தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு
(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி)
கடலூர் இரவு
சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது.
ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது நேதாசி சுபாசுசந்திர போசுக்கும், சப்பானியச் சிறையிலிருந்து தப்பியது இராணுவத் தளபதி பி.பி. குமாரமங்கலத்துக்கும், வேலூர் சிறையிலிருந்து தப்பியது ஏ.கே. கோபாலனுக்கும் புகழார்ந்த சாதனைகள் என்பதில் ஐயமில்லை. இவ்வகைச் சாதனையாளர்களை முழுமையாகப் பட்டியலிடுவதானால் நீண்டு கொண்டே போகும்.
இவர்களே இப்படியென்றால்… அரசை மாற்றுவதல்ல, தகர்த்து நொறுக்குவதே புரட்சி என்று ஆயுதமேந்திப் போராடிச் சிறைப்பட்டவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்வதிலும் அதிசயம் ஒன்றுமில்லை . அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால்தான் அதிசயம்.
பொன் நாடார் கொலைக்கு நீதி கேட்டு கடலூர் சிறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் தோழர் ஏ.எம். கோதண்டராமனுக்குத் துணைநின்றவர்களுக்கு அவர் ஒரு புரட்சிக்காரர் என்பது தெரியும். வாய்ப்புக் கிடைத்தால் கோதண்டராமன் தப்பிச் சென்று விடுவார் என்பதும் தெரியும். ஆகவேதான் அவரிடமிருந்து ஓர் உறுதிமொழி கோரப்பட்டது:
“இந்தப் போராட்டம் முடியும் வரை சிறையிலிருந்து தப்பிச் செல்வதில்லை என்று நீங்கள் எங்களுக்கு உறுதி கொடுக்க வேண்டும்.”
“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”
“தோழரே, நம் கைதிகள் இப்போதிருக்கும் மனநிலையில் எதுவும் செய்வார்கள். சிறை வாயிலை உடைத்துத் திறக்கச் சொன்னால் திறந்து விடுவார்கள். மதிலேறிக் குதிக்கச் சொன்னால் குதிப்பார்கள். எல்லாவற்றையும் கொளுத்தச் சொன்னால் கொளுத்துவார்கள். எவ்வளவு பெரிய காவலர் படை வந்தாலும் நாம் பணியப் போவதில்லை. தாக்குதல் என்று வந்தால் சிறையே போர்க்களமாகி விடும். அந்தக் குழப்பத்தில், அந்தக் களேபரத்தில் நீங்கள் சிறையிலிருந்து தப்புவது ரொம்பச் சுலபம். தப்பிச் செல்வது உங்களுக்குச் சரிதான். ஆனால் இந்தப் போராட்டம்? நீங்கள் இருப்பதால்தான் எதிரி பயப்படுகிறான். நீங்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் எங்களை அடித்து நொறுக்கிக் கூடையில் அள்ளிப் போயிருப்பான். நம் ஆட்களும் நீங்கள் இருப்பதால்
கட்டுப்பாடாக இருக்கிறார்கள். இல்லையேல் அவனவன் விருப்பத்திற்கு எதாவது செய்து விடுவான். எல்லாம் வீணாகி விடும். நாங்களே கூட உங்களை நம்பித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று உறுதி கொடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். உயிரைக் கொடு என்றாலும் கொடுக்கிறோம்.”
ஏ.எம். கே. சிறிது நேரம் மௌனமாகி விட்டார். இடது கை விரல்களால் மூக்குச் சரிவுகளைத் தேய்த்து, மீசையைத் தடவி, பிறகு உள்ளங்கையில் முகவாயை நட்டுக் கொண்டு சொன்னார்:
“சரி… சரி… நன்றாகப் புரிகிறது. இந்தப் போராட்டத்தில் ஒரு முடிவு
தெரியும் வரை நான் தப்பிச் செல்ல மாட்டேன். அந்த எண்ணத்துக்கே இடம் தர மாட்டேன். இது உறுதி. என்னை நம்புங்கள்.”
“உங்களை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறோம்? நீங்கள் சொன்னதே போதும், இனி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.”
பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏ.எம். கே.யிடம் நான் கேட்டேன் :
“நீங்கள் இப்படி உறுதி கொடுத்தீர்களே, உண்மையிலேயே தப்பிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”
“அந்த வாய்ப்பு அப்போதே இருந்தது. ஆனால் தப்பிச் செல்லக் கூடாது என்றுதான் இருந்தேன்.”
“ஏன்?”
“வாய்ப்புக் கிடைத்தால் தப்பிச் செல்ல வேண்டும் என்பது பொதுவாகச் சரி. ஆனால் மக்களைத் திரட்டி நிறுத்தி விட்டுக் களத்திலிருந்து ஓடிப் போவது சரியல்ல. சிறை என்று பார்த்தால் ஓடத்தான் தோன்றும். போராட்டக் களம் என்று பார்த்தால்தான் அங்கிருந்து ஓடக் கூடாது என்று புரியும்.”
