(தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இன்று அதிகாலை 4.30 –  கைப்பேசி ஒலித்தது. இது நண்பர் சம்ராசின் அழைப்பு. 1974 மே முதல் நாள் இந்த அதிகாலை நேரம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அனைவரையும் எழுப்பி விட்டு போராட்டத்துக்கு அணியமானதை நினைவு கொள்ளும் அழைப்பு.

தலைவர் ஏசிகே, தோழர் இலெனின், பாலகிருட்டிணன் எல்லாரும் போய் விட்டார்கள். அந்த ஆண்டே பாலகிருட்டிணன் தூக்க்கிலிடப்பட்டார். இடைப்பட்ட ஆண்டுகளில் இலெனின் மறைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஏசிகே போய் விட்டார். சென்ற ஆண்டு ஒண்டிமுத்து இருந்தார். அந்தப் போராட்டத்தில் அவர் வகித்த பங்கு மிகச் சிறப்பானது. சேலத்தில் அவரை  அடித்துக் காலை ஒடித்துத் தூக்கிப் போட்டார்கள்.   

அந்தப் போராட்டத்தில் முனைப்புடன் இயங்கியவர்களில் யாராவது எங்காவது பிழைத்துக் கிடந்தால் போய்ப் பார்க்கலாம். சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் குருமூர்த்தியைப் பார்த்தேன்.

ஒண்டிமுத்து கடைசி வரை என்னோடு தொடர்பில் இருந்தார். என்னுடனேயே வந்து தங்கி விடும் படி அழைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கும் ஆசைதான், குடும்பத்தினர் விடவில்லை. பலவித நோய்கள், எல்லாவற்றிலும் கொடிதான வறுமைப் பிணி. ஒரு நாள் வீட்டில் அனைவரும் திருச்செந்தூர் போன போது அவரும் போனார். கடலில் குளித்து விட்டுக் கரையேறிய சற்றைக்கெல்லாம் இதயம் நின்று விட்டது. மகள் செங்கொடி எனக்குத் தகவல் சொன்னார்.

அந்த மே நாள் இன்றும் என்னுள் ஆயிரம் நினைவுகளைக் கிளறி விடும். மே நாள் போராட்டங்களின் வரலாற்றில் இதற்கொரு சிற்றிடம் ஒதுக்கியாக வேண்டும். முன்பு சுவருக்குள் சித்திரங்களில் எழுதியதையே இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

மே நாள் விடியல்!

நேரத்தில் படுத்து நேரத்தில் எழுவது சிறைச்சாலையில் கடைப்பிடிக்கப்படும் விதிகளில் ஒன்று. இரவு 9 மணிக்குப் பிறகு விழித்திருப்பதும் காலை 5 மணிக்குப் பிறகு தூங்குவதும் சிறைக் கட்டுப்பாட்டை மீறுவதாகக் கருதப்படும். சரியாகக் காலை 5 மணிக்கெல்லாம் காவலர்கள் ஒவ்வொரு தொகுதியிலும்  எழு(‘ரைசு’) என்று குரல் கொடுத்துக் கொண்டே செல்வார்கள். 5.30-க்கு வரிசை யில்(‘ஃபைல்’) உட்கார்ந்து விட வேண்டும்.

வரலாற்றில் முத்திரை பதித்த அந்த மே நாளில் (1974 மே 1) திருச்சி மத்திய சிறையில் காலை 4.30-க்கு எழு(‘ரைசு’) என்ற சத்தம் கேட்டது. குரல் கொடுத்தவர்கள் காவலர்கள் அல்லர். கைதிகள். சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கத்தின் முக்கிய ஊழியர்கள்தான் அந்தந்த அடைப்பிலும் கைதிகளை அவ்வளவு சீக்கிரம் எழுப்பி, காலை 5 மணிக்குள் வரிசை( ‘ஃபைல்’) உட்காரச் செய்தார்கள். பிறகு ஒவ்வோர் அடைப்பிலும் ஒருவர் எழுந்து முன்னால் போய் நின்று கோரிக்கை சாசனத்தையும் போராட்ட அறிவிப்பையும் சங்கத் தலைமையின் அறைகூவலையும் ஒன்றன் பின் ஒன்றாய் உரக்கப் படித்தார்.

