தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 151: சித்திரம் அல்லேன் தொடர்ச்சி)
சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!
இனிய அன்பர்களே!
பன்னாட்டுப் பெருமுதலின் விருப்பத்துக்கேற்ப வேலைநேரத்தை நீக்குப்போக்காக மாற்றியமைக்கும் முடிவு பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோருகின்றோம். இந்தச் சறுக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை மீளாய்வு செய்யவும் அடியோடு களையவும் வேண்டும்.
திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த திமுக ஆட்சியும் சரி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டணிக் கட்சிகளும் சரி, ஒரே குரலில் பேசும் வசனம் “நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறோம்” என்பதாகும். மோதி சொல்கிறார் வளர்ச்சி! மு.க.தாலின் சொல்கிறார் வளர்ச்சி! இடதுசரிக் கட்சிகள் சொல்கின்றன வளர்ச்சி! அரசுகளின் திட்டங்களை எதிர்ப்பவர்கள் கூட “நாங்கள் வளர்ச்சியை எதிர்க்கவே இல்லை” என்று தலையிலடித்து சத்தியம் செய்கின்றார்கள்.
வளர்ச்சி என்றால் என்ன? என்று உடைத்துப் பேசுங்கள். வளர்ச்சி என்று சொல்லித்தானே அதானிகள், அம்பானிகளை வளர்த்து விடுகிறார் மோதிஜி? மோதியின் இந்த வளர்ச்சிக் கொள்கையைத்தான் நீங்களும் கடைப்பிடிக்கின்றீர்கள் என்றால் மோதியையும் அதானியையும், அவர்களின் ஒட்டு முதலியத்தையும், அதன் தொடர்ச்சியான மோசடிகளையும் எதிர்ப்பதாகச் சொல்வதில் என்ன பொருள் இருக்க முடியும்?
சுருங்கச் சொல்லின் புதுத்தாராளிய வளர்ச்சியைத்தான் வளர்ச்சி என்று சொல்லிக் கடைப்பிடிக்கின்றீர்கள். வளர்ச்சியல்ல சிக்கல், புதுத்தாராளிய வளர்ச்சிதான் சிக்கல்! புதுத் தாராளியம் தொழிலாளர் நலனுக்கு எதிரானது! உழவர்களை ஓட்டாண்டியாக்குவது! சிறு குறு நடுத்திட்ட தொழில் முனைவோரை ஒடுக்கிப் பெருங்குழுமங்களை கொழுக்கச் செய்வது!
புதுத் தாராளியம் குமுகிய, குடியாட்சிய, இயற்கைநல, சூழல்நல, சமூகநல, சமூகநீதிக் கொள்கைகளுக்குப் புறம்பானது!
அண்மையில் சமூகநீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் மு.க.தாலின் உரையாற்றிய போது தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை பற்றிப் பேசினார். ஆனால் தனியார் முதலீட்டைத் தமிழ்நாட்டுக்கு வருந்தியழைக்கும் போது, தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஒரு வேண்டுகோளாகக் கூட வலியுறுத்த வில்லையே, ஏன்? சமூக நீதி தெற்கு என்றால் புதுத் தாரளியம் வடக்கு என்பது அவருக்கே தெரிந்துள்ளது.
மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கம் எப்படி வீழ்ந்தது? முதலமைச்சராக இருந்த புத்ததேவ பட்டாச்சார்யா “உலகமயம் தவிர்க்கவியலாதது” என்று பறைசாற்றினார். சிங்கூர், நந்திகிராம் அவலங்கள் அதனால்தான் நேரிட்டன. புதுத்தாரளியம்தான் ஒரே வழி என்றால், அதற்கு உங்களைக் காட்டிலும் பாசகவே பொருத்தம் என்று வாக்காளர்கள் முடிவு செய்ய மாட்டார்களா?
திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் பாசிச பாசகவை எதிர்ப்பது உண்மையானால் அதன் புதுத் தாராளிய வளர்ச்சிக் கொள்கையை எதிர்க்க முன்வர வேண்டும்.
மு.க.தாலின் குறிப்பிட்ட திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதால் தன் சனநாயகப் பண்பை மெய்ப்பித்திருப்பதாக ‘திராவிட மாடல்’ ஆதரவாளர்கள் பெருமைப்படுகின்றார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் திருத்தச் சட்டத்தை சட்டப் பேரவையில் முன்மொழிவதற்கு முன் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இந்த சனநாயகப் பண்பு மிளிர்ந்ததா? குத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, மீண்டும் சறுக்காமலிருக்க எச்சரிக்கை காக்க வேண்டும் என்பதற்காகவே கேட்கிறோம்.
பாசிசத்துக்கு எதிரணியில் இருப்பதாகத் திமுக தலைமை அகநோக்கில் சொல்லிக் கொள்கிறதோ இல்லையோ, புறநோக்கில் அது அந்த அணியில் இருப்பதாகவே நம்புகிறோம். திமுக தலைமை கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்சியிலும் குடியாட்சியத்தை மதிக்கா விட்டால் அதன் பாசிச எதிரப்புத் தகைமை கேள்விக்குள்ளாகும். முடிவுகளின் உள்ளடக்கம் மட்டுமல்ல, முடிவெடுக்கும் வழிமுறையும் குடியாட்சியத் தன்மையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 172
Leave a Reply