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் காவலர் படை உள்ளே நுழையும், பிறகு கண்ணீர்ப் புகை, தடியடி… ஏன், துப்பாக்கிச் சூடு கூட நிகழலாம். அந்தக் கைதிகள் எல்லாவற்றுக்கும் அணியமாய் இருந்தார்கள்.
ஏ.எம். கே.வுக்குத் துணைநின்று போராட்டத்தை ஒழுங்கு செய்து வழி நடத்திக் கொண்டிருந்த குழுவில் ஒருசிலர் ஆயுள் கைதிகள் – வேறு சிறைகளிலிருந்து ‘ மாற்றப்பட்டவர்கள்.
பாளையங்கோட்டைச் சிறையில் சோறே இல்லாமல் தொடர்ந்து நான்கைந்து நாள் கேழ்வரகுக் களி மட்டும் கொடுக்க உறுதியாகப் போராடித் தடியடிக்கு ஆளாகிச் சிறைமாற்றல் செய்யப்பட்ட சில ஆயுள் கைதிகள் இப்போது கடலூரில் ஏ.எம்.கேவுக்குத் துணைநின்றார்கள். ஆனால் கறுப்புக் குல்லாய்க் கைதிகள் சிலரும் தேர்ந்த தொழிற்சங்க ஊழியர்களைப் போல் செயல்பட்டுப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கொண்டுவந்ததுதான் வியப்புக்குரியது.
கறுப்புக் குல்லாய்களை ஒன்றுபடுத்தவும் முடியாது, போராடச் செய்யவும் முடியாது என்று அது வரை நிலவி வந்த தப்பெண்ணம் அந்தக் கடலூர் இரவில் நொறுங்கிக் கொண்டிருந்தது. சோறு, குழம்புக்காகப் போராடத் திரளாத அந்தக் கைதிகள், ஒரு சக கைதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்தார். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்தார்கள்
“கைதி செத்தால் காக்காய் செத்தாற்போல்” என்ற சிறைப் பழமொழிக்குச் சவால் விடுத்தது அந்தப் போராட்டம். ஆகவேதான் கறுப்புக் குல்லாய்க்குள்ளிருந்த மானுடத்தை அந்தப் போராட்டத்தால் வெளிப்படுத்திக் காட்ட முடிந்தது.
குற்றவாளிகளை மனிதர்களாக்குவது ஒடுக்கு முறையல்ல, ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமே என்பது அங்கே மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டது.
ஏ.எம்.கே. அதிகம் பேசக் கூடியவரல்ல. நீண்ட உரைகள் நிகழ்த்தும் வழக்கமும் அவருக்கு இல்லை. தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அப்படித்தான். சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் சொல்வார். எதையும் பூசி மெழுகிப் பேச அவருக்குத் தெரியாது.
அந்தப் பதற்றமான இரவிலும் அவர் அவராகவே இருந்தார். இடையிடையே தேவையைப் பொறுத்துச் சுருக்கமாகப் பேசினார். சந்தேகங்களைப் போக்கினார். அனைவருக்கும் துணிவூட்டினார். வழி நடத்தும் பொறுப்பிலிருந்த தோழர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். யாரும் அன்றிரவு உறங்கவில்லை..
நள்ளிரவு தாண்டி விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது வாயிற்பக்கம் சலனம் தெரிந்து அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அதிகாரி, கா.க.(S.P.) மற்றும் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். ஏ.எம்.கேயிடம் மாவட்ட ஆட்சியர் சருமா சொன்னார் :
”நிலவரத்தை அரசுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களும் சொல்லி விட்டார்கள். சடலத்தைக் காலையில்தான் அகற்றுவோம். முறையான பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். விசாரணையும் நடைபெறும். இப்போது நீங்கள்…”
”நடவடிக்கை என்றால், கொலைக் குற்றத்துக்காகச் சிறை அதிகாரிகளைக் கைது செய்வீர்களா? அரசு அப்படித்தான் ஆணையிட்டுள்ளதா?”
“விசாரணைக்குப் பிறகுதானே நடவடிக்கை எடுக்க முடியும்?”
”சரி….அது வரை பணி விலக்கமாவது பண்ணுவீர்களா? இதே கண்காணிப்பாளர், இதே சிறை அதிகாரிகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்துவதை எப்படி ஏற்க முடியும்?”
”அது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இப்போது…”
“என்ன இப்போது?”
”இப்போது நீங்கள் கதவடைப்பிற்குள் போய் விட வேண்டும். அரசாங்கத்தில் இதை மிகவும் கடுமையாகக் கருதுகிறார்கள். எங்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.”
“இல்லை , அது முடியவே முடியாது. என்ன நடந்தாலும் நடக்கட்டும். உருப்படியாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிட முடியாது.”
“ஓர் இரவு முழுவதும் சிறையில் கதவடைப்பிற்குள் போகவில்லை என்றால்,அரசு அதைக் கடுமையாகக் கருதும்…”
“சிறைக்குள் கைதி அடித்துக் கொல்லப்படுவதை நாங்கள் அதை விடக் கடுமையாகக் கருதுகிறோம்.”