இருபத்தைந்து அம்சக் கோரிக்கை சாசனம் குறித்து முன்பே சொல்லியிருக்கிறேன். போராட்ட அறிவிப்பின்படி காலவரம்பற்ற உண்ணாவிரதம் தொடங்கும் பதினொருவரின் பெயர்களும் தெரிவிக்கப்பட்டதோடு – பாலகிருட்டிணன், ஏ.சி.கத்தூரிரெங்கன், தியாகராசன் (நான்), ஒண்டிமுத்து, வேலுச்சாமி, சாபர் அலி,  நாகப்பன், சவுடப்பன், பழனிச்சாமி, இருதயராசு, தியாகராசன் (மற்றொருவர்) பெருந்திரள் அடையாள உண்ணாவிரதம், அடையாள வேலைநிறுத்தம், முடிவில் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் ஆகியவற்றுக்கான தேதிகள் குறிக்கப்பட்டிருந்தன. சங்கத் தலைமையின் அறைகூவலானது, சிறைப்படுத்தப்பட்டோர் போராட்டக் காலத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது. அறைகூவலில் காணப்பட்ட அந்த வாசகத்தை நான் மறக்கவில்லை:

“சிறை அதிகாரிகள் இந்தப் போராட்டத்தை வன்முறை வழியில் நசுக்க முற்படலாம். அவர்கள் நம் மீது கொடிய அடக்குமுறையை ஏவலாம். ஆனால், எவ்வளவுதான் ஆத்திரமூட்டப்பட்டாலும் நாம் நிதானம் இழந்துவிடக் கூடாது. அவர்கள் அடித்தாலும் அடிக்கட்டும். நம் கை கால்களை ஒடித்தாலும் ஒடிக்கட்டும். நாம் திருப்பி அடிக்க மாட்டோம். நமக்கு நம் கோரிக்கைகள்தான் முக்கியம். இந்தக் கோரிக்கைகளை அடைவதற்காக உயிரை இழக்கவும் தயாராய் இருப்போம்”.

 இந்த மூன்று ஆவணங்களும் அந்த விடியற்காலை நேரத்தில் ஒருங்கே எல்லாத் தொகுதிகளிலும் உரத்துப் படிக்கப்பெற்ற போது, அதுதவிர சிறைக்குள் வேறு சத்தமில்லை. கைதிகளை எழுப்பச் சென்ற காவலர்கள், அவர்கள் ஏற்கெனவே எழுந்து விட்டதைக் கண்டார்கள்.

 ‘இது என்ன சத்தம்’ என்ற திகைப்புடன் அங்கங்கே நின்று அந்த வாசிப்பைக் கேட்டார்கள்.

இவை யாவும் மரணத் தண்டனைக் கூடத்திலும் செவ்வனே நடைபெற்றன. தனிக் கொட்டடிகளால் ஆனது என்பதால் கண்டத்தில் வரிசை(‘ஃபைல்’) உட்கார முடியாது. ஆகவே, தோழர் பாலகிருட்டிணன் குரல் கொடுத்து அனைவரையும் எழுப்பி விட்டு இப்படி அறிவித்தார்:

“தோழர்களே! நம் தோழர் தியாகு இப்போது பேசப் போகிறார். ஒவ்வொருவரும் கதவோரம் வந்து உட்கார்ந்து உற்றுக் கேளுங்கள்“.

 சரியாக 5 மணிக்கு நான் அந்த ஆவணங்களை வாசிக்கத் தொடங்கினேன். கண்டம் முழுக்கவும், எங்களுக்குப் பின்புறம் இருந்த ‘பி’ வகுப்புக் கைதிகளும் கூடக் கேட்கும்படி உரக்கப் படித்தேன். அதேநேரம் சிறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த எழுச்சிக் குரல்களோடு எனது குரல் கலந்து பரவியது.

 அன்றைய தினம் சிறைஅலுவலர் விடுப்பில் இருந்தார். அவருக்குப் பதிலாக இணைக் கண்காணிப்பாளர் கணக்கெடுக்க வந்திருந்தார். கோபுரத் திடலில்(டவர் மைதானத்தில்) நடுநாயகமாய் அவர் அமர்ந்திருக்க… அவருக்கு இருபுறமும் ஏனைய அதிகாரிகள் நின்று கொண்டிருக்க, ஒருபக்கம் காவலர்களும் மறுபக்கம் தண்டனைக் காவலர்களும் வருகை அழைப்பிற்காக (‘ரோல் காலுக்காக’) அணிவகுத்து நின்றார்கள். இணைக் கண்காணிப்பாளரின் தனிப்பணியாளும் (‘ஆர்டர்லி’யும்) தண்டனைக் காவலருமான ஒண்டிமுத்து இணைக் கண்காணிப்பாளருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். ஒருங்கே எல்லா அடைப்புகளிலிருந்தும் சத்தம் கேட்ட போது இணைக் கண்காணிப்பாளர் திகைப்புற்றார். அந்தத் திகைப்பு அடங்குவதற்குள்ளேயே ஒண்டிமுத்து நடுவில் வந்து நின்று காற்சட்டைப் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்து விரித்துப் படிக்கலானார். ஆம், அவை போராட்ட ஆவணங்கள்.

