(தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை – தொடர்ச்சி)

ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1)

1.       எழுபத்தைந்து ஆண்டு முன்பு 1948 சனவரி 30 மாலை 5.17 – தில்லியில் பிருலா மாளிகையில் அனைத்து மத வழிபாட்டுக் கூட்டத்துக்காகப் புல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்த 78 வயது முதியவர் காந்தியாரை இந்துமத  வெறியன் நாதுராம் கோட்சே மிக அருகிலிருந்து சுட்டுக் கொலை செய்தான். ஆர்எசுஎசு இந்துத்துவக் கோட்பாடுகளால் கொலை வெறி கொண்டவன் கோட்சே என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. காந்தி கொலை வழக்கில் கோட்சேக்கும் நாராயண் ஆபுதேக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கோபால் கோட்சே வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று பதினாறாண்டுக் காலம் சிறையில் கழித்து விடுதலையாகி விட்டான். சதித் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்த சாவர்க்கார் நீதிமன்றத்தில் விடுதலை வாங்கி விட்டார். கோட்சேயுடன் தூக்கில் தொங்கியிருக்க வேண்டியவர் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

2.      இது கடந்தகாலக் கதைதான் என்றால் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்க வேண்டா. ஆனால் காவித் திகிலியம் நாளது வரை தொடர்ந்து வெறியாட்டம் போடுகிறது. இந்திய வரலாற்றில் படுமோசமான திகிலியச் செயலாகிய பாபர் மசூதி இடிப்பை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. மசூதி இடிப்பு குற்றம்தான் என்று சொல்லி விட்டு குற்றவாளிகளிடமே அந்த இடத்தைக் கொடுத்து இராமர் கோயிலும் அரசே கட்டிக் கொடுக்கச் சொல்லும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வாங்குவதற்கு மயக்குப்பொறி(Honey trap) கூட பயன்படுத்தப்பட்டது. வெட்கக் கேடு!

3.      ஆர்எசுஎசு வெறும் திகிலிய அமைப்பு மட்டும்தான் என்றால் அதனை வெல்வது அவ்வளவு கடினமில்லை. அது நச்சுப் பாம்பு என்று தெரிந்து கொண்டால் போதாது, பத்துத் தலைப் பாம்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சங்(கப்)பரிவார் என்று ஒரு கூட்டமே உள்ளது. பசுரங் குதல், விசுவ இந்து பரிசத்து, இந்து முன்னணி, சேவா பாரதி, ஏபிவிபி, பிஎம்எசு என்று எத்தனையோ முகங்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் அரங்கில் பாரதிய சனதா கட்சி! அனைத்துக்கும் வழிகாட்டுவது இந்துத்துவம் என்ற நச்சுக் கொள்கை. வருண தருமம், மனு தருமம், வைதிகம், பிராமணியம் என்று பல பரிமாணங்கள்!

4.      இந்தக் கொள்கையைச் செயலாக்க வோட்டரசியலும் வேட்டரசியலும் இரட்டை வழிகள். இரண்டும் ஒன்றுக்கொன்று துணை. சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து மதம், சாதியின் பெயரிலான மோதல்களைத் தூண்டி அரசியல் ஆதாய வேட்டையாடுவது ஆர்எசுஎசு வழி. இந்துக்களின் வாழ்வுக்கு ஆபத்து என்ற பொய்க் கதையாடலை வளர்த்து, இசுலாமியருக்கும் கிறித்துவர்களுக்கும் எதிரான வெறுப்புணர்வை மூட்டி, இந்துக்களின் ஒரே பாதுகாவலன் பாசக என்று படங்காட்டி வாக்கு வேட்டை ஆடுவது. முசுலிம் என்றால் காசுமீர், காசுமீர் என்றால் பாகித்தான்! இவற்றை எதிர்ப்பதுதான் தேசபக்தி! மதவெறி சார்ந்த இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பி வாக்கு வேட்டை ஆடுவது, மக்களை மத அடிப்படையில் இருதுருவமாகப் பிரிக்கும் துருவப் பிரிப்பு (polarization) அரசியல் உத்தி! கடைசியாக உ.பி. தேர்தலில் யோகி ஆதித்தியநாத்து வென்றது இப்படித்தான்.

5.      ஆர்எசுஎசு நச்சுக் கருத்துகளை உறுதியாக மறுதலித்து, உழைக்கும் மக்கள் சாதிமதங்கடந்து ஒன்றுபடுவதற்கு அறிவுத் தளத்தில் வழிகாட்டும் பெருமக்களைப் படுகொலை செய்து திகிலூட்டுவதும் ஆர்எசுஎசு உத்தியே. கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவிரி இலங்கேசு இவர்களைக் கொன்றதும் கோட்சேயின் ஆர்எசுஎசு தோட்டாக்கள்தாம் என்பதில் ஐயமில்லை.   

ஆர்எசுஎசு காவித் திகிலியத்துக்கு அந்தக் கும்பலிலிருந்து வெளியேறிய முன்னாள் சங்கிகள் தரும் அகச் சான்றுகள் சிலவற்றை நாளை பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
86