(தோழர் தியாகு எழுதுகிறார் 214 : வான்தொடு உயரங்கள் தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
காலுடுவெல் கலைவண்ணம்


அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபருட்டு காலுடுவெல் முதலில் திருத்தொண்டராக 1838இல் சென்னைக்கு அனுப்பப்பட்டு, 1841இல் இடையன்குடி வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக்கு, சத்தியநாதன் ஆகியவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கிறித்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சிறு கூட்டமும் உருவாகியிருந்தது. இவர்கள் வழிபாடு செய்வதற்காக ஒரு சிறிய ஆலயமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கிறித்தவர்களை முறையாக வழிநடத்த முழுநேரத் திருத்தொண்டர்கள் இல்லை. எனவே அவர்கள் முழுமையாகக் கிறித்துவத்தில் ஊன்றி நிற்கவில்லை. காலுடுவெல் பணி தொடங்கும் பொழுது இடையன்குடியைச் சுற்றி வறுமையில் வாடிய இருபது குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கிறித்துவத்தில் இருந்தனர். அங்கிருந்த சிறிய ஆலயம் புயலால் சிதைந்து சேதமுற்றுக் கிடந்தது.

இடையன்குடி இடையர்கள் வதியும் குடியிருப்பாக இருந்து, வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவர்கள் குடிபெயர்ந்து சென்ற பின் பெயர் மாறாமலே நாடார்குடி ஆயிற்று. இடையன்குடி என்ற பெயர் முன்பே இருப்பினும் அந்த ஊரைத் திட்டமிட்டு ஒழுங்குற அமைத்தவர் காலுடுவெல்தாம். அவர் விரும்பியிருந்தால் அதன் பெயரை மாற்றியிருக்கலாம்.

மற்றவர்களால் தொல்லைக்கு ஆளான கிறித்தவ மக்களைத் தண்பொருநை (தாமிரவருணி) ஆற்றின் வடபுறத்தில் 150 காணி(ஏக்கர்) நிலம் வாங்கி அமைதியான இடத்தில் குடியமரச் செய்து, அந்த ஊருக்கு சாயர்புரம் என்று பெயரிட்டனர். இப்படி அமைக்கப்பட்டதுதான் சமாதானபுரமும்.

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய ஐரோப்பியக் கிறித்துவத் திருத்தொண்டர்கள் இரேணியசு, சி.யு. போப்பு, மாகாசியசு போன்றவர்கள் சாயர்புரம், சமாதானபுரம், ஞானஒளிபுரம், மெய்ஞ்ஞானபுரம், நாசரேத்து, அடைக்கலப்பட்டணம் என்றெல்லாம் விவிலியப் பெயர் சூட்டியிருந்த போதிலும், காலுடுவெல் அவ்வழியைக் கடைப்பிடிக்கவில்லை. இடையன்குடி அவரது சொந்த ஊரான Shepherdyard-ஐ நினைவூட்டியதுதான் காரணமா? உறுதியாகத் தெரியவில்லை.

இப்படியும் இருக்கலாமோ? என்று நான் ஒரு காரணம் சொன்னேன்: இடையர் என்ற பெயர் ஆயர் அல்லது மேய்ப்பரைக் குறிப்பதால், ஆண்டவரை மேய்ப்பராகவும் மக்களை ஆட்டுமந்தையாகவும் உருவகப்படுத்தும் கிறித்துவப் படிமவியலுக்கு இந்தப் பெயர் பொருத்தம் என்று காலுடுவெல் கருதியிருக்கக் கூடும். இஃது ஓர் ஊகம்தான்.

காலுடுவெல் தபுளினில் ஓவியம் படித்தவர்; அழகுணர்ச்சி மிக்கவர். இடையன்குடி ஊரையும் திரித்துவ ஆலயத்தையும் அவர் அமைத்த விதத்தில் இந்த அழகுணர்ச்சிக்கு முகன்மைப் பங்கிருந்தது. காலுடுவெல்லின் மனிதநேயத்துக்குச் சான்றாகக் கடும் பஞ்சத்தின் போது கோயில் கட்டுவதற்கான பணத்தை எடுத்து அவர் பஞ்சத்தில் தத்தளித்த மக்களுக்கு உதவிகள் வழங்கியதை அருள்திரு கிப்புசன் சுட்டிக்காட்டினார்.

திரித்துவ ஆலயக் கட்டுமானத்தில் காலுடுவெல்லின் கைவண்ணம் குறித்து அறிய இரா.பி. சேதுப்பிள்ளையிடமே திரும்பிச் செல்லலாம்:

“அக்கோவிலின் ஒவ்வோரங்கமும் கண்ணைக் கவரும் அழகு வாய்ந்து விளங்குகின்றது. ஆயினும் சாலச்சிறந்த அக்கோவில் சாளரங்களைக் கண்டோர் அவற்றின் அழகையும் அமைப்பையும் எந்நாளும் மறவார் என்பது திண்ணம். காலுடுவெல் ஐயர் களியினால் சாளரங்கள் செய்து அவற்றில் கோலமார் கோடுகள் வரைந்து காட்டினார் என்றும் அவற்றை மாதிரியாகக் கொண்டு தச்சரும் கொல்லரும் சாளர வேலை செய்து முடித்தார் என்றும் அவ்வூர் முதியோர் கூறுகின்றார்கள்….”

இடையன்குடி ஆலயம் கோதிக்கு கட்டடக் கலை மரபு (GOTHIC ARCHIECHTURE) சார்ந்து கட்டப்பட்டது. ஜெர்மனியில் கிபி 11ஆம் நூற்றாண்டில் தோன்றி 13ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்ற இக்கலைமரபில் தேவாலயங்களும், அரண்மனைகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன. கூர்மையான வளைவு, மெல்லிய உயரமான தூண்கள், அவற்றின் புடைப்புக் கோடுகள், தூண்கள் மேல் நாற்புறம் அமைந்த வளைவுகளின் மீதான கூரை, சித்திர வேலைப்பாடு கொண்ட சாளரங்கள்… இவையெல்லாம் இக்கலைமரபின் அடையாளங்கள்.

கட்டடக்கலை பற்றி அரிச்சுவடி கூட அறியாதவன் என்றாலும் இடையன்குடி திரித்துவ ஆலயத்தின் அழகை உணர முடிகிறது. நுழைவாயிலை நடுவில் அமைக்காமல் ஓரத்தில் அமைத்தது புதுமை எனப்படுகிறது. ஆலயத்தின் சுவரும் தரையும் கருங்கற்களால் ஆனது. வெளிப்புறக் கட்டட அமைப்பு பிரெஞ்சுக் கட்டடக் கலை சார்ந்ததாம். பலிபீடத்தின் மேற்கூரையும் சாளரங்களும் கோதிக் கலை மரபை ஒட்டியதாம். சாளரச் சித்திரங்கள் காலுடுவெல்லின் கைவண்ணமாம். கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் ரோமானிய, அராபியக் கலை மரபுகளின் கலவையாம்.

கோயிலின் உட்புறத்தில் கூர்மையான ஐந்து வளைவுகள் மீது மரத்தால் கூரை வேயப்பட்டுள்ளது. இது பனிப் பகுதிகளுக்குரிய அமைப்பு ஆகும். கூரை குத்துச் சாய்வாய் உள்ளது.
.
1847ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய போதிலும், பசி பஞ்சம் குறுக்கிட்டதாலும், காலுடுவெல்லின் தமிழாராய்ச்சி காரணