(தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 1 தொடர்ச்சி)

காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

தமிழ்ப் பிரசார சபாவுக்கு இந்திய அரசு ஒதுக்கும் சொற்ப நிதியும் தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் இந்துத்துவப் பரப்புரைக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும். தமிழறிஞர்கள் என்ற போர்வையில் ஆர்எசுஎசு ஆட்கள்தாம் இந்த சபாக்களை மேலாண்மை செய்வார்கள். உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிதான் நோக்கம் என்றால் பிரசார சபா என்ற இந்திப் பெயர் எதற்கு?

இந்தியைப் பரப்ப காந்தியார் நிறுவிய அமைப்புக்கு இந்திப் பிரசார சபா என்று இந்தியில் பெயரிட்டார். தமிழ் வளர்ச்சிக்கான அமைப்புக்கு ஏன் இந்தியில் பெயரிட வேண்டும்? தமிழ்ப் பரப்புரை மன்றம் என்றோ தமிழ் வளர்ச்சிக் கழகம் என்றோ பெயரிடக் கூடாதா? மாஃபா பண்டியராசனைக் கேட்டிருக்கலாமே? காந்தியார் தாம் தொடங்கிய அமைப்புக்கு இந்தி புரொப்பகேசன் சொசைட்டி என்றா பெயர் வைத்தார்?

தமிழ்ப் பிராசார சபா என்ற பெயரே மோதியின் உள்நோக்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக உள்ளது. 2022 நவம்பர் 19ஆம் நாள் மோதி தொடங்கி வைத்த ஒரு மாதக் கால காசி தமிழ்ச் சங்கமத்தில் நடந்தது என்ன? தமிழ் எதனோடு சங்கமித்தது? ஏக் பாரத் சிரேசுட்ட பாரத்(து) (ஒரே பாரதம் உன்னத பாரதம்)! இதுதான் தமிழ்ச் சங்கமத்தின் மந்திர முழக்கம்! தமிழ்ப் பிரசார சபாவும் இப்படித்தான் இந்துத்துவப் பிரசார சபாவாக மாற்றப்படும். திருவள்ளுவருக்குக் காவி உடுத்தியவர்கள் தமிழன்னைக்கும் காவி உடுத்தி விடுவார்கள்.

காந்தி நிறுவிய இந்திப் பிரசார சபாவையும் மோதி நிறுவப் போவதாகச் சொல்லும் தமிழ்ப் பிரசார சபாவையும் எதிர்நிறுத்தி ஒப்புநோக்கினால் சில உண்மைகள் புலப்படும். 1918ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கிலம் எல்லா வகையிலும் கோலோச்சிய போது இந்தியத் தேசிய இயக்கத்தின் உறுப்பாக இந்தி் பிரசார சபாவை காந்தியார் நிறுவினார். இந்தியை இந்திய நாட்டின் பொதுமொழியாக வளர்த்தெடுத்து இந்தியத் தேசிய இயக்கத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டும் என்பது காந்தியாரின் வேணவா.

அன்று இந்தி ஆட்சிமொழி இல்லை. இன்று அரசமைப்புச் சட்டத்தின் படி அதுதான் முதன்மை ஆட்சிமொழி. இந்திய அரசமைப்பில் தமிழ் ஆட்சிமொழியில்லை, நீதிமொழியில்லை. நடைமுறையில் அது கல்விமொழியும் இல்லை. தமிழ்நாட்டளவில் கூட அது அரைகுறை ஆட்சிமொழி மட்டுமே. தமிழ்நாட்டை விலக்கிப் பேசுவோம். மோதி இந்திய நாடெங்கும் தமிழ் பிரசார சபா தொடங்குவதால் தமிழ் ஆட்சிமொழியாகுமா? நீதிமொழியாகுமா? கல்விமொழியாகுமா? அப்போதும் தமிழ் ஆளும் மொழி ஆகாது, அடிமை மொழியாகவே நீடிக்கும். அடிமைமொழியைக் கற்பதில் எத்தனைப் பேருக்கு ஆர்வம் வரும்?

