தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2
(தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! – தொடர்ச்சி)
வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2
நேற்று 26/06 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதை எதிர்ப்புப் பரப்புரையைப் பசுமைவழிச் சாலையில் இடம் பெற்றுள்ள மாநில மனிதவுரிமை ஆணையத்திலிருந்தே தொடங்கியது மிகப் பொருத்தமாக அமைந்தது.
மாநில மனிதவுரிமை ஆணையத்தின் தலைவர் நீதியர் எசு. பாசுகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராசு, மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நீதியர் இராச இளங்கோ, அசீதா, பிரிட்டோ, சீலு பிரான்சிசு, சுதா இராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் வரலட்சுமி, முனைவர் குழந்தை, முனைவர் பாலமுருகன், ஆசீர், கூட்டியகத்தின் செயலாளர் தோழர் மீ.த. பாண்டியன் ஆகியோர் பேசினர்.
வீரத் தமிழ்தேசியத் தமிழர் தமக்கு ஏற்பட்ட சித்திரவதைப் பட்டறிவையும் அதற்கு நீதி பெறுவதற்கான போரட்டத்தையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நான் நோக்கவுரை ஆற்றினேன். எனது உரையின் முகன்மைக் கூறுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சூன் 26 வரலாற்றில் முத்திரை பதித்த நாள்.
1945ஆம் ஆண்டு இதே நாளில்தான், இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு முன்பே, அமெரிக்க நகரமான சான் பிரான்சிசுகோவில் 50 நாடுகள் ஐநா பட்டயத்தில் [UNITED NATIONS CHARTER] ஒப்பமிட்டன. இதுதான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிறப்பைக் குறித்தது. இன்றைய நிலையில் ஐநா உறுப்பரசுகள் பாலத்தீனம் உட்பட 194.
இந்தியா சார்பில் ஐநா பட்டயத்தில் ஒப்மிட்டவர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார். [ஐநாவுக்கே போனாலும் முதலியார் முதலியாராகவே போயிருக்கிறார்! முன்னொட்டு ‘சர்’ வெள்ளைக்காரன் கொடுத்த பட்டம். பின்னொட்டு ‘முதலியார்’ இந்துச் சமூகம் வழங்கிய பட்டம்.]
1987ஆம் ஆண்டு இதே நாளில்தான் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் செயலுக்கு வந்தது. முன்னதாக, சித்திரவதை மற்றும் கொடிய, மனிதத் தன்மையற்ற, இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைக்கு எதிரான ஒப்பந்தம் (CONVENTION AGAINST TORTURE AND CRUEL, INHUMAN, DEGRADING TREATMENT OR PUNISHMENT) வரையப் பெற்று 1984 திசம்பர் 10ஆம் நாள் ஐநா பொதுப் பேரவையில் இயற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அரசுகள் ஒப்பமிட வேண்டும். ஒப்பமிட்டால் போதாது, ஏற்புறுதி செய்ய [RATIFY] வேண்டும்.
இருபது நாடுகள் ஏற்புறுதி செய்த பின் 1987 சூன் 16ஆம் நாள்தான் இந்த ஒப்பந்தம் செயலுக்கு வந்தது. அரசுகள் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை இயற்றுவதற்கு வாக்களித்தாலும், அதனை நடைமுறைப்படுத்த விரும்பாமையைத்தான் இது காட்டுகிறது. அரசதிகாரத்துக்குச் சித்திரவதை தேவை என்று வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் இதுதான் அவற்றின் உள்ளக்கிடக்கை.
1987ஆம் ஆண்டு இந்த நாளில் செயலுக்கு வந்து விட்ட சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில், பத்தாண்டு கழித்து 1997ஆம் ஆண்டுதான் இந்தியா ஒப்பமிட்டது. ஆனால் இன்று வரை ஏற்புறுதி செய்யவில்லை. ஏற்புறுதி செய்வதானால் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தை முன்வைத்து இயற்ற வேண்டும். இயற்றினால்தான் அது சட்ட வலிமை பெறும். இது தொடர்பான ஐநா குழுவுக்கு இந்தியா பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் உருவாகும்.
சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட இந்திய அரசு அதனை ஏற்புறுதி செய்யவில்லை என்பது இந்தியாவில் மனிதவுரிமை அமைப்புகளின் கடுமையான இடித்துரைக்கு இலக்கானதோடு பன்னாட்டு அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி வந்த நிலையில், 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. அவ்வளவுதான், வேறு ஒன்றும் நடக்கவில்லை.
