(தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால் – தொடர்ச்சி)

சீமான் ‘தமிழவாளரா?

திமுக ஏற்கெனவே அதற்குரிய வழியில் பாசகவை வீழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரத்தைத் தீர்மானிக்கிற வரை தேர்தல் போராட்டமும் அதில் குடியாட்சியம் பெறுகிற வெற்றியும் முகன்மையானவை. ஆர்எசுஎசு ஏவலின் படி மோதியும் அமித்துசாவும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாசக ஆட்சியை நீக்கமற நிறுவ எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சிக்குத் தடையாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சி பாசிச எதிர்ப்பு அணியில் இடம்பெறுவது ஒரு புறஞ்சார் உண்மை. அகஞ்சார்ந்து அக்கட்சி இதை உணர்ந்து ஏற்றாலும் ஏற்கவில்லை என்றாலும் இந்தப் புறஞ்சார் உண்மையைக் கணக்கில் கொள்ளத் தவறுவது குடியாட்சியத்தை நலிவுறுத்தும்.

இவ்வாறு புறஞ்சார்ந்து பாசக எதிர்ப்பு அணியில் இடம்பெறும் மற்றக் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடுள்ளது. திராவிட இயக்கத்தின் அரசியல் விளைச்சல் என்ற முறையில் திமுக பாசிச எதிர்ப்புக்குக் கூடுதல் தகுதி பெறுகிறது. தந்தை பெரியார் தொடங்கி, திராவிட இயக்கம் நடத்தியுள்ள பார்ப்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு இயக்கம் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் ஆற்றியுள்ள பணியின் தாக்கம் (அரசியலில் பல விட்டுக் கொடுப்புகள் இருந்த போதிலும்) இன்றளவும் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் அரணாகத் திகழ்கிறது.

பெரியாரும் திராவிட இயக்கமும் ஆற்றியுள்ள அடிப்படையான சமூகநீதிப் பணியை உணர்ந்தேற்று ஆக்கவழியில் திறனாய்வு செய்து அதன் மீது புதிய சூழலுக்கேற்பத் தமிழ்த் தேசியச் சமூக நீதிக் கருத்தியலையும் அரசியலையும் கட்டியெழுப்புவதுதான் நம் கடன். தோழர் பெ. மணியரசனைப் போன்றவர்கள் இந்தக் கடமையைச் செய்யத் தவறி விட்டார்கள். அவர்கள் திமுக அரசியல் மீதான எதிர்ப்பைப் பெரியார் எதிர்ப்பாகவும் திராவிட இயக்க எதிர்ப்பாகவும் மாற்றி மலினப்படுத்தி விட்டார்கள்.

சீமானை இந்தக் கணக்கில் நான் சேர்க்கவே இல்லை. அவர் நிலையான கொள்கை இல்லாத குழப்பவாதி. அறிவியல் பார்வையற்றவர். குடியாட்சியப் பண்பில்லாதவர்.

பாண்டேக்கு நன்றி தெரிவித்ததாலேயே சீமானை ஆரியத்துவவாளர் போல் பேசக் கூடாது என்கிறார் சிபி. இடதுசாரிகளை முன்பொரு முறை இந்தியாவாளர்கள் என்று எழுதியிருந்தார். சீமான் ஆரியவாளரோ இந்தியவாளரோ அல்லவென்றால் தமிழவாளரா? தமிழ் குறித்து அவர் கட்டும் மீப்புனைவியத் தோரணங்கள் அவரைத் தமிழ்த் தேசியர் ஆக்கி விட மாட்டா.

சீமானின் சொல்லும் செயலும் அவரைப் போலித் தமிழ்த் தேசியராகவே நமக்கு உணர்த்தி நிற்கின்றன. அவருக்குத் தத்துவ முலாம் பூசுகிறார் பெ. மணியரசன். தமிழ்த் தேசிய உணர்வு பெற்ற – உணர்வு மட்டும் பெற்ற – பல்லாயிரம் இளைஞர்களின் தன்னளிப்பு மிக்க உழைப்பை வீணாக்கி வருகிறார் சீமான் என்ற உண்மையை அன்பர் சிபி போன்றவர்கள் விரைவில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

இனிய அன்பர்களே! 