இந்திப் பிரசார சபா தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டின் பல மாநிலங்களிலும் ஏராளமானோர் இந்தி படிக்க உதவியது. நான் இந்திப் பிரசார சபையில் படித்தவன். ஆளப்படும் மொழியான போதிலும் இந்தியத் தேசிய உணர்வு சார்ந்து பலரும் இந்தி படித்தனர். விடுமை (சுதந்திரம்) என்னும் அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின், குறிப்பாக அரசமைப்பு இயற்றப்பட்ட பின் இந்தியக் குடியரசு இந்திக் குடியரசாகி விட்டது. அஃதாவது இந்தி ஆளும் மொழியாகி விட்டது. இந்தி கற்பதற்குச் சிறப்பு ஊக்கம் ஏதும் தேவைப்படவில்லை. இன்றைய நிலையில் தமிழ்நாடு நீங்கலாக இந்தியாவெங்கிலும் மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாயமாகவே கற்பிக்கப்படுகிறது.

குடியேற்ற(காலனி)ஆதிக்கக் காலத்திலேயே பயில்மொழியாக இந்தி திணிக்கப்படுவதைத் தமிழ்நாடு எதிர்த்தது (1937-38). ஆனால் இன்று தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்துக்கு வெளியே இந்தி கட்டயாமாகவே கற்பிக்கப்படுகிறது. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழேயும் கூடத் தனியார் பதின்மப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன்) இந்தி கற்பிக்கப்படவே செய்கிறது. பிராசார சபா வழியாகத்தான் இந்தி கற்க வேண்டும் என்ற தேவை பெரும்பாலும் அற்றுப் போய் விட்டது. காந்தி நிறுவிய இந்தி பிரசார சபா கிட்டத்தட்ட வாழ்ந்து முடித்து விட்டது.

சரி, தமிழ்ப் பிரசார சபா தொடங்கப்படும் வரலாற்றுப் பகைப் புலம் என்ன? தமிழ்த் தேசிய உணர்வின் பாற்பட்டு தமிழ் கற்கும் ஆர்வம் ஓங்கி மிளிரும் அளவுக்கு தமிழ்நாட்டு இறைமை மீட்பு இயக்கம் வலுப்பெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டு அடையாளத் தன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சிதான் தாய்த் தமிழ் கல்விப் பணி. அது வளர வேண்டிய அளவுக்கு வளரவில்லை என்பதே மெய்.

2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே காணப்பட்ட தமிழ் கற்கும் ஆர்வத்தைப் புலம்பெயர் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோடு ஒப்புநோக்குவது கருத்துக்குரியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களாகவே கணக்கில் கொள்கிறேன்.

இந்தப் புலம்பெயர் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே தமிழார்வத்தை விதைக்க அங்கங்கே தமிழார்வலர்கள் தனிப்பட்ட முறையிலும் சங்கம் வைத்தும் செய்து வரும் முயற்சிகள் இருப்பினும், குழந்தைகளிடையே தமிழ் கற்கப் பெரிதாக ஆர்வம் இல்லை என்பதே உண்மை. புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கிடையிலும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழ் கற்கும் ஆர்வம் குறைந்திருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நான் 1994 அமெரிக்கப் பயணத்தின் போது சிக்காகோவில் ஒரு தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்காக அங்குள்ள பாலாசி கோயிலுக்குப் போயிருந்தேன். பாலாசி கோயிலில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழும் இந்தியும் கற்றுக் கொடுப்பதற்கான தனித்தனி வகுப்புகள் நடக்கின்றன. தமிழ்க் குழந்தைகள் தமிழை விடவும் இந்தி கற்பதிலேயே கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஒரு குழந்தையின் பெற்றோர் எனக்கு விளக்கமளித்தார்:

“இந்திய அரசோடு தொடர்பு கொள்ள இந்தி வசதியாக உள்ளது. அரசிடமிருந்து இந்தியில் விடையும் கிடைக்கிறது. இந்திய அரசின் ஊக்கமும் கிடைக்கிறது. தமிழக அரசோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே போதுமானதாக உள்ளது. நாம் தமிழில் விண்ணப்பம் அனுப்பினால், அரசிடமிருந்து  விடை வராது, வந்தாலும் ஆங்கிலத்தில்தான் வரும்.”

