத்துக்குமாரிடம் இந்தத் தெளிவும் புரிதலும் இருந்திருக்கின்றன. இந்தியா ஒரு நாடன்று: ஒரு துணைக்கண்டம். அங்குப் பல்வேறு தேசிய இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நாடுகள் “மாநிலங்களாக” இந்தியச் சிறைக்குள் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன. முத்துக்குமாரிடம் பிழையற்ற இந்த வரலாற்றறிவு இருந்ததனால்தான். “அரசுகளில் அங்கம் வகிக்கக் கூடிய உங்கள் தேசிய இனங்கள்” என்று எழுத முடித்துள்ளது. தனித்தனி தேசிய அரசுகளைக் கொண்டிருக்க வேண்டிய தேசிய இனங்கள் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பொருள்? “ஈழத்திலிருக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்” என்னும் தொடரில் உள்ள “இந்தியர்”, “நம் அரசால்” ஆகிய சொற்கள் நாம் இந்தியர் இல்லை, இது நம் அரசன்று என்று சொல்லாமல் சொல்கின்றன. இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களிடையேயும் இத்தகைய புரிதல் இருக்க வேண்டும் என முத்துக்குமார் விழைகிறார். இந்தப் புரிதல்தான் “எதிர்காலத்தில் ஒரு நவநிர்மாண் சேனாவோ, சிரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும்” என ஆணி அடித்தாற்போல் சொல்கிறார். இங்கு அவர் தமிழ்நாட்டிற்கு எதிர்வரும் ஆபத்தைத் தனித்துச் சுட்டினாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கும் அனைத்துத் தேசிய இனங்களையுமே எச்சரிக்கிறார். இந்துத்துவாவின் அகண்ட பாரதக் கனவைத் தகர்க்க இதுவே வழி.
“காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!” “தேர்தல் காலத் தமிழர் கலைஞர் “தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காகச் சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய சூரப்புலி” என்கிற முத்துக்குமாரின் கருத்துச் செறிவுமிக்க தொடர்கள் எத்தனை எத்தனை உண்மைகளைத் தொட்டுக் காட்டுகின்றன! இங்கே அவர் கருணாநிதியை மட்டுமா சாடுகிறார்? இல்லை, இல்லை. செயலலிதா தொடங்கி விசயகாந்து, சரத்துகுமார் முடிய உருப்படியாய் எந்த அதிகாரமும் இல்லாத முதல்வர் நாற்காலிக்காய் நாக்கைத் தொங்கப் போட்டலையும் எல்லா அரசியல் களவாணிகளையும் தோலுரிக்கிறார். பதவி பெற வேண்டும். பெற்ற பின் ‘டெல்லிக்குச் சலாம்’ போட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சுருட்டிக் கொள்ள வேண்டும். இதுதானே தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல்காரர்களின் கொள்கை, குறிக்கோள், இட்சியம் எல்லாமே.
தமிழ்நாட்டில் இன்று போராட்ட அரசியல் பழங்கதையாகி விட்டது. போராட்ட அரசியலைப் புதைகுழிக்கு அனுப்பிய பெருமை திராவிடக் கட்சிகளுக்கு, குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அதிலும் குறிப்பாகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கே உண்டு. தன் கட்சியை மாநாடுகள் மட்டுமே நடத்தும் கட்சியாகத் தீர்மானம் நிறைவேற்றி தில்லிக்கு மனுப்போடும் கட்சியாக, மக்களை ஏமாற்ற மாபெரும் பேரணிக் காட்சிகள் காட்டும் கட்சியாகச் சிதைத்து போராட்ட அரசியல் என்ற சொல்லாடலையே ‘கழக’ அகராதியிலிருந்து நீக்கி விட்டார். மாற்றாக ‘வாரிசுப் போராட்ட அரசியல்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டார். தன்னையும் தன் கட்சியையும் மாற்றிக் கொண்டதோடு நிற்காமல், முத்துக்குமார் அடங்காச் சினத்துடன் கட்டிக் காட்டுவதைப் போல், “தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகசர் கொடுக்கும் சாதியாக” மாற்றி விட்டார். முத்துக்குமார் அறைகூவி அழைக்கிறார், “அந்த மரபை அடித்து உடையுங்கள்!”