சென்ற பிப்பிரவரி 14 நாள் மாலை தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வடவர் வருகையும் தமிழ்நாடும் என்ற தலைப்பில் என் உரையின் சுருக்கம் உங்கள் பார்வைக்கு:

“வடவர் வருகையும் தமிழ்நாடும்” 1

தமிழ்நாட்டில்  வடவர் வருகை என்பது ஒரு பெரிய சிக்கலாகியிருக்கிறது.  இது மக்கள்தொகை இயைபை மாற்றக் கூடிய அளவிற்குச் சென்று விடும் என்ற அச்சத்தை பலரும் தெரிவித்து வருகிறார்கள். தொடர்வண்டிப் போக்குவரத்தின் வழியாக அன்றாடம் ஏராளமானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தேநீர்க் கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை அரசின் தொடர்வண்டித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கிடைக்கக் கூடிய வேலைகளுக்காக அவர்கள் போட்டியிடுகிறார்கள்.

 வேலை கொடுக்கிற இடத்தில் இருப்பவர்கள் அரசு நிறுவனங்களானாலும் தனியாரானாலும்  கூலியைக் குறைப்பதற்கு உழைப்புச் சந்தையில், வழங்கல் (சப்ளை) மிகையாகி வேலையில்லாப் பட்டாளம் பெருகுவதைத்  தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  நாம் இந்த உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுக்குப் புலப்படும் நிகழ்வுகளை மட்டும் பார்த்து, அடியாழத்தில் மறைந்துள்ள மூல காரணங்களைக் காணத் தவறினால் தீர்வு நாட முடியாது.

 வடவர் வருகை என்று சொல்கிற போது இந்திய நாட்டினுடைய வட பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள்; வேறு சில மாநிலங்களில் இருந்தும் வருகிறார்கள் இங்கு எனக்கு முன்பு ஒரு தோழர் சுட்டிக் காட்டியது போல்  இங்கிருந்து வடக்கே மேற்கே மற்றப் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அது புலம்பெயர் தொழிலாளர் சிக்கல் என்பதை மகுடை (கொரோனா) பெருந்தொற்றுக் காலத்தில் நாம் கண்கூடாகப் பார்த்தோம். தொழில் வளர்ச்சிக்கும் சந்தை விரிவாக்கத்திற்கும் என்று சொல்லி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், நாற்கரச் சாலைகள்  ஏழை எளிய மக்கள் வெறுங்காலோடு கொடும் வெயிலில் நூற்றுக்கணக்கான அயிரைப் பேரடி (கிலோமீட்டர்), ஆயிரம் அயிரைப் பேரடி  நடந்தே செல்வதற்குரிய சாலைகளாக மாற்றப்பட்டன. சின்னஞ்சிறு குழந்தைகள் கால்களில் செருப்பு கூட இல்லாமல் கொதிக்கும் வெயிலில் அனலால் துடிக்க துடிக்கச்  சென்ற காட்சிகளை எல்லாம் அந்த நேரம் பார்த்தோம் 

ஏன் இப்படி?  இந்த ஊரிலே பிறந்து வாழ்கிற இளைஞன் எங்கே வேலை வாய்ப்பைத் தேடுவான்?  இந்த ஊரிலேயேதான் தேடுவான்.  அல்லது பக்கத்தூரிலேயே தேடுவான். இதுதான் மனித இயற்கை. வெளியிடங்களுக்குப் போனாலும் போய் விட்டுத் திரும்பி வந்து விடத்தான் விரும்புவார்கள் பறவைகள் கூட இரை தேடி சென்றதற்குப் பிறகு இரவு கூடு திரும்பத்தான் ஆசைப்படுகின்றன. அவை கூடு திரும்புவதற்குத் தடை இல்லை என்றால் மனிதர்கள் கூடுதிரும்புவதற்கு மட்டும் தடை உள்ளதே என்று வருந்திப் பாடுகிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்