கண்காணிப்பாளருக்கோ, இணைக்கண்காணிப்பாளருக்கோ தனிப்பணியாளாக (‘ஆர்டர்லி’யாக) இருப்பது எல்லாக் கைதிகளுக்கும் வாய்க்கக் கூடிய பேறு’ அல்ல. கைதிகள் மட்டுமல்லாமல் காவலர்களும்கூட இந்த் தனிப்பணியாட்கள் (‘ஆர்டர்லி’கள்) மீது பொறாமை கொள்வார்கள். இணைக் கண்காணிப்பாளர் தனக்கு ஏவலரான கைதி ஒருவரே தன்னெதிரில் போராட்ட அறிவிப்பு செய்யக் கேட்கும் போது எவ்வளவு அதிர்ச்சியுறுவார்! அந்த அதிர்ச்சியினால்தானோ என்னவோ ஒண்டிமுத்து வாசித்து முடிக்கும் வரை அவர் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். இதர அதிகாரிகளும் காவலர்களும் தண்டனைக் காவலர்களும் சிலையாகச் சமைந்து நின்றார்கள். வாசித்து முடித்த பின் ஒண்டிமுத்து அந்தக் கடிதங்களைத் தன் ‘ஐயா’விடமே அளித்தார்.


கணக்கு முடிந்த பிறகும் அடைப்பு (லாக்கப்பு) திறக்காமலே, இணைக் கண்காணிப்பாளர் சிறை வாயிலுக்கு விரைந்து சென்று கண்காணிப்பாளருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் கண்காணிப்பாளர் சிறைக்கு வந்து விட்டார். பின்னாலேயே சிறைஅலுவலரும் வந்து விட்டார்.

 இதற்கிடையில் ஒவ்வோர் அடைப்பிலும் போராட்ட வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். அறைகூவலில் காணப்பட்ட ஒரு வேண்டுகோளுக்கு அங்கேயே அப்போதே கைதிகள் செவி சாய்த்தார்கள். தங்களால் இயன்ற வரை போராட்ட நிதிக்குப் பங்களித்தார்கள் பீடியாகவோ, பணமாகவோ! அங்கங்கே சங்கப் பொறுப்பாளர்கள் நிதி பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.

கண்காணிப்பாளர் ஏனைய அதிகாரிகளோடு ஒவ்வொரு தொகுதிக்கும் வந்த போது, உண்ணாவிரதிகள் கையொப்பமிட்ட கோரிக்கை சாசனம் அவரிடம் தரப்பட்டது. கடைசியாகக் கண்டத்துக்குச் சிறைஅலுவலர் மட்டுமே வந்த போது, நானும் பாலகிருட்டிணனும் அவரிடம் கோரிக்கை சாசனம் கொடுத்தோம்.

சிறைஅலுவலர் என்னிடம் சொன்னார்: “திரு. தியாகராசன், உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை”.

 “இல்லை ஐயா. நீங்கள் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். நான் எதற்காகச் சிறைப்பட்டேன், எதற்காகச் சிறையில் இருக்கிறேன் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது”.

“அது சரி, நான்தான் ஏமாந்து விட்டேன். சிறைக்குள்ளிருந்து கொண்டு இதையெல்லாம் உருட்டச்சு (‘ரோனியோ’) செய்திருக்கிறீர்கள். இது எப்படி முடிந்தது? மேலிடத்திலிருந்து எங்களைக் குடைந்து விடுவார்களே! கையால் எழுதிக் கொடுத்திருக்கக் கூடாதா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதானால் பேசுவோம். இல்லையேல் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்”.

“செய்யத்தான் போகிறேன். உங்களுக்கு இந்த உண்ணாவிரதம் போராட்டமெல்லாம் சகசம். ஒரு தூக்குக் கைதியையும் இதில் சேர்த்திருக்கிறீர்களே! இதனால் எங்களுக்கு எவ்வளவு கேள்வி வரும் தெரியுமா?”

“வரட்டும். பதில் சொல்கிறோம்”.

”உங்களையா கேட்கப் போகிறார்கள்? எங்களைத்தான் கேட்பார்கள். எனக்காக ஒன்றே ஒன்று செய்யுங்கள். பாலகிருட்டிணனை மட்டும் விட்டு விடுங்கள். அதுதான் அவருக்கும் நல்லது”.

 “முடியாது ஐயா. மரணத் தண்டனைக் கைதிகளுக்கும் சேர்த்தே கோரிக்கை வைத்துள்ளோம். அதில் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும்”.

பாலகிருட்டிணனிடம் சென்ற சிறைஅலுவலர் எதுவும் பேசாமல், முறைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்.