கூட்டங்கள், மாநாடுகள், தீர்மானங்கள், பேரணிகள் எல்லாமே வேண்டும்தான். மக்களிடையே கருத்துப் பரப்புரை செய்ய அவை பெரும் அளவில் உதவும். ஆனால், அவற்றோடு நின்று விடக் கூடாது. கருத்தால் எழுச்சி பெற்ற மக்களை ஒன்றுதிரட்டி நம் நோக்கத்திற்காய்ப் போராட வேண்டும். போராட்டம், போராட்டம், தொடர்ந்து போராட்டம். போராட்டம் மட்டும்தான் நம் இறுதி இலக்கிடம் கொண்டு சேர்க்கும்; போராட உள்ள உறுதி வேண்டும். கொள்கைப் பிடிப்பு வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அருப்பணிப்பு உணர்வு வேண்டும். போராட்டத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லக் கட்டுக் கோப்பான அமைப்பு வேண்டும். போராட்ட அரசியல் தேவையை முத்துக்குமார் உணர்ந்திருந்ததால்தான், “தன் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக” வைத்துப் போராடும்படி அவரால் அறைகூவல் விடுக்க முடிந்துள்ளது.
ஆனால், தமிழ் மக்கள் தமிழர்களாய் ஒன்றுதிரளப் பெருந்தடையாக இருப்பது முதலில் சாதி, அடுத்தது மதம். பார்ப்பனியம் நம்மை ஒன்றன் மேல் ஒன்றான சாதி அடுக்குகளாகப் பிரித்து, எல்லா அடுக்குகளுக்கும் மேலடுக்காய்ப் பார்ப்பனரை உட்கார வைத்து நாம் சமமாய் ஒன்றுசேர்வதற்கான எல்லா வழிகளையும் அடைத்து விட்டுத் தொடர்ந்து கோலோச்சுகிறது. சாதிகளைக் கடந்து தமிழர்களை ஒன்றுதிரட்டத் திணறுகிறோம். சாதிப் பகைமையில் தமிழர்கள் வெந்து போவதைக் கண்டு நொந்து போகிறோம். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஒவ்வொருவரும் அவரவர் வழியில் போராடி வருகிறோம். இதோ தன்னேரில்லாத் தனிப்பெரும் ஈகி முத்துக்குமார் வழிகாட்டுகிறார். ”நமக்குள்ளிருக்கும் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக் கொள்ள இதுதான் தருணம்.” என்ன தருணம் இது? ஒட்டுமொத்தத் தமிழர் நலனுக்காய்ப் போராடும் தருணம். ஈழத் தமிழர் நலனுக்காய் மட்டுமின்றி இங்குள்ள தமிழர் நலன் நோக்கியும் போராடும் தருணம்.
ஈழத் தமிழனுக்காய், காவேரி, முல்லைப் பெரியாறு, பவானி, பாலாறு ஆற்று உரிமைகளுக்காய், மொழி உரிமைகளுக்காய் என இவ்வாறு தமிழர் பொது நலன்களுக்காய்ப் போராடுவதன் மூலமே சாதியைத் தகர்க்க முடியும்; தமிழனாய்த் தலை நிமிர முடியும். இவ்வாறு ஒன்றுதிரண்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இங்கு சாதி உணர்வுகள் தூண்டித் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றன. முத்துக்குமார் இதைச் சரியாகவே புரிந்து கொண்டிருப்பதால்தான் “மாணவர்களின் தமிழின உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு, இந்திய உளவுத்துறை சாதிய உணர்வைத் தூண்டி விட்டு, அம்பேத்துகர் சட்டக் கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம்” என எழுதுகிறார்.
