(தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8

இப்போது இந்தக் கூட்டத்தைக் கேட்டுக்  கொண்டு தெருவில்  நின்று கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் ஒரு கணக்கெடுத்துப் பார்ப்போம் எவருக்காவது 8 இலட்சம் உரூபாய் வருமானம் இருக்கிறதா? இல்லை, 8 இலட்சத்திற்குக் கீழே இருந்தால் நீங்கள் எல்லாம் ஏழைகளாம்! எட்டு இலட்சம் வந்தால்தான் நீங்கள் ஏழை இல்லை. அதற்கு மேலே போக வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தாலின் அவர்கள் இந்த நவம்பர் 12ஆம் நாள் கோட்டையில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி வைத்து இந்த இடஒதுக்கீடு குறித்துப் பேசினார். அவர் கேட்டார்: ஐயா, 8 இலட்சம் உரூபாய் ஆண்டு வருமானம் என்றால், மாத வருமானம் எவ்வளவு? 66 ஆயிரம் உரூபாய்! ஒரு நாளைக்கு எவ்வளவு? 2,200 ரூபாய்! இந்த 2,200 வரவில்லை, 2,100தான் வருகிறது என்றால் அவர் ஏழை! மாதம் 66 ஆயிரம் இல்லை, 65 ஆயிரம்தான் வருகிறது என்றால் அவர் ஏழை! என்ன நியாயம் இது? எந்த ஊர் நியாயம் இது? இதைத்தான் மோதியும் அமித்துசாவும் நமக்குச் சொல்கிறார்கள்! இதற்குத்தான் அண்ணாமலை இங்கே சால்ரா அடிக்கிறார். எங்கள் மோதி ஆட்சி ஏழைகளுக்கு எல்லாம் நன்மை செய்கிறது. எந்த ஏழைகளுக்கு எல்லாம்? வருடத்தில் 8 இலட்சம் உரூபாய்க்கு கீழே வருபவர்களுக்கு

சரி, இந்த எட்டு இலட்சம் உரூபாய்க்குக் கீழே வருகிறார்கள், இவர்கள்தான் ஏழை என்று வைத்துக் கொள்வோம். இந்த ஏழை எந்தச் சாதியில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா, இல்லையா? இல்லை, எட்டு இலட்சத்திற்கும் கீழே இருப்பவர் எசுசி-யாக இருந்தால் கிடையாது, எசுடி-யாக இருந்தால் கிடையாது, பிசி-யாக இருந்தால் கிடையாது எம்பிசி- யாக இருந்தால் கிடையாது. ஓபிசி-யாக இருந்தால் கிடையாது. அவர் எஃப்சி-யாக இருந்தால் மட்டும்தான் உண்டு. இதுதான் இந்த ஈ.டபிள்யூ.எசு. இட ஒதுக்கீடு! அவர்களுக்கு மட்டும்தான் இந்த இட ஒதுக்கீடு!

முக தாலின் நன்றாகச் சொன்னார்: அப்படியானால் இது முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்பது உண்மை அல்ல. ஏதோ குருக்களுக்குக் கொடுக்கிறார்கள், சவுண்டிப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கிறார்கள், உஞ்சவிருத்திப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது. இது எந்த மாதிரிப் பார்ப்பனர்களுக்கு? பணக்காரப்  பார்ப்பனர்களுக்கு! அவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பணக்காரப் பார்ப்பனர்கள்! அவர்களுக்குத்தான் இந்த இட ஒதுக்கீடு!

அப்போது வெளிப்படையாக நீங்கள் ஒன்றைச் சொல்ல வேண்டும். என்ன சொல்ல வேண்டும்? பாரதிய சனதாக் கட்சி பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது. பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத்தான் நாங்கள் இடபிள்யுஎசு என்ற பெயரில் அரசமைப்புச் சட்டத்திற்கு 103ஆவது திருத்தம் கொண்டுவந்திருக்கிறோம். வாருங்கள், அப்படி வெளிப்படையாக! இது நியாயமா இல்லையா என்று பேசுவோம்

சரி, பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உங்களுக்கு என்ன? என்று கேட்கலாம். எங்கள் இடத்தை எடுத்துக் கொண்டுதான் அவர்களுக்குக் கொடுக்க முடிகிறது.

