தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ!
(தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் தாெடர்ச்சி)
செந்தமிழ்க்கோ!
இனிய அன்பர்களே!
இனவழிப்புத் துயரத்தில் அமிழ்ந்த ஈழ மண்ணிற்கு மிக நெருக்கமான ஒரு தமிழ்நாட்டுப் புள்ளியில்… கோடியக்கரைக் கடலில் உப்புநீரில் கால் நனைத்துப் பின் கரையேறிக் கதிரொளி முதுகுதொட ஊக்கத்துடன் நெடுநடைப் பயணத்தைத் தொடங்கிய போது எங்கள் அணியில் முதல் வீரரராக இயக்கக் கொடியேந்தி நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ. யார் இந்தத் தாடிக்காரர்? எனக்கு அதுதான் அவரோடு முதல் அறிமுகமே. எங்கள் அணியில் அவர்தான் மூத்தவர். ஆனால் அயராச் சுறுசுறுப்பில் அவர்தாம் இளைஞர்.
2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பின் கவிந்திருந்த இருண்ட சூழலில் சோர்வகற்றி எழுந்து நடக்க ஒரு திட்டம் வகுத்தோம். அதுவே தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணமாக வடிவம் பெற்றது. என் தலைமையில் காவிரித் தீரத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் ஊர் ஊராக நடப்பதெனத் திட்டம். சனவரி 25ஆம் நாள் கோடியக்கரையில் தொடங்கி 47 நாள் நடந்து மார்ச்சு 12ஆம் நாள் குடந்தையில் நிறைவு செய்தோம். பயணம் முழுவதிலும் பிடித்த கொடியை ஒருநொடியும் தாழ்த்தாமல் உயர்த்திய படியே நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ! உணவருந்தும் போது கூட கொடியைக் கீழே வைக்க மாட்டார். நடைப்பயணத்தில் அரட்டை விளையாட்டு மற்றவற்றைத் தவிர்க்குமாறு இளம் தோழர்களிடம் வலியுறுத்தும் போது செந்தமிழ்க்கோவைப் பாருங்கள் என்றுதான் சொல்வேன்.
அது ஒரு நீண்ட நடைப்பயணம். முழுவதும் நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, எல்லா நேரமும் சாலையில் நடக்க முடியாது. வயல் வரப்பில் நடக்க வேண்டி வரும். வழியில் அங்கங்கே உட்கார்ந்து காலாற்றிப் பயணம் தொடர்வதுண்டு. அப்போதும் செந்தமிழ்க்கோ அமர்ந்தால் அரிது.
பயணம் முடிந்து கலைந்து போன பின் தோழர் செந்தமிழ்க்கோவுடன் தொடர்பு அருகி விட்டது. மார்க்சியம் அனா ஆவன்னா நூல் வெளியீட்டுக்காக வேலூர் சென்ற போது ஒரு முறை சந்திக்க வாய்த்தது.
தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தோழர் சேகர் அண்மையில் ஒரு நாள் செய்தி அனுப்பினார்: “தமிழர் தமிழ்மண் இயக்கத் தோழர் ஐயா செந்தமிழ்க்கோ உடல்நலமில்லாமல் இருக்கிறார். ஒரு நாள் நீங்களும் வாருங்கள், போய்ப் பார்த்து விட்டு வருவோம்.” ஆவலோடு காத்திருந்த நேரம் என் உடல்நலங்குன்றி, பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. நேற்று அம்பேத்கர் சிறுத்தைகள் தோழர் எட்வினுடன் சேகர் வேலூர் சென்று செந்தமிழ்க்கோவைப் பார்த்தத்தோடு என்னையும் அவரோடு புலனம் வழி கண்டு பேச வைத்தார். அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. சொல்லில் வெளிப்படுத்த முடியாத அன்பின் நிறையைச் சொல்வது கடினம்.
(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல் 109
Leave a Reply