(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும் 3

 மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் இந்தச் சிக்கல் தீரும்.  

நாம்  தெருச் சண்டைகள் போட்டு இவர்களை  விரட்ட முடியாது.  அது சரியான நடைமுறையல்ல.  இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? சாதிச் சண்டைகள், சமயச்  சண்டைகளை ஊக்கப்படுத்திக் குளிர் காயக் கூடிய கூட்டம் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டுத்  தொழிலாளர்களுக்கும் மோதல், தெருவிலே சண்டை, கல்வீச்சு என்ற செய்திகளை உற்சாகத்தோடு பரப்புகிறார்கள். இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினால்  தாங்கள் சுலபமாக உள்ளே நுழைந்து விடலாம் என்பது அவர்களின் கனவு. நாம் இதற்கு மாற்றான சட்டங்களைக் கூற வேண்டும்.

 ஏன்?  நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது; நடைபெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். உங்களுக்கும் எனக்கும் பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ நரேந்திர மோதிதான் பிரதமராக இருக்கிறார். எதனால்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது.  எடப்பாடி பழனிச்சாமிக்கும் தாலின்தான் முதலமைச்சராக இருக்கிறார்.  ஏன்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது.  எடப்பாடி பழனிச்சாமியைப் பிடிக்கவில்லை  என்றாலும் அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். ஏன்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஈரோட்டில் திருமகன் ஈவேரா மறைந்தவுடனேயே வேறொருவரை அந்தக் கட்சி அழைத்து நீதான் எம்எல்ஏ என்று அறிவிக்க முடியவில்லை. தேர்தல் நடைபெறுகிறது. ஏன்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஆகச், சட்டத்தின் ஆட்சி என்பதை நாம் உணர்ந்தோமானால் இது ஒரு தனிஆளுடைய சிக்கல் அல்ல, இது ஒரு தனியாள் முடிவு செய்கிற விடயம் அல்ல – நமக்குப் பாதுகாப்பான சட்டங்கள் வேண்டும்.

 இப்போது ஒரு சட்டம் இருக்கிறது, அரசமைப்புச் சட்டம். அதில் சில பாதுகாப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதுகாப்புகள் நமக்குப் போதவில்லை. அந்தச் சட்டத்தை வரைகிற காலத்தில் அண்ணல் அம்பேத்துகர் அவர்கள் சொன்னார்கள், நான் ஏன் இந்த வேலையில் உட்கார்ந்து இருக்கிறேன் என்றால்  சட்டப்படியான சில காப்புக் கூறுகளை (legal safeguards)  ஏற்படுத்த வேண்டும்; இட ஒதுக்கீட்டிற்கான காப்புக் கூறுகளை ஏற்படுத்த வேண்டும். அதுபோல நாம் இன்றைக்கு முன்வைக்கிற கோரிக்கை  தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு  முன்னுரிமை வேண்டும். இதுதான் நம் கோரிக்கையினுடைய சாரம். நாம் முற்றுரிமை கேட்கவில்லை, முன்னுரிமைதான் கேட்கிறோம் அவரவர் நாட்டில் அவரவர் முன்னுரிமை கேட்கட்டும். அதுதான் உலகமெங்கும் கேட்கிறார்கள். நாம் ஒன்றும் உலகத்தில் இல்லாத ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. ஆனால் இந்த முன்னுரிமையை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான காப்புக் கூறுகள் இந்த அரசமைப்புச் சட்டத்தில் இல்லை.

என்ன  இல்லை என்று  சொல்கிறேன்? ஏன் சொல்கிறேன்? அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்றால் 50 நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (UNITED STATES OF AMERICA).  இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கொடி உண்டு, கீதம் உண்டு, தனித்தனிச் சட்டம் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேரவை, ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆளுநர், ஒவ்வொன்றுக்குமான நிருவாகமெல்லாம் இருக்கிறது. தனித் தண்டனைச் சட்டம் கூட இருக்கிறது இவையெல்லாம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. இதுதான் வேண்டும் அமெரிக்கக் கூட்டாட்சி அரசமைப்பு ஒருபுறம், அந்தந்த மாநிலம் அல்லது நாட்டுக்கான அரசமைப்பு மறுபுறம். அதை யாரும் வேண்டா என்று சொல்லவில்லை இருக்கிறது அதற்கு இந்தியாவில் ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது –  நாங்கள் சொல்கிறோம், அந்த அரசமைப்புச் சட்டம் இருக்கட்டும், எங்கள் மக்கள் இந்தியாவில் இருக்க விரும்புகிற வரை இருக்கட்டும், விரும்பவில்லை என்றால் அப்போது வேண்டா. ஆனால் அது இருக்கும் போதே எங்களுக்கு தமிழ்நாட்டின் குடியுரிமை வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று ஒன்று கொண்டுவந்தார்கள். அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு ஒரு தனி பிரிவு வைத்திருக்கிறார்கள். அந்தக் குடியுரிமைச் சட்டப்படி இந்த ஏதிலியர்களுக்குக் குடியுரிமை இல்லை அவர்கள் ஒரு திருத்தம் கொண்டு வந்து என்ன செய்தார்கள் என்றால், பாக்கித்தான் ஆபுகானித்தான் வங்கதேசத்தில் இருந்து வந்திருந்தார்கள் என்றால் சட்டவிரோதமாக வந்திருந்தால் கூட அவர்கள் இந்துவாக, கிறித்தவர்களாக, சீக்கியர்களாக, பார்சிகளாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஒரு சலுகை கொடுத்து சேர்த்துக் கொள்வார்கள்.

இவையெல்லாம் இருந்தால் என்று சொல்லி விட்டு எதைச் சொல்லவில்லை என்றால் முசுலிமாக இருந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

 அந்த நாடுகள் எல்லாம் முசுலிம் நாடுகள். அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் யாராக இருப்பார்கள் முசுலிம்களாக இருப்பார்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார்கள்

 சரி, முசுலிமல்லாதவர்களைத்தான் சேர்த்துக் கொள்வோம் என்று ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவருகிறீர்கள், இலங்கையில் இருந்து வந்துள்ள தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள். அதற்கு அடுத்தபடி கிறித்தவர்கள். அவர்களுக்குப்  பொருந்துமா என்றால் இல்லை இல்லை. அவர்களுக்குப் பொருந்தாது இது அங்கே மட்டும் சிறப்புத் திருத்தம் என்றார்கள்.

அப்போது நாம் என்ன கேட்டோம்? எங்களுடைய ஈழத்  தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டும். ஏதிலியர்களாக 50 வருடங்களாக இருக்கிறார்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்குக் குடியுரிமை கொடு என்று கேட்டோம், கொடுக்கவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்