உண்ணாவிரதிகள் பழைய கண்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டனர். என்னையும் அங்கே கொண்டுசென்று தனிக் கொட்டடியில் அடைத்து வைத்தனர். பாலகிருட்டிணன் மரணத் தண்டனைக் கைதியானதால் அவரை மட்டும் எங்களோடு வைக்காமல் தொடர்ந்து சி.பி. கண்டத்திலேயே வைத்திருந்தனர்.

என்னைத் தனியாகவும் மற்றவர்களை இருவர் மூவராகவும் கொட்டடிகளில் அடைத்திருந்தனர். எங்களுக்கு ‘பாரா’ கொடுக்க ஒரு சரியான ‘பட்ட மரத்தை’ அனுப்பியிருந்தனர். அவரிடம் நாங்கள் தண்ணீர் கேட்டபோது, “நீங்கள் தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கச் சொல்லி துரை உத்தரவு” என்று பதிலளித்தார். உண்மையிலேயே எங்கள் எதிரில் ஒரு பானை நிறைய மோர் வைக்கப்பட்டிருந்தது.

கண்காணிப்பாளர் எங்களிடம் வந்த போது ஏ.சி.கே.யைப் பார்த்து, “நீங்கள் செய்வது சட்ட விரோதம். வெளியில் சங்கம்(யூனியன்) நடத்துவது போல் இங்கு நடத்த முடியாது” என்றார்.

ஏ.சி.கே. சொன்னார்: “சட்டமே சரியில்லை என்றுதான் வேறு சட்டம் கேட்கிறோம்”.

“எதையாவது கேளுங்கள். எனக்கென்ன வந்தது? ஆனால், தேவை யில்லாமல் என்னையும் மேலாளையும் வம்புக்கிழுத்து, எங்கள் மீது ஊழல் புகார் சுமத்தி, விசாரணை வேண்டும் என்கிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம்?”

”விசாரணையில் சொல்கிறோம்”.

“நீங்கள் செய்யும் காரியத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும் தெரியுமா?”

”தெரியும். எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இதில் இறங்கியுள்ளோம்”.

கண்காணிப்பாளர் என்னிடம் வந்த போது, “உண்ணாவிரதம்
இருப்பவர்களுக்குத் தண்ணீர் தர மறுப்பது சரியல்ல” என்று சுட்டிக்காட்டினேன்.

“நாங்கள்தான் மோர் தருவதாகச் சொல்கிறோமே?” என்று பதிலளித்து விட்டுப் போய் விட்டார்.

மதியச் சாப்பாடு எங்கள் அறைகள் எதிரே வைக்கப்பட்டது. கூடுதல் தாளிப்புடன் ‘சிறப்புக்’ குழம்பு வேறு.

 “நீங்கள் எப்போது கேட்டாலும் திறந்து சாப்பாடு தரும்படி கண்காணிப்பாளர் உத்தரவு” என்று பாரா காவலர் சொன்னார்.

இடையில் சிறை மருத்துவர் எங்களைப் பரிசோதிக்க வந்த போது, அதிகாரிகள் தண்ணீர் தர மறுப்பது பற்றிச் சொன்னோம்.

அவர் சொன்னார்:

“இப்படிச் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. உண்ணா விரதத்தின்போது மிகப் பெரிய ஆபத்தே நீரிழப்புதான் (dehydration). தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் சொல்லிப் பார்க்கிறேன். சரிப்படா விட்டால் அறிக்கை எழுதுகிறேன்”.

மருத்துவர் மேற்கொண்ட முயற்சியால் இரவு 7 மணிக்கு மேல் எங்களுக்குக் குடிக்க நீர் கொடுத்தார்கள்.

போராட்டம் தொடங்கிய முதல் நாளே போராட்டத்தை ஆதரிக்காமல் நிருவாகத்துடன் ஒத்துழைப்பவர்கள் எத்தனை பேர், யார் யார் என்று அதிகாரிகள் கணக்கெடுத்தார்கள். ஏழு அல்லது எட்டுப் பேர் இவ்விதம் முன்வந்தார்கள். இவர்களில் ஓரிருவர் தங்கள் சொந்த நலன் என்றால் தனித்து நின்று விடாப்பிடியாகப் போராடக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலன் கருதாத ‘போர்க்குணம்’ சமூக விரோதமாய்த் திரிவது இயல்பே.

இந்த ஏழெட்டுக் கருங்காலிகளையும் தனி  அறையில் (‘செல்’லில்) பூட்டி
வைக்கும்படி கண்காணிப்பாளர் ஆணையிட்ட போது அவர்களுக்கு
அதிர்ச்சி. “எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா?” என்று ஒருவர்
கேட்டே விட்டார்.

கண்காணிப்பாளர் அளித்த விளக்கம் இதுதான்: “அவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும் கடமை எனக்குள்ளது. அதற்கு உங்களைத்தனியறையில் ( ‘செல்’லில்0 வைப்பது தவிர வேறு வழியில்லை”.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 175