இந்தியத் துணைக்கண்டத்துச் “சகோதரத்” தேசிய இனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முத்துக்குமார் அன்பிற்குரிய சருவதேசச் சமூகத்தின் மனசாட்சியையும் நம்பிக்கைக்குரிய ஒபாமாவின் மனசாட்சியையும் நோக்கிக் கேள்வி தொடுக்கிறார். வெள்ளை இனத்திமிருக்குக் குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொற்களாலேயே சாட்டையடி கொடுக்கிறார். “என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாக வந்திருக்கும்” என்று.
ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்குக் காரணமாயிருக்கும் சருவதேசச் சமூகத்தின் மௌனம் எப்பொழுது உடையும்? எனக் கேள்வி தொடுத்து விட்டு அன்பின் திருவுருவமாம் முத்துக்குமார் இப்படி எழுதுகிறார்: “நியாயத்தின்பால் பெருவிருப்புக் கொண்ட ஒரு மக்கள்சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிசின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால் எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டு விடச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.” கல்லையும் கனியவைக்கும் முத்துக்குமாரின் உருக்கமான இந்த வேண்டுகோள் சருவதேசச் சமூகத்தின் மவுனத்தைக் கலைத்து உறுதியாய்ப் பேச வைக்கும்.
இவ்வாறு, முத்துக்குமார் உள்ளூர் அரசியல் தொடங்கி பன்னாட்டு அரசியல் முடிய ஆழந்தகன்ற அரசியல் புரிதல்களோடு தம் கடிதத்தை எழுதியுள்ளார். சிங்களப் பத்திரிகையாளர்களையும் சிங்களத் தம்பதியரையும் பாதுகாக்கும்படி அவர் வேண்டுவது அவரது மனிதநேயப் மாண்பை வெளிப்படுத்துகிறது. கடிதத்தில் ஒரு சில இடங்களில் அவர் புரிதலில் குறைகள் இருக்கலாம். இராசீவு கொலை பற்றி எழுதி இருப்பது, இந்திரா, எம்ஞ்சியார் ஆகியோரைத் தமிழீழத்தின் சிறு தெய்வங்களாக அவர் வருணித்திருப்பது காங்கிரசிலுள்ள சீர்காழி இரவிச்சந்திரன் போன்ற உண்மை இன உணர்வாளர்களை வென்றெடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் முத்துக்குமாரின் பார்வை தெளிவானது; சரியானது. தமிழீழ மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதின் விளைவாய்த் தோன்றியதே தமிழீழ விடுதலைப் போராட்டம். முத்துக்குமாரின் சொற்களில் கூறுவதென்றால், “புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர காரண கர்த்தாக்கள் அல்லர். (They are not the reason, just an outcome)” எனவே போரை நிறுத்து எனக் கோரிக்கை வைப்பதும், அதுவும் போரை நடத்துகின்ற இந்தியாவிடமே கோரிக்கை வைப்பதும் திசை திருப்பும் முயற்சிகள். அதே போலப் புலிகளை ஆயுதங்களைக் கைவிட வலியுறுத்துவதும் வஞ்சக வலைவிரிப்புதான். ஈழத் தமிழரின் உரிமைகள் முழுதாய் மீட்டெடுக்கப்படும் போது, தாங்கள் விரும்புகின்ற ஆட்சியை அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெறும் போது போர் முடிவுக்கு வரும்; அப்போது புலிகளின் ஆயுதங்களுக்கு வேலை இருக்காது.
ஆனால் முத்துக்குமாரே ஓரிடத்தில் ஆயுதங்களைக் கைவிடுவது பற்றிப் பேசுவார்; “சிங்களர்கள் தாங்கள் நேர்மையாக நடந்து கொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவதன் மூலமாக மட்டுமே போராளிகளை ஆயுதத்தைக் கீழே வைக்கச் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அடுத்த வரியிலே “கடந்த கால அரசுகள் எவையும் அப்படிச் செயல்படவில்லை” என்பார். தட்லி சேனநாயகா – செல்வா ஒப்பந்தம் தொடங்கி குப்பைக்குக் கூட உதவாத இந்திய – இலங்கை ஒப்பந்தம் முடிய ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டதே இலங்கை வரலாறு. சிங்களப் பேரினவாத அரசியலில் நேர்மை, நம்பிக்கை என்பனவற்றிற்கு இடமே கிடையாது. ஈழத் தமிழர்களும் அவர்களின் அரசியல் தலைமையான விடுதலைப் புலிகளும் இதை நன்கு அறிவர். தமிழக மக்களான நாமும் ‘நம்பிக்கை’ அரசியலில் சுவனத்தோடும் விழிப்போடும் இருக்க வேண்டும்.
