(தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8

 நமக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன வழி தெரியுமா? தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாடே முடிவு செய்து கொள்ளும் என்கிற கோரிக்கைக்காகப் போராடி வெற்றி பெறுவது ஒன்றுதான் இதற்கு வழி. ஏனென்றால் தமிழ்நாட்டில் எவனும் எதிர்க்க மாட்டான்! வெளியில் வந்து பேச மாட்டான். மண்டல்குழு வந்த போது  பாச கவே எதிர்க்கவில்லை. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயலலிதா பாதுகாத்ததற்காக சமூக நீதி காத்த வீராங்கனை என்று ஆசிரியர் வீரமணி ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிற போது அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பாசக தலைவர் இல. கணேசன்! ஏனென்றால் தமிழ்நாட்டினுடைய தன்மை என்பது வேறு.

 ஆனால் இந்தத் தமிழ்நாட்டிலும் இதை நியாயப்படுத்துகிற ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது. அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா? உங்களுக்கு இந்தத் திட்டம் வந்த புதிதில்  இடபிள்யுஎசு என்றால் அது பார்ப்பனர்களுக்கு என்று உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டார். இது பார்ப்பனர்களுக்கு அல்ல, வேறு எந்த சாதிக்கும் அல்ல, பொருளியலில் நலிந்த எவருக்குமே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும், எசுசி எசுடியாக இருந்தால் நீங்களும் இதற்குள் வரலாம், பிசியாக இருந்தால் நீங்களும் இதற்குள் வரலாம் என்றார். இவையெல்லாம் அண்ணாமலை கொடுத்த பேட்டி.  இதற்குச் சான்றாக தமிழக பாசகவின் தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி இணையத்தில் வலையொளிக் காட்சிகளாக இருக்கிறது. இதே போன்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு என்ன ஆயிற்று? அண்ணாமலை இப்போது எப்படி பதில் சொல்கிறார்? தெளிவாகச் சொல்லி விட்டார்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பிலே சொல்லி விட்டார்கள். இது எசுசி எசுடி பிசி-க்குப் பொருளியலில் இந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது என்பது மட்டுமல்ல, பொருந்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்தச் சட்டமே வந்துள்ளது. எனவே இந்த ஆபத்தை நாம் உணர வேண்டும்

மிழ்நாட்டின் உரிமைக்காக நாம் போராட வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்காக, சமூக நீதி உரிமைக்காக, இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்காக, நாம் போராடுவதற்கு மிகப்பெரும் தடையாக மிகப் பெரும் ஆபத்தாக இன்றைக்கு எழுந்து நிற்பது இந்தியப் பாசக அரசு, பார்ப்பன பாசிச அரசு, மோடி அமித்துசாவின் அரசு!

தோழர் செந்தில் அவர்கள் மொழி தொடர்பாக அரசு எடுத்துள்ள திட்டத்தைப் பற்றி சொன்னார். எப்படி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற கட்டளைகளை மீறிச்  செல்கிறார்கள் என்பதைப் பற்றிச் சொன்னார். ஒரே ஒரு கட்டளைதான்! மீண்டும் அதை நாம் சொல்ல வேண்டா.

1963ஆம் வருட இந்திய ஆட்சி மொழிச் சட்டத்தின்படி இந்தியை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவது, ஆட்சி அலுவலகங்களில் பயன்படுத்துவது எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்று ஆராய்வதற்கு என்று ஒரு குழு அமைப்பார்கள். அந்த குழு என்ன செய்யும்? ஆங்கிலத்தின் இடத்திற்கு இந்தி எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதனை ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை கொடுப்பார்கள். இதுதான் அவர்களுடைய வேலை. அந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிற காலத்தில் 1963ஆம் வருடம் அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். அந்த சட்டத்தின் இரண்டாவது பிரிவிலேயே சொன்னார்கள்: இந்தி ஆட்சி மொழி ஆனதற்குப் பிறகும், 1965இல் இந்தி ஆட்சி மொழி ஆகிவிடும், அதற்குப் பிறகும் ஆங்கிலம் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை தொடரலாம் என்று இருந்தது. May continue என்று இருந்தது.

 அதற்கு அண்ணா கேட்டார்: “நேரு அவர்களே, எதற்கு இந்த may continue? Shall contine  என்று மாற்றுங்கள். ஆங்கிலம் நீடிக்க வேண்டும்” என்று எழுதச் சொன்னார். நேரு சொன்னார் “சட்டத்தில் may, shall இரண்டும்  ஒன்றுதான்” என்று! அதற்கு அண்ணா சொன்னார்: “இரண்டும் ஒன்றுதான் என்றால், shall  என்றே  வைத்துக் கொள்ளலாம்,  ஏன் may போட வேண்டும்?” என்று. இன்றைக்கும் அது may என்றுதான் இருக்கிறது. Shall ஆகவில்லை. இந்தத் தீர்மானத்தின்படிதான் இந்தக் குழு அமைக்கப்படுகிறது – உள்துறை அமைச்சர் அமித்துசா குழு! 