தமிழர்கள்தான் இப்படி என்றால் மற்ற மொழிக்கரர்களின் நிலை என்ன? நம்மைப் போலவே மொழிப்பற்றுள்ள வங்காளிகள் எப்படி? வங்கதேசத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய வங்காளி ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார்:

“வங்கதேச விடுதலைக்கு முன்பு எங்கள் மக்களில் பெரும்பாலார் வங்காளி கற்பதால் என்ன பயன்? என்றுதான் கேட்பார்கள். உருது மொழி கற்பதில் ஆர்வமாய் இருப்பார்கள். அது பாக்கித்தானின் ஆட்சிமொழி. விடுதலைக்குப் பின் வங்காளி கற்க ஆர்வம் வளர்ந்துள்ளது.”

நானறிந்த இன்னொரு செய்தி: அமெரிக்காவில் குடியேறிய தமிழர் ஒருவர் அங்கு பிறந்து வளர்ந்த தன் மகளைத் தமிழ் படிக்கச் செய்யப் படாத பாடு பட்டார். தமிழின் அருமையை உணர்த்துவதற்காக ஒரு முறை மகளைத் தமிழ்நாட்டுக்கே அழைத்து வந்தார். ஒரு முழு நாள் சென்னையைச் சுற்றிப் பார்த்த பின் மகள் சொன்னாராம்:

“நான் இவ்வளவு காலமும் அமெரிக்காவில் தமிழ் தேவையில்லை என்றுதான்  நினைத்திருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன், தமிழ்நாட்டிலும் தமிழ் தேவையில்லை என்பதை!”  

தமிழ் ஆளும் மொழியாக இருக்க வேண்டும், அல்லது ஆட்சியைப் பிடிக்கப் போராடும் நிலையிலாவது இருக்க வேண்டும். இல்லையேல் தமிழ் படிக்கும் ஆர்வம் தமிழ்நாட்டுக்கு வெளியே பொங்கி வராது; தமிழ்நாட்டிலும் மங்கிப் போகும்.

மோதியின் தமிழ் பிரசார சபா என்ன செய்யப் போகிறது? தமிழை ஆளும் மொழியாக்கப் போகிறதா? அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தப் போகிறதா? திருத்தக் கோரிப் போராடப் போகிறதா? பிறகெப்படித் தமிழ் கற்கும் ஆர்வம் பெருகப் போகிறது? தமிழ் பிரச்சார சபா திறந்தும் யாரும் படிக்க வரவில்லை என்று இழுத்து மூட வேண்டியதுதான்! அல்லது தமிழ்ப் பிரசாரம் என்ற பெயரில் இராமாயணம், மகாபாரதம், பகவத்(து) கீதை படிக்க வேண்டியதுதான்! ஆர்எசுஎசு நோக்கம் நிறைவேறும்.

தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழ் ஆள வேண்டும். இந்தியக் கட்டமைப்பு இப்போதுள்ள வடிவிலோ, மோதியின் பேரவாப்படி இன்னும் மோசமான வடிவிலோ நீடித்துள்ள வரை தமிழ் ஆளப் போவதுமில்லை! வாழப் போவதுமில்லை.

சற்றே உற்றுநோக்குங்கள்! ஊடுருவிப் பாருங்கள்! மெல்லத் தமிழ் கொல்லப்படுவதைக் காண்பீர்கள்! இந்தியாவில் – குறிப்பாக மோதியின் இந்தியாவில் – தமிழ் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மொழியழிப்புக்கு அடிப்படை இந்தியக் கட்டமைப்பில் தமிழர்கள் அடிமைகளாக இருப்பதே! அடிமையின் மொழியைக் காப்பற்ற வேண்டுமானால் அடிமைத்தனம் ஒழிய வேண்டும்! அல்லது அந்த அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அடிமைகள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். ஆண்டைகளின் தயவில் வாழலாம், அடிமைகளாகவே!

மோதியின் தமிழ்ப் பிரசார சபா – இந்திய இந்துத்துவ அரசு தமிழ் மொழியழிப்பு செய்வதை மறைக்கும் திரையே தவிர வேறல்ல!

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174