தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை
(தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்! தொடர்ச்சி)
மௌனத்தின் சொல்வன்மை
1886 மேத் திங்கள் 4ஆம் நாள் சிக்காகோவின் ஏயங்காடி (Haymarket)யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 31 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 8 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
இவர்களில் சாமுவேல், பெல்டன், சவாசு ஆகியோருக்கு ஆளுநர் மன்னிப்பு வழங்கினார். உலூயிலிங்கு தூக்குதண்டனைக்கு முதல்நாள் சிறைச் சாலையில் அழிகுண்டு (Dynamite) வெடித்து இறந்தார்.
ஆல்பருட்டு பார்சன்சு, ஆல்காட்டு பைசு(Spies), ஃபிசர், எங்கெல் ஆகிய மற்ற நால்வரும் 1887 நவம்பர் மாதம் 11ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.
சிக்காகோவின் குக் கவுண்டி நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் இடையில் உள்ள தியர்பார்சன் தெருவின் நடைபாதையில் தூக்குமேடை அமைக்கப்பட்டது.
மறுநாள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை.
முதல்நாள் இரவு தூக்கம் வருமா? அவர்கள் நன்கு உறங்கினார்கள். காரணம் அந்தச் சாவை மகத்தானது என நினைத்தார்கள்.
ஆல்பருட்டு பார்சன் மட்டும் தனக்கு மிகவும் பிடித்தமான பாட்டை பாடிக் கொண்டிருந்தார். காலை எழுந்தவுடன் அவர்கள் விரும்பிய உணவு வழங்கப்பட்டது.
காவலர்கள் “மது வேண்டுமா?” என்று கேட்டனர். பார்சன்சு “இல்லை நான் தெளிவோடு செல்ல விரும்புகிறேன். மிதமான குடிப்பழக்கம் உள்ளவர்கள் இரக்கத்தால் ஒரு துளி கண்ணீர் சிந்தலாம்” என்றார்.
தூக்கிலிடும் போது கண்ணீர் வரக் கூடாது எனபதில பார்சன்சு உறுதியாக இருந்தார். காழ்நீரும் நொறுவையும் (காபியும் பிசுகெட்டும்) கேட்டார். கொடுத்தனர்.
அருந்தி முடித்தவுடன் பார்சன் “இப்போது நன்றாக உணர்கிறேன் முடித்து விடலாம்“ என்று தூக்கிற்கு அணியமானார்.
காலை 11.30 மணிக்கு செரிஃப் மாட்சன், சிறைஅலுவலர் ஃபோல்சு, குக்கவுண்டி மருத்துவர் மற்றும் காவலர்கள் பலர் முன்னிலையில் நால்வரும் அழைத்துவரப்பட்டனர்.
அங்குத் தூக்குத் தண்டனை ஆணை வாசித்துக் காட்டப்பட்டது தூக்கிலிடுவதைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட 200 பேர் கூடியிருக்க, நால்வரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்தக் காட்சியை நேரில் பார்த்த செய்தியாளர் இவ்வாறு எழுதியுள்ளார்:
“எவ்விதக் கவலையுமின்றி நால்வரும் அவரவர் இடத்தில் நின்றார்கள். கழுத்தில் மாட்டப்பட்ட கயிற்றைச் சரிசெய்ய ஃபிஷர் உதவினார்.
பைசின் கயிறு இறுக்கமாக இருந்தது. அது சற்று வசதியாகச் சரிசெய்யப் பட்டவுடன் அவர் புன்னகையுடன் “நன்றி“ என்றார்.
பின்னர் பைசு முழங்கினார் “இன்று எங்கள் குரல் நெரிக்கப்பட்டு, மௌனமாக்கப்படுகிறோம். எங்கள் குரலை விடவும் இந்த மௌனம் சொல்வன்மை மிக்கதாக மாறும் ஒரு காலம் வரும்.”
“இதுதான் என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம்” என்றார் எங்கெல்.
பார்சன்சு கடைசியாகப் பேசினார்: “ஓ! அமெரிக்கர்களே! நான் பேசலாமா? செரிஃபு மாட்சன் அவர்களே, என்னைப் பேச விடுங்கள்! மக்களின் குரல் கேட்கட்டும்!”
பின்னர் மதியத்திற்கு சில நிமிடம் முன்னதாக அடிப்பலகை உருவப்பட்டது.
அச்சமே இல்லாமல் அந்த மாவீரர்கள் சிரித்த முகத்துடனும், பெருமிதத்துடனும் சாவை எதிர்கொண்டனர்.
அடுத்த நாள் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நவம்பர் 13 ஆம் நாள் தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று தியாகிகளின் உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.
இறுதி நிகழ்வில் 5 இலட்சம் மக்கள் திரண்டனர். ஈகியரின் 5 உடல்களையும் அடக்கம் செய்யும் போது, அவர்களின் வழக்கறிஞர் கேப்டன் பிளாக்கின் இவ்வாறு பேசினார்:
“இங்கே நாம் குற்றவாளிகளின் உடல்களருகே நிற்கவில்லை. அவர்களின் சாவில் அவமானப்பட எதுவுமில்லை. அவர்கள் சுதந்திரத்திற்காக, சிந்தனை சொல் செயலில் கட்டற்ற பேச்சுரிமைக்காக, மனித நேயத்துக்காக உயிர் கொடுத்தார்கள். அவர்களின் நண்பர்களாக இருந்ததில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.
(வில்லியம் அடல்மன், “மேநாள் ஈகியரின் மகத்தான வரலாறு” புத்தகத்திலிருந்து)
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 176
Leave a Reply