(தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8

இந்திய அரசு வங்கியில் தேர்வு வைத்து எடுக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் சுசி எசுடி பிசிக்கு எல்லாம் 80 மதிப்பெண் 90 மதிப்பெண் வந்தால் இந்த பொ.ந.பி (E.W.S.) யில் பார்ப்பனர்களுக்கு 28 மதிப்பெண் வருகிறது

 ஒரே ஒரு கேள்விதான் நண்பர்களே இந்த இட ஒதுக்கீடு என்கிற பேச்சு எழுந்தாலே பார்ப்பனர்கள் அவர்களுடைய அறிவாளர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? தகுதி திறமை போய்விட்டது என்பார்கள். இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் மருத்துவரானால் எப்படி சிகிச்சை செய்வான்? இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் பேராசிரியர் ஆனால் எப்படிப் பாடம் நடத்துவான்? இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஓட்டுனரானால் எப்படி விபத்தில் இல்லாமல் தொடர்வண்டி ஓடும்? அவர்கள் எதை மறைத்தார்கள் தெரியுமா? இட ஒதுக்கீட்டில் தகுதியுள்ளவன் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட முடியும். பொறியியல்   படிக்காமல் இட ஒதுக்கீட்டால் மட்டும் ஒருவன் பொறியாளர் ஆக முடியாது தகுதி திறமை எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அவன் அப்படி வாதம் செய்வான்

 எழுத்தாளர் சுசாதா விகடன் பத்திரிக்கையில் ஒரு கேள்வி பதிலில் இப்படி எழுதினார்; ஒருவர் வந்து சொல்வார்: “மாமா ஒரு இடத்திற்கு நான் சென்றிருந்தேன், சென்ற இடத்தில் எல்லா கேள்விகளுக்கும் நான் நன்றாக தான் பதில் சொல்லி இருந்தேன், ஆனால் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை” என்பார்

 உடனே  சுசாதா கேட்பார்: “பாச்சா நீ என்ன முன்னேறிய வகுப்பா? என்று.” முன்னேறிய வகுப்பாக இருந்தால் நீ ஒழுங்காகவே பதில் சொன்னாலும் வேலை கிடைக்காதாம்! அதாவது அவர் முன்னேறிய வகுப்பாக இருந்தால் அவர் சரியாகப் பதில் சொல்லி இருந்தாலும் அவருக்கு வேலை கிடைக்காது என்கிறார் சுசாதா.

 அப்போது பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வேலை இல்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள், மணி அடித்துக் கொண்டு! உண்மையா இது? ஆனால் இப்போது ஒரே ஒரு கேள்விதான்:

 சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் தகுதி திறமை குலையும் என்றால் பிசி என்றால் தகுதி இல்லாதவன் வந்து விடுவான், எசுசி எசுடி என்றால் தகுதி இல்லாதவன் வந்து விடுவான் என்றாய். ஆனால் இந்த முற்படுத்தப்பட்டவனுக்கு, ஏனைய சாதிகளுக்கு, ஏனைய வகுப்புகளுக்கு, பணக்காரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அப்போது தகுதி திறமை பாதிக்குமா பாதிக்காதா? தகுதிதிறமைதான் உங்களுக்கு இட ஒதுக்கீட்டில் பாதிப்பு என்றால் யாருக்குமே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று கேள். அதை நாடு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளட்டும்

 உண்மையிலேயே நம்முடைய சமூகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்கக் கூடிய வாய்ப்பு, அனைவருக்கும் ஆன வேலை உரிமை, எல்லோருக்கும் சம வாய்ப்பு வந்து விட்டால் ஏன் இட ஒதுக்கீடு தேவைப்படப் போகிறது? அது தானாகவே மறைந்து விடும். அது இருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. யாரும் அது இருக்க வேண்டும் என்று கேட்கவே மாட்டார்கள். ஆனால் இப்போது ஏன் தேவைப்படுகிறது?  உரிமை ஏற்றத்தாழ்வாக இருக்கிறது வாய்ப்பில் சமத்துவம் இல்லை. அதனால்தான் நண்பர்களே, இந்த இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்கு கொடுத்தால் மட்டும் தகுதிதிறமை பாதிக்காது, அதுவே மற்றவர்களுக்கு என்றால் தகுதியும் திறமையும் போய் விடும் என்றால் என்ன நியாயம்?

