(தோழர் தியாகு எழுதுகிறார் 198 : தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாமா?-தொடர்ச்சி)

அணையாத் தீ!

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப்

பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!

என்று பாவேந்தர் பாடியது போலத்தான் அன்றும் அந்தக் குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றார்கள்.

ஆனால் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக அந்த மழலைச் செல்வங்கள் மீண்டுவரும் என்று அந்தத் தாய் தந்தையர் நினைத்தாரா? உற்றவர் மற்றவர் யாரேனும் நினைத்தாரா? 

குடந்தை காசிராமன் தெருவில் 2004 சூலை 16ஆம் நாள் கிருட்டிணா ஆங்கில வழி (இங்கிலீசு மீடியம்) பள்ளிக்கூடத்தின் கீற்றுக் கூரையில் தாவிப் பற்றிய கொடுந்தீ  தொடக்கக் கல்வி பயின்று கொண்டிருந்த 94  குழந்தைகளை உயிரோடு எரித்த கொடுமையை அறிந்த எவராலும் என்றும் மறக்க முடியாது.

உணர்வுள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் அது அணையாத் தீ!

ஒய்வு பெற்ற நீதியர் சம்பத்து தலைமையிலான குழு… இந்தப் பேரிழப்புக்குக் காரணம் பள்ளி நடத்திய கல்வி வணிகரின் பேராசையே என்று தெளிவாக்கிற்று. குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் என இழப்பீடு தரப்பட்டது. காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தரப்பட்டது.

பள்ளி உரிமையாளர் பழனிச்சாமியும், தாளாளர் சரசுவதியும் மற்றவர்களும் தளை செய்யப்பட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் சிலர் இடைநீக்கம் செய்யபப்ட்டனர்.

நீண்ட காலத்தாழ்வுக்குப் பின் 2012 செட்டம்பர் 24ஆம் நாள்  தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. 2014 சூலை 3Oஆம் நாள் வழங்கப்பட்ட தீர்ப்பில் புலவர் பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிகப்பட்டது. 5 இலட்சத்துக்கு மேல் தண்டமும் விதிக்கப்பட்டது. மேலும் எண்மருக்கு 5 ஆண்டும், ஒருவருக்கு ஈராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூவர் உட்பட 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

94 குழந்தைகள் உயிரோடு எரிந்ததற்கு நம்முடைய சட்டப் பொறிமுறைகள் செய்திருக்கும் நீதி இதுதான்!

இருக்கட்டும். நீதி என்பதென்ன? குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டும்தானா? மீண்டும் அதே போன்ற குற்றம் நிகழாமல் தடுக்கவும் வழி செய்தால்தான் நீதி முழுமை பெறும் என்பதே நீதியுலகம் கண்டுள்ள நெறி.

தமிழ்ப் புலவர் பழனிச்சாமி ஏன் தமிழ்வழிக் கல்விக் கூடம் நடத்தாமல் ஆங்கில வழி (இங்கிலீசு மீடிய)க் கல்வி வணிகத்தில் முதலீடு செய்தார்? மாணவர் – ஆசிரியர் தகவு பற்றி ஏன் தவறான தகவல் தந்தார்? கல்வித் துறை அதிகாரிகள் ஏன் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தார்கள்?

கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து தவறிய அரசு இந்த அவலத்துக்குப் பொறுப்பேற்க வேண்டாமா? வணிகமயத்தில் சிக்கிய கல்வித்துறைதான் இந்தக் கொடுந்தீக்கு இறுதிப் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டுகிறோம்.

பூக்களும் பிஞ்சுகளுமாய்க் கருக்கப்பட்ட அந்த 94 பிள்ளைகளுக்கும் நிறைமுழு நீதி கிடைப்பது எப்போது? அவர்களை உயிரோடும் கல்விக் கனவோடும் எரித்த இந்தக் கல்விமுறையை இந்தத் தமிழ்நாடு வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியும் போதுதான்!

வணிகமயம் தனித்து வரவில்லை தமிழர்களே! அது காவி மயத்தோடும் இந்திய மயத்தோடும் சேர்ந்து வருகிறது. இந்த மும்மயங்களின் திரிசூலம்தான் இந்திய பாசக அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை!

இந்தக் கொள்கையை முறியடிப்பதில்தான் நம் குழந்தைகளின் அறிவு எதிர்காலம் அடங்கியுள்ளது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 227