இல்லையெனில் கருணாதிதி மன்மோகன் சிங்கை நம்பச் சொல்லுவார். மன்மோகன் சிங்கு இராசபக்குசேவை நம்பச் சொல்லி நம்மை நடுக்கடலில் கவிழ்த்து விடுவார்.
முத்துக்குமாரின் கடிதத்தில் ஒரு சிறு செய்திப் பிழையும் உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் தாயகம் சீனா எனக் குறிப்பிடுகிறார். அவரின் பெயரும், அவரது தோற்றமும் முத்துக்குமாரிடம் தவறான மனப்பதிவை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் காரணமாய் பான் கீ மூன் தென் கொரியாவைச் சேர்ந்தவர் என்பது மறந்து போயிருக்கலாம். ஐ.நா பொதுச் செயலாளருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. அவரால் சீனாவுக்கும் ஆதரவாய் இயங்க முடியாது. ஈழப் போரையோ அல்லது உலகில் நடைபெறும் எந்தப் போரையுமோ அவரால் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்காவின் தாளங்களுக்கேற்ப ஆட மட்டுமே முடியும்.
முத்துக்குமாரின் கடிதத்தைத் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் சரியான புரிதலுடன் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவரின் இறுதி விருப்பத்தை அவர்கள்தாம் நிறைவேற்ற வேண்டும். தமிழ் நாட்டில் இன்று ‘சரியான தலைமை’ இல்லை என்ற அவரின் கவலை போக்கப்பட வேண்டும். அவரே குறிப்பிடுவதைப் போல ஈழத்திற்கு வாய்க்கப் பெற்ற “உன்னதத் தலைவன் நமக்கில்லையே என்ற ஏக்கம் வேண்டாம். இது போன்ற கையறு காலங்கள்தான் அப்படிப் போன்ற தலைவர்களை உருவாக்கும்.” இன்று இளைய தலைமுறையிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி வீணாகிவிடக் கூடாது. 1965இல் ஏற்பட்ட தவறு மீண்டும் நேர்ந்து விடக் கூடாது. சுயநலமிகள் கையில் மீண்டும் தலைமை சென்று விடக் கூடாது.
இளைஞர்கள் விழிப்பாய் இருக்க வேண்டும். உணர்ச்சியின் உந்தலில் இழுபட்டு திசைமாமறி விடாமல் கவனங்கொள்ள வேண்டும். உணர்ச்சி வேண்டும். ஆனால் அது அறிவு வழிப்பட்டதாய் அமைய வேண்டும்.
அதற்குக் கொள்கையில் தெளிவு வேண்டும். கொள்கைத் தெளிவு பெற அறிவியல் பார்வை வேண்டும். வள்ளுவர் சொன்ன மெய்ப்பொருள் காணும் தேடல் கைவரப் பெற வேண்டும். அடுத்து அக்கொள்கையை வென்றெடுக்கும் உழைப்பார்வம் வேண்டும். அதற்காகத் தன்னை ஈந்து கொள்ளும் ஈக உணர்வு (அர்ப்பணிப்பு) வேண்டும். குறிக்கோளைச் சென்றடைய ஒழுங்கமைவுடன் கூடிய அமைப்பாய் ஒன்றுதிரள வேண்டும். முத்துக்குமார் விரும்பும் “சரியான தலைமை” உருவாக இதுவே வழி.
தமிழ்த் தேசம் ஏட்டில் (2009 பிப்ரவரி)
தரவு: தாழி மடல் 84
Leave a Reply