பன்னாட்டு அரங்கில், காட்டாக உலகளாவிய காலமுறை மீளாய்வில் (UPR) இது பற்றிய கேள்விகளுக்கெல்லாம் இந்தியத் தரப்பின் விடை “பரிசீலனையில் உள்ளது” என்பதே. சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டுச் சட்டத்தை முறையாக மதித்து ஏற்றுக் கொண்டுள்ள 173 நாடுகளில் இந்தியா ஒன்றில்லை என்பது வெட்கக்கேடானது. இந்த நிலையில் இந்தியா ஆகப் பெரும் குடியாட்சியமாம்! சனநாயகமாம்! நம்புங்கள்!
2002ஆம் ஆண்டு “சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்துக்கு விருப்புசார் வகைமுறை” [Optional Protocol to the Convention against Torture] இயற்றப்பட்டது. சித்திரவதை மற்றும் கொடிய, மனிதத் தன்மையற்ற, அல்லது இழிவான நடத்துமுறையைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் படிக், காவல் கூடங்களைப் பன்னாட்டு மேலாய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். இது தவிர உள்நாட்டளவிலும் தற்சார்பான தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது வரை 91 அரசுகள் மட்டும் இந்த வகைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்தியா பற்றிச் சொல்லவே வேண்டா. இறையாண்மை என்னாவது? சித்திரவதை இல்லை என்றால் இந்திய இறையாண்மையைக் காக்க முடியாது என்பதுதான் அரசின் முடிவா? எனக் கேட்க வேண்டியுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டுச் சட்டம் இந்தியாவில் செயல்வடிவம் பெறாத நிலையில், இந்திய நாட்டுக்கென்று சித்திரவதைக்கு எதிரான சட்டம் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாடு காவல் சித்திரதைத் தடுப்புச் சட்டம் [TAMILNADU PREVENTION OF TORTURE ACT] இயற்ற வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்துகின்றோம். இந்த ஆண்டே, இந்தத் திங்களே இப்படி ஒரு சட்டம் இயற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது மட்டுமல்ல, அதற்கான அவசரத் தேவையும் தமிழ்நாட்டில் உள்ளது.
1987ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் செயல்வடிவம் பெற்ற இந்த நாளைத்தான் “சித்திரவதையினால் துயருற்றவர்களுக்கு ஆதரவு தரும் பன்னாட்டு நாளாக”க் கடைப்பிடிக்கிறோம்.
சரி, சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா மறுக்கிறது. இதற்கென்று தேசியச் சட்டமும் இல்லை, மாநிலச் சட்டமும் இல்லை. அப்படியானால் இப்போது நம் காவல் நிலையங்களில் நடக்கும் சித்திரவதை சட்டப்படியானதா? இல்லை. 1955ஆம் ஆண்டில் அது வரை நடைமுறையில் இருந்த கசையடிச் சட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. அத்தோடு எவ்வகையான உடல்-ஒறுப்புத் தண்டனைக்கும் [corporal punishment] சட்டத்தில் இடமில்லாது போயிற்று. நான் காவல்துறை அதிகாரியைத் தாக்கினால் குற்றம். அவர் என்னைத் தாக்கினாலும் குற்றம். இரண்டும் ஒரே அளவிலான, ஒரே தன்மையிலான குற்றங்கள்தாம். இரண்டுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒரே பிரிவு அல்லது பிரிவுகள்தாம்! பென்னிக்குசு- செயராசு கொலைக்காகச் சிறையில் இருக்கும் காவல்துறையினர் பத்துப் பேரும் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் புரிந்த குற்றத்துக்காகத்தான் சிறையில் அடைபட்டுள்ளனர் என்பதை மறவாதீர்கள்.
சித்திரவதைக் குற்றம் புரிந்தவர்களை இப்போதுள்ள சட்டங்களின் படியே தண்டிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு இயல்பாகவோ எளிதாகவோ நடப்பதில்லை.
ஒன்று, இந்தக் குற்றவாளிகள் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கின்றார்கள். சித்திரவதை அச்சுறுத்தலைக் கொண்டே பாதிக்கப்பட்டவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு வாய்ப்புள்ளது. அதே போல் சான்றுகளை அழிக்கவும், சான்று சொல்லக் கூடியவர்களை ஆசை காட்டியோ அச்சுறுத்தியோ வழிக்குக் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 233
Leave a Reply