தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? – தொடர்ச்சி)
ஏ. எம். கே. (6)
மனவுறுதி
சட்டத்தின் ஆட்சி என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் தன்வழிச் செல்லும் என்றும் அரசிலிருப்பவர்கள் எவ்வளவுதான் பிரமாதமாய்ப் பறைசாற்றினாலும், அரசு இயந்திரத்தின் அடக்குமுறைக் கருவிகளே சட்டத்தை மீறுகிற சந்தர்ப்பங்களில் இந்தக் கோட்பாடுகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டுச் கண்களில் கறுப்புத் துணி கட்டி விடுவார்கள்.
இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ஆயுதப் படையினரின் மனவுறுதி கெட்டு விடக் கூடாதாம். சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது மக்களின் மனவுறுதிதானே தவிர, ஆயுதப் படையினரின் மனவுறுதி அன்று. ஓர் உண்மையான மக்களரசுக்கு மக்களின் மனவுறுதிதான் முதன்மையாக இருக்க வேண்டும்.
‘மனவுறுதிக் கோட்பாடு’ பல வழிகளிலும் செயல்படுவதால்தான், ஆயுதப் படையினர் கொலையே செய்தாலும் சட்டத்தின் கையில் சிக்காமலிருக்க முடிகிறது. சிக்கினாலும் எளிதில் தப்பிவிட முடிகிறது.
கடலூர் சிறைக்குள் பொன் நாடாரை அடித்துக் கொன்ற சிறை அதிகாரிகளின் ’மனவுறுதி’யும் கூட அரசுக்கு முக்கியமாய்த் தெரிந்திருக்க வேண்டும். விசாரணை முடிந்து நீண்ட காலம் கழிந்தபின் தண்டனை ஏதுமின்றியோ, அற்பசொற்பத் துறைவழித் தண்டனைகளுடனோ அவர்கள் வேலைக்குத் திரும்ப அழைக்கப் பட்டார்கள். ஒரே ஒருவர். அதிலும் அவர்கள் அனைவரிலும் உயரதிகாரியான சிறைக் கண்காணிப்பாளர் மட்டும் வேலைநீக்கம் செய்யப்பட்டார்.
கைதியின் மரணத்துக்காக ஒரு சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டது — கைதிகள் நடத்திய போராட்டத்தினால் இப்படி ஒரு விளைவு ஏற்பட்டது — சாதாரண நிகழ்வு அன்று. இந்த சாதனை குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் வேலைநீக்கத்துக்கான உண்மைக் காரணம் தெரிய வந்தது.
பொன் நாடாரைக் கொலை செய்ததற்காகவோ, அந்தக் கொலைக்கு உடந்தையாய் இருந்ததற்காகவோ, அந்தக் கொலையைத் தடுக்கத் தவறியதற்காகவோ சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்படவில்லை. ஓர் இரவு முழுக்கச் சிறைக் கைதிகளை க் கதவடைப்புச் செய்யாமல் விட்டதற்காகவே அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார். நீதி கேட்டுப் போராடிய கைதிகளை வலுவந்தமாய்ப் பிடித்துக் கொட்டடியில் அடைக்காமல் விட்டதுதான் கொலைப் பாதகத்தை விடவும் கொடுங்குற்றம்! இதுவும்கூட மனவுறுதிக் கோட்பாட்டின் வேலைதானோ என்னவோ!
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 19
Leave a Reply