இவர் என்ன சொல்கிறார்?  சென்னை ஐஐடி-லிருந்து சண்டிகர் எய்ம்சு அல்லது பெங்களூரில் இருக்கிற ஐஐஎம்… இந்த உயர்ந்த நிறுவனங்களில் எல்லாம் ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியைக் கொண்டு வந்து விடலாம் என்று! இந்தியைப் பயிற்று மொழி ஆக்க முடியும் முடியாது என்பதெல்லாம் பிறகு இருக்கட்டும்.

 இதற்கும் ஆட்சி மொழிக்கும் என்ன தொடர்பு? பள்ளிகளில், கல்லூரிகளில் தாய் மொழியைப் பயிற்று மொழி ஆக்க வேண்டும் என்றால், அது நம்முடைய கோரிக்கை. மாநில அரசோ மத்திய அரசோ இதைச் செய்யவில்லை என்று நாம் குறை சொல்கிறோம் செய்யச் சொல்லிக் கேட்கிறோம். இதற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்போது அண்ணாமலை கேட்கிறார். அவர்கள் கட்சிக்காரர்கள் மாறு வேடங்களோடு தொலைக்காட்சிகளில் வந்து உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஆர்வலர், வலது சாரியாளர், பத்திரிகையாளர் என்றெல்லாம் பல பெயரில் பேசுகிறார்கள் அவர்களெல்லாம் சொல்கிறார்கள்: “தமிழைச் சொல்லிக் கொண்டு நீங்கள் மட்டும்தான் அரசியல் செய்ய வேண்டுமா? நாங்கள் செய்யக் கூடாதா? “என்று

 நான் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் அண்ணாமலைக்கும் பாரதிய சனதா கட்சியின் தலைமைக்கும் கேட்டுக் கொள்கிறேன். திமுக மட்டும் தான் அரசியல் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை நீங்களும் செய்யுங்கள். ஆனால் திமுக செய்தது போல் செய்து காட்டுங்கள்

 திமுக என்ன செய்தது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியைத் தீயிட்டு சாம்பலாக்கியது உங்களால் முடியுமா? செய்து காட்டுங்கள். இதுதான் தமிழ் அரசியல், இதுதான் மொழி அரசியல். 1964ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் திருச்சி இரயில் நிலையத்தில் பக்தவத்சலத்தை எதிர்த்துக் கேள்வி கேட்ட கீழப்பழூர் சின்னச்சாமி ஊருக்குப் போய் தீக்குளித்தானே சிங்கத்தமிழன் சின்னச்சாமி. அண்ணாமலையே! நீ தீக்குளிப்பாயா தமிழுக்காக

 உங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கிறீர்களே! திருச்சி சூர்யா சிவா, காயத்திரி இரகுராம் இன்னும் யார் யாரோ? அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் இந்த வேலையை விட்டுவிட்டு காயத்திரி இரகுராம் தமிழுக்காகத் தீக்குளிக்கட்டும், ஒரு சிலை வைத்து விடலாம். அதைக் கமலாலய வாசலிலேயே வைத்து விடலாம். மொழி அரசியல் என்பது அவ்வளவு எளிதல்ல பையா! இங்கே இருந்து கொண்டு நீங்கள் காஞ்சிக்கும் வாரணாசிக்கும்  தொடர்பு படுத்தி விட்டால், உடனடியாக மொழி அரசியல் வந்துவிடுமா இந்தப் பரதேசிகளை எல்லாம் கூட்டிக் கொண்டு போய் உங்களுக்கு சால்ரா அடிக்க வைத்தால் அதுதான் மொழி அரசியலா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 Mவது பகுதியைத் திருத்துவதற்கு உங்களுக்கு துப்பு உண்டா? சொன்னீர்களே, 103ஆவது திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று! பார்ப்பானுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு! ஏன் தமிழுக்கு அரியணை கொடுப்பதற்கு இந்தியோடு சரியணை கொடுப்பதற்கு நீங்கள் 17ஆவது பகுதியைத் திருத்துங்கள். திருத்த மாட்டார்கள் என்றால் திருத்தக் கோரி தமிழ்நாடு பாரதிய சனதா கட்சி போராடும் என்று அறிவிப்புக் கொடுங்கள். முடியுமா உங்களால்?

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153