ஒரு தந்தி அலுவலகத்தில் 100 பேர் வேலை செய்கிறார்கள். இட ஒதுக்கீடு எசுசி, பிசி என எல்லோருக்கும் சேர்த்து 69 விழுக்காடு என்றால் மிச்சம் 31 விழுக்காட்டில் எல்லோரும் போட்டி போடலாம். ஆனால் அதில் பத்து விழுக்காட்டை அவர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறீர்கள். மக்கள்தொகையில் 69 விழுக்காடு இருக்கக் கூடிய பிசிக்கு 27 விழுக்காடுதான் மண்டலக் குழு ஒதுக்கீடு! 29 விழுக்காடு இருக்கக் கூடிய எசுடி, எசுசி-க்கு 19 விழுக்காடுதான் ஒதுக்கீடு! ஆனால் மூன்று விழுக்காட்டுப் பார்ப்பனர்களுக்கு 10% ஒதுக்கீடு! இது நியாயமா? 

இட ஒதுக்கீட்டில் வரலாறு படைத்த நாடு நம் தமிழ்நாடு. 1909ஆம் ஆண்டு இங்கே ஒரு மாகாண ஆட்சி உருவாகியது அதற்கு இரட்டை ஆட்சி என்று பெயர். ஆளுநர் ஆட்சி செய்வார், அவரோடு கொஞ்சம் பேர் மற்றவர்களும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள். அப்போதுதான் முதன்முதலாகத் தேர்தல் தொகுதிகளில் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு வந்தது. இதுதான் முதல் இட ஒதுக்கீடு 1920ஆம் ஆண்டு இதே இரட்டை ஆட்சியில் நீதி கட்சி அமைச்சர்கள் இருந்த போது. அவர்கள் ஒரு ஆணை பிறப்பித்தார்கள் அதற்குப் பெயர் ‘கம்யூனல் அரசாணை’! வகுப்புவாரி உரிமைக்கான அரசாணை! அவர்கள் என்ன செய்தார்கள்? கல்வி, பதவி, வேலைவாய்ப்பு எதுவாக இருந்தாலும் இன்னின்ன வகுப்பினருக்கு இன்னின்ன இடம் என்று ஒதுக்கி விட்டார்கள். அவர்கள் ஒன்றும் பார்ப்பனர்களை விட்டு விடவில்லை அவர்களுக்கும் கொடுத்தார்கள். எல்லாச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு. இது 1920 முதல் 1950 வரை செல்லுபடி ஆனது. இதை வைத்துத்தான் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள். இதை வைத்துத்தான் தலைமைச் செயலகத்திற்குப்  போனார்கள். இதை வைத்துத்தான் அரசு வேலைவாய்ப்புகளுக்குப் போனார்கள். பிரித்தானியர் காலத்திலும் சரி, 1947 நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சரி இதுதான் வேலையை, கல்வியைப் பிரித்துக் கொடுக்கிற வாய்ப்பு

ஆனால் 1950ஆம் வருடம் செண்பகம் துரைராசு என்கிற ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். கம்யூனல் அரசாணை செல்லாது என்று! ஏன்? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் – அம்பேத்துகர் வரைந்த அரசமைப்புச் சட்டத்தில் – 14ஆவது உறுப்பு எல்லோரும் சமம் என்று சொல்லி விட்டது. 15ஆவது உறுப்பு யாரையும் சாதி பார்த்து, மதம் பார்த்து, பிறந்த இடம் பார்த்துப் பாகுபாடு செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டது இதற்கு மாறாக இந்த கம்யூனல் அரசாணை இருக்கிறது, எனவே இது செல்லாது என்று வழக்கு போட்டார்கள். சமம் அல்லாதவர்களைச் சமமாக மதிக்க முடியாது, ஊனமுற்றவரையும் நல்ல கால்களோடு இருப்பவரையும் ஒரே பந்தயத்தில் ஓட விட முடியாது இளவருக்கும்(சூனியருக்கும்)முதுவருக்கும் (சீனியருக்கும்) சேர்த்து ஒரே அணியா  வைத்திருக்கிறோம்? எல்லாமே வித்தியாசப்படும். பார்வை இழந்தவருக்கு பேருந்தில் உட்காருவதற்கு இடம் கொடுத்தால் அவருக்கு மட்டும் ஏன் கொடுக்கிறாய்? எனக்கும் கொடு என்று கேட்க முடியுமா? எனவே சமூக ஊனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இது நியாயம். உலகமெங்கும் இருக்கிற நியாயம். மைக்ரோசாஃப்ட்டில் கருப்பர்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. பெரிய பெரிய குழுமங்களில் கொடுக்கிறார்கள். ஏன்? எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் இருப்பார்கள். எல்லோரையும் வேலையில் சேர்த்து எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லோரையும் சுரண்ட வேண்டும். இல்லை என்றால் எப்படி இட ஒதுக்கீடு கொடுப்பார்கள்? அன்று 30 வருடங்களாக இயங்கி வந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டார்கள்

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

  தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153