(தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 1/2 -தொடர்ச்சி)

இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2

இப்போது அதிபராகியுள்ள இராசபட்சர் சந்திரிகாவால் தலைமையமைச்சர் பதவிக்குப் பொறுக்கியெடுக்கப்பட்டவர். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகவே எவ்வித அரசியல் தடையுமின்றி அவர்களால் ஒரு தீர்வை முன் மொழிந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. புலிப்படையை அழித்தொழித்துத் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் ஆசைத் திட்டத்தைக் கைவிடவும் இல்லை. அதனால் புலிகளோடு உடன்பாடு காண்பதை விடவும் இந்தியாவோடு இராணுவ உடன்படிக்கை செய்து கொள்வதில்தான் சந்திரிகா அக்கறை காட்டினார்.

புலிப்படை போர்நிறுத்தத்தை உண்மையாகக் கடைப் பிடித்தது மட்டுமல்ல, தன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மக்கள் சார்ந்த குடியியல் ஆட்சியமைப்பை நிறுவியது மட்டுமல்ல, இடைக்காலத் தீர்வுக்கான முன்மொழிவுகளையும் வெளிப்படையாக அறிவித்தது. சென்ற ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் புலிப்படையின் இந்த முன்மொழிவுகளை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளர்களே தமிழ்ப் பகுதிகளில் பெருவாரியாக வெற்றி பெற்றார்கள். தமிழீழ மக்களின் சனதாயகக் கட்டளையைப் பெற்ற இந்த முன்மொழிவுகளை ஏற்று, அந்த அடிப்படையில் இடைக்கால ஆட்சிமன்றம் அமைக்கவோ, குறைந்தது அது பற்றிப் பேச்சு நடத்தவோ சந்திரிகா- இராசபட்சர் ஆட்சி முன்வந்ததா என்றால் இல்லை.

புலிப் படையின் முன்மொழிவுகள் தமிழீழ மக்களின் சனநாயகக் கட்டளையைப் பெற்ற பிறகும் சிங்கள அரசு அவற்றை ஏற்க முன்வரவில்லை என்பது குறித்து இந்து என்ன சொன்னது? புலிகளின் முன்மொழிவு இடைக்காலத் தனிநாட்டுக்கானதே தவிர, இடைக்கால ஆட்சி மன்றத்துக்கானது அல்ல என்று பழித்தது.

இப்போது இராசபட்சரே ஒற்றையாட்சிக் கொள்கை கொண்டவர் என்றும், விக்கிரமசிங்கரைக் கூட்டாட்சிக் கொள்கையிலும் அதிகாரப் பகிர்விலும் நம்பிக்கை கொண்டவர் என்றும் படம்பிடிக்க முயல்கிறது இந்து. விக்கிரமசிங்கரைப் பற்றிய இந்தப் படப்பிடிப்பு உண்மையென்றால், புலிகளின் முன்மொழிவுகளை அவர் ஆதரித்திருக்க வேண்டும், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் பேச்சு நடத்தவாவது கோரியிருக்க வேண்டும்.

உண்மை என்னவென்றால், சந்திரிகா, விக்கிரமசிங்கா, இராசபட்சர் எல்லாருமே அடிப்படையில் சிங்களப் பேரினவாதிகள்தாம். இவர்களுக்கிடையில் அவ்வப்போது வெளிப்படும் வேறுபாடுகள் அணுகுமுறை தொடர்பானவையே தவிர அடிப்படைக் கொள்கை தொடர்பானவை அல்ல. வழிமுறை போரானாலும் பேச்சு வார்த்தையானாலும் சிங்களப் பேரின ஒடுக்குமுறையைப் பாதுகாப்பதே இவர்களின் குறி.

இலங்கையின் இனச்சிக்கலுக்கு எந்தத் தீர்வு காணப்பட்டாலும் அது சிங்கள மக்களின் ஏற்பைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதே சிங்களத் தலைவர்கள் கடைப்பிடிக்கும் சனநாயகத்தின் (?) எல்லைக்கோடு. அதாவது தமிழர்களின் வருங்காலத்தை சிங்களர்கள் உறுதி செய்யட்டும் என்று பொருள். இரு சிங்களத் தலைவர்களில் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதன் மூலம் இந்தப் பேரினவாத அணுகுமுறையையே இந்துவும் பகிர்ந்து கொள்கிறது.

இனச் சிக்கலுக்கு எந்தத் தீர்வு கண்டாலும் அது தமிழ் மக்களின் ஏற்பைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதே புலிப்படையின் பார்வை. தமிழ் மக்களின் வருங்காலத்தைத் தமிழ் மக்களே தீர்வு செய்யட்டும் என்பது இதன் பொருள். இது நியாயமானது. வரலாற்று ஏரணம் கொண்டது மட்டுமல்ல, உலகமும் பன்னாட்டுச் சட்டங்களும் அறிந்தேற்றுள்ள சுயநிர்ணய உரிமைக் கொள்கையின்படியும் சரியானது.