”அவர்கள் போய் விட்டார்கள். காவல்துறைப் படையோடு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கைதிகள் சுதாரிப்பாய் இருந்தார்கள். ஆனால் காவல்துறைப் படை வரவே இல்லை. விடிந்த பின் மாவட்ட ஆட்சியர் வந்து, “உங்கள் கோரிக்கைப்படியே சிறைக் கண்காணிப்பாளரும் இதர சிறை அதிகாரிகளும் பணி விலக்கம் செய்யப்படுறார்கள், இன்னும் சிறிது நேரத்தில் சிறைத் துறைத் துணைத் தலைவர் (D.I.G.) வந்து விசாரணையைத் தொடங்குவார்” என்று தெரிவித்தார். போராட்டம் இந்த அளவில் வெற்றிகரமாக முடிந்தது.
சிறைத் துறை துணைத் தலைவர் (D.I.G.) வந்த பிறகு ஏ.எம். கே.யை அழைத்துப்
பேசினார்.
‘’நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள அனைவரையும் பணி விலக்கம் செய்து விட்டோம் போதுமா?”
“போதாது.”
”ஏன்?”
“கொலைக் குற்றத்துக்கு பணி விலக்கம்தான் தண்டனையா?”
“இல்லையில்லை, இப்போதைக்குப் பணி விலக்கம். விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை .”
“கைது செய்து கொலை வழக்குப் போட வேண்டாமா? என்பதுதான் கேள்வி.”
“…..”
“போகட்டும். இந்த அளவுக்கு உங்களை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கே இவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது. இது வரை எத்தனையோ கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் முதன் முதலில் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளோம். ஆனால் ஓர் எச்சரிக்கை.”
“என்ன?”
“விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். சாட்சிகளை மிரட்டுவது, வேறு சிறைக்கு மாற்றுவது எதுவும் கூடாது.”
“அதற்கு நான் உறுதியளிக்கிறேன்.”
“கொஞ்ச நாளைக்கு அப்படி இப்படி நாடகமாடி விட்டுப் பழையபடி எல்லாரையும் வேலைக்கு எடுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால் நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். கொலைக்குக் கொலைதான். என்னை நீங்கள் வேறு சிறைக்கு மாற்றி விட்டாலும் அது நடக்கும். இங்கு கைதிகளே குழு(squad) அமைத்து அதைச் செய்து முடிப்பார்.”
“இல்லை! இல்லை!… உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.”
“குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் உங்கள் மருமகன் அவருக்காக எந்தச் சலுகையும் காட்ட மாட்டீர்கள் அல்லவா?
“மாட்டேன். எல்லாருக்கும் சட்டம் ஒன்றுதான்.”
” எங்களுக்கும் உங்களுக்குமா?”
சி.து.து.த.(D.I.G.) சிரித்து மழுப்பி விட்டுப் புறப்பட்டார்.
சிறிது காலம் கழித்து விசாரணை நடைபெற்றது. இடைக்காலத்தில் ஏஎம்கே சாட்சிகளை முறையாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.
விசாரணையின் போது ஏஎம்கேயும் சாட்சி சொன்னார். விசாரணை அதிகாரியாக வந்த சி.து.து.த.(D.I.G.) கேட்டார் :
”நீங்கள் நீதிமன்றத்தையே புறக்கணிக்கிறவர்.. இந்த விசாரணையில் எப்படிப் பங்குபெறுகிறீர்கள்?”
“என் கொள்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டா. நான் சொல்வதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அது போதும்.”
விசாரணை முடிந்த பிறகும் முடிவு வராமலே சில ஆண்டுகள் கழிந்தன. 1977 அல்லது 78 இல் விடுதலையாகி வந்து ஏ.எம்.கே. சென்னையில் தங்கியிருந்த போது ஓர் உணவகத்தில் சிறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். பொன்நாடார் கொலைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர்.
ஏஎம்கே அவரிடம் கேட்டார் : “என்ன ஐயா எப்படியிருக்கிறீர்கள்?”
“நன்றாக இருக்கிறேன்.. எல்லாம் உங்கள் புண்ணியத்தில்தான்.”
“அது எப்படி?”
“உங்களால்தான் பணி விலக்கம் ஆனேன். இப்பொழுது தொழில் நன்றாக நடக்கிறது. பணிவிலக்கத்தில் இருப்பதால் முக்கால் சம்பளமும் கிடைக்குது — வசதியாக இருக்கிறேன். நன்றிங்க.”
முடிவில், சிறைக் கண்காணிப்பாளர் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்ப எடுக்கப்பட்டு வேலைக்குத் திரும்பினார்கள். கண்காணிப்பாளர் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகச் சிறை வரலாற்றில் ஒரு கைதியின் மரணத்துக்காக வேலையிழந்த ஒரே சிறைக் கண்காணிப்பாளர் அவர்தான். ஆனால் அவரை வேலைநீக்கம் செய்வதற்கு அரசு காட்டியிருந்த காரணம்தான் பெரிய கொடுமை!
(தொடரும்)
தோழர் தியாகு எழுதுகிறார்
தரவு : தாழி மடல் 18
Leave a Reply