தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5), கடலூர் இரவு-தொடர்ச்சி)
நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?
எங்குச் சுற்றினாலும் இங்குதான் வந்து நிற்க வேண்டும் என்பது போல், காலநிலை மாற்றம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் புதைபடிவ எரிபொருளின் வாசலில்தான் நிறுத்தப்படுகிறோம்.
செடிகொடிகள் மரங்கள் விலங்குகள் (மனிதனும் கூட) மண்ணில் புதைந்து நீண்ட காலம் மக்கிச் சிதைந்துதான் புதைபடிவ எரிபொருள் உண்டாகிறது. அது கரி வளி, நீரகம் எனும் இரு தனிமங்களால் ஆனது. நிலக்கரி, எண்ணெய் (கல்+நெய் = கன்னெய், பெற்றோல்), இயற்கை எரிவாயு ஆகியவை முதன்மையான புதைபடிவ எரிபொருள்கள் ஆகும்.
நிலக்கரி என்பது பாறையடுக்குகளில் படிவுகளாகக் காணப்படுகிறது. பாறையும் மடிந்த செடி கொடி மரங்களும் விலங்குகளும் மக்கிய நிலையில் அடுக்கடுக்காகக் குவிந்து நிலக்கரி ஆகின்றன. ஒரு நிலக்கரித் துண்டின் எடையில் பாதியளவு புதைபடிவச் செடி கொடிகள் மரங்களாக இருக்க வேண்டும்.
காவிரித் தீரத்தில் புதைபடிவ எரிபொருள் கிடைப்பதற்குக் காரணம்: காட்டாறாகப் பெருகிவந்த காவிரியாறு செடி கொடிகள் மரங்களை எல்லாம் சாய்த்து மண்ணில் புதையச் செய்து விட்டது. இலட்சக்கணக்கான ஆண்டுகளில் அது மக்கிக் கரியும் பிற எரிபொருளும் ஆயிற்று.
கன்னெய் என்பது படிவுற்ற பாறையடுக்குகளில் களிப்பாறை(shale) போன்று திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இந்த மூலப்பொருளைச் சூடாக்கி கெட்டியான எண்ணெய் ஆக்கி, இதைப் பயன்படுத்தி வளியெரிநெய் (gasoline) செய்யலாம். வட அமெரிக்காவில் கன்னெய்யை வளியெரிநெய் என்றுதான் சொல்வர். இயற்கை எரிவாயு வழக்கமாகக் கன்னெய்ப் படிவுகளுக்கு மேல் சிப்பங்களாக (அல்லது பொட்டலங்கள் போல்) காணப்படுகிறது. கன்னெய் இல்லாத படிவப் பாறை அடுக்குகளிலும் எரிவாயு காணப்படுவதுண்டு. இயற்கை எரிவாயு முதன்மையாக ஈரவளியால்(methane) ஆனது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மொத்த ஆற்றலில் 81 விழுக்காடு நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுவதாகும். வீடுகளில் குளிர் போக்கிக் கதகதப்பூட்டவும், ஆலைகளில் எந்திரம் இயக்கவும், சாலையில் வண்டியோட்டவும் தேவையான மின்னாற்றல் இப்படித்தான் இயற்றப்படுகிறது.
புவியானது அள்ள அள்ளக் கொடுக்கும் அட்சய பாத்திரமன்று. இருக்கிற நிலக்கரியை எல்லாம் எடுத்துத் தீர்த்து விட்டால் புதிய நிலக்கரி கிடைக்க இலட்சக்கணக்கான ஆண்டுகளாகும். எண்ணெயும் எரிவாயுவும் கூட இப்படித்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே புதைபடிவ எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டும். அதாவது புவித்தாயின் அடிவயிற்றிலேயே விட்டுவைக்க வேண்டும்.
இரண்டாவதாக, கடந்த 20 ஆண்டுகளில் மாந்தச் செயல்பாடுகளால் கரியுமிழ்வுகள் பெருகிப் போனதில் கிட்டத்தட்ட முக்கால் பங்கிற்குப் புதைபடிவ எரிபொருள்களே பொறுப்பாகும். இப்போது புதைபடிவ எரிபொருள் மீதான சார்புநிலையைக் குறைக்கவும், இந்த எரிபொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கெடுவதைக் குறைக்கவும் வழியுண்டா? என்று அறிவியலரும் பொறியியலரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
நிலக்கரியைக் காட்டிலும் இயற்கை எரிவாயு 50 விழுக்காடு குறைவாகவே உமிழ்வுடையது என்பதால் எரிவாயு கொண்டு வண்டியோட்டும் படியான ஊர்திகளை வணிக அளவில் கிடைக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆய்வுகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காற்று மண்டலத்திலிருந்து கரியிருவளியைப் பிடித்து நிலத்தடியில் பதுக்கி வைக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன.
எல்லாம் சேர்ந்து புதைபடிவ எரிபொருளின் தீங்கைக் குறைத்துப் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்திக் காலநிலை மாற்றத்துக்குத் தடை போட்டு விடுமா? விடும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நிலத்தடி பூதங்களை வெளியே வர விடாமல் உள்ளேயே அடைத்து வைப்பதற்குத்தான் வழி தேட வேண்டும். முதலில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.
ஒரு சில ஆண்டுகள் முன்பு பச்சை வேட்டைக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது அருந்ததி இராய் கேட்டார்:
“நாம் களிக்கனிமத்தை மலையிலேயே விட்டு விடலாமா? “(“Shall we leave the bauxite in the mountains?”)
அலுமினியத்துக்கு இன்றியமையாத மூலப் பொருள் களிக்கனிமம் (bauxite)எனும் தாது. களிக்கனிமச் சுரங்கங்களாலும் களிக்கனிமத்திலிருந்து ஈயம் செய்யும் செய்முறையாலும் பாரிய சூழற்கேடு நிகழ்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகக் களிக்கனிமம் எடுப்பதை நிறுத்தி விடுவோமா? அதாவது, உங்கள் சுரங்கக் கொள்கை என்ன? என்று கேட்டார் அருந்ததி இராய்.
நம் சுரங்கக் கொள்கை என்ன? நிலக்கரியை நிலத்திலேயே விட்டு விடுவோமா?
தரவு –தாழி மடல் 19
Leave a Reply