மிகவும் தந்திரமாக ஒன்றைச் செய்கிறார்கள். அது என்னவென்று  தெரியுமா? சண்டைக்குப் போகிறவன் சுற்றிலும் நான்கு பேரை சேர்த்துக் கொண்டு போவான். காரணம் அங்கிருந்து விழுகிற கல் ஒன்று நம் மீது விழுந்து விடக் கூடாது என்பதற்காக! அது போல் இந்த பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறோம் தெரியுமா? என்கிறார்கள் முசுலிம்கள் இருக்கிறார்கள்! கிறித்தவர்கள் இருக்கிறார்கள்! பல சாதிகாரர்கள் இருக்கிறார்கள்! இந்தப் பல சாதிகள் இவ்வளவு காலமும் பிசியில் இல்லை  எசுசி யில் இல்லை. பிறகு எப்படி இங்கே வந்தார்கள்?

 சரி யாருடா அது என்று எடுத்துப் பார்த்தோம் என்றால் முசுலிம்களில்  யார் தெரியுமா? நவாபுகள்! யார் அது நவாபு குடும்பம்? ஆற்காடு நவாபு குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு! இந்த இராயப்பேட்டையில் அவர்களுக்கு  இருக்கின்ற  அரண்மனையிலேயே நான்கு கல்லூரிகள் வைத்து நடத்திக் கொள்ளலாமே! அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? அவர்களுக்குப் போய் இவர்கள் வாங்கிக் கொடுக்கிறார்களாம்! எனவே இவை அனைத்தும் மோசடி, நண்பர்களே! இது முறியடிக்கப்பட வேண்டும்   

தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆளுங்கட்சி இதை எதிர்க்கிறது விடுதலைச் சிறுத்தைகள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் பொதுவுடைமைக் கட்சியினர் பார்ப்பனர்களுக்கு சாதகமாக பேசுகிறார்கள். அது ஏன் என்று அவர்கள்தான் விளக்க வேண்டும். மாநிலங்கள் அவையில் இந்த சட்டத் திருத்தத் தீர்மானம் கொண்டுவருகிற போது டி கே இரங்கராசன் அதை ஆதரித்துப் பேசினார். கனிமொழி அவர்கள் ஓடோடிப் போய், “என்ன தோழரே நீங்கள் போய் இதை ஆதரிக்கிறீர்களே?” என்று கேட்டார். “இல்லை இல்லை. நீங்கள் அமைதியாக இருங்கள், எங்கள் கட்சியின் உத்தரவுப்படி நாங்கள் ஆதரித்தோம்” என்றார். நான்  அவரைப் பார்ப்பனர் என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். நான் அதனால் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்மானம் யாருக்கான தீர்மானம்? பார்ப்பனர்களுக்கான தீர்மானத்தை ஆதரிக்கிறாரே! இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கின்ற யோசனையை முதன்முதலாகச் சொன்னவர்களே நாங்கள்தான் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறார்கள்! தாலின் பேசிய கூட்டத்தில் அவர்களும் இருந்தார்கள்! தோழர் பாலகிருட்டிணன் அங்கேதான் இருந்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக மண்டல் குழுவின் பரிந்துரையை ஆதரித்து, சாதிக்கு மண்டல் வைத்த நெருப்பு என்ற புத்தகத்தை எழுதியவர் தோழர் ஞானைய்யா!

 இன்றைக்கு அது என்னாயிற்று? இப்போது வந்திருப்பது ஒரு புதிய இட ஒதுக்கீடு மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்ப்பதற்கான ஒரு திட்டம்! அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து அவர்களால் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்றால் அதை காங்கிரசு பொதுவுடைமைக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும் என்றால், நாளைக்கு இட ஒதுக்கீடு தேவையற்றது என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தாலும் அவர்களால் நிறைவேற்ற முடியும்

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153