இந்த சனநாயகத் தீர்வைத்தான் இனவாதம், பிரிவினைவாதம் எனத் தூற்றுகிறது இந்து. இவ்வகைத் தீர்வுக்கான போராட்டத்தைத்தான் அது பயங்கரவாதம் என்கிறது.

கடந்த 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழத் தனியரசுக்கான சனநாயகக் கட்டளையைத் தமிழ்மக்கள் வாக்குப் பெட்டி வழியாக வழங்கினார்கள். அன்று தொட்டு இன்று வரை எந்தத் தேர்தலிலும் இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் எந்தவொன்றையும் அவர்கள் ஆதரித்ததில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தேர்தலையும் புறக்கணித்தே வந்துள்ளனர். சிங்கள அரசு நடத்திய தேர்தல்களை மட்டுமல்ல இந்திய அமைதிப்படை திணித்த தேர்தல்களையும் கூட அவர்கள் புறக்கணிக்கவே செய்தார்கள்.

ஆதிக்க அரசு நடத்தும் தேர்தல்களைப் புறக்கணிப்பதே உலகெங்கும் விடுதலை இயக்கங்களின் பொதுமரபு.

தேர்தல் தொடர்பான புலிகளின் அணுகுமுறையில் புதிய மாற்றம் ஏதும் வராத போது, “கொடிய சூழ்ச்சித் திட்டம்” என்று எப்படிக் குற்றஞ்சாட்ட முடியும்? ஒரு விடுதலை இயக்கம் தன் குறிக்கோளை அடைவதற்கு மேற்கொள்ளக் கூடிய எந்த அணுகுமுறையையும் வெளியிலிருந்து குற்றம் சொல்லிக் கொண்டிருக்க மற்றவர்கள் யார்?

ஓடையின் கீழ்ப்பக்கத்தில் தண்ணீர் குடிக்கும் ஆடுதான் மேல்பக்கம் தண்ணீரைக் குழப்பிவிட்டது என்று ஓநாய் குற்றஞ்சாட்டிய கதையாகக். கடந்த காலத் தேர்தல்களில் தமிழீழ மக்கள் இரு சிங்களக் கட்சிகளில் எந்த ஒன்றையும் ஆதரிக்க மறுத்ததற்கும் கூட புலிகளின் கொடிய சூழ்ச்சித் திட்டமே காரணம் என்று இந்து வாதிடக்கூடும்.

சிங்களக் கட்சிகளில் எது குறைந்த தீமை என்று பார்த்து அதைத் தேர்ந்தெடுக்கிற (lesser evil) சந்தர்ப்பவாதம் புலிகளிடம் என்ன, தமிழீழ மக்களிடமே எடுபடாது. சிங்கள அரசு நடத்தும் தேர்தலைப் புறக்கணிக்கும் படி அவர்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. வரலாறு ஏற்கெனவே சொல்லித் தந்துவிட்டது. இரு முக்கிய வேட்பாளர்களுக்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லை என்று புலிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்த பின், விக்கிரமசிங்கரைத் தோற்கச் செய்து போருக்கு வழிகோலுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்துவுக்குப் பிடித்தமான இந்திய இடதுசாரிக் கட்சிகள் சோனியாவை நம்புவது போல், விடுதலைப்புலிகள் விக்கிரமசிங்கரை நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஈழ மக்களை அறியாதவர்கள், அவர்களின் வரலாற்றையும் அறியாதவர்கள்.

இராசபட்சரும் அவரை ஆதரித்த சிங்கள இனவெறிக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் போர்நிறுத்தத்தை எதிர்த்தும் கூட்டாட்சிக் கொள்கையை எதிர்த்தும் முழங்கினார்கள் என்பதால் நாளையே அவர்கள் போர் தொடுத்து விட முடியாது. அரசியல் களத்திலும் போர்க்களத்திலும் புலிகளின் வலிமையை அவர்கள் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, சிங்கள மக்களின் அமைதி விருப்பத்தை மீறுவதும் எளிதன்று, இந்தியா, நார்வே, அமெரிக்கா, சப்பான், பிரிட்டன் என்று பல காரணிகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கும்.

சிங்களப் பேரினவாத அரசு இறுதியில் போர் என்ற வழிமுறையைக் கையிலெடுக்குமானால், அதற்கான பழியைப் புலிகள் மீது சுமத்துவதற்கு இப்போதே இந்து தயாராகிறது. அல்லது புலிகளை நம்பாதே, புலிகளுடன் பேசாதே, தயங்காமல் போர் தொடு! என்று இராசாபட்சரைத் தூண்டி விடும் கொடிய சூழ்ச்சித் திட்டமாகவும் இருக்கலாம்.

இந்து தன் சூழ்ச்சியை மறைக்கத்தான் புலிகள் மீது சூழ்ச்சிப் பழி சுமத்துகிறதோ?

சந்திரிகாவின் சிங்கள இரத்தினம் (சிறிலங்கா ரத்னா) என். ராமிடமிருந்து வேறு எதை எதிர்பார்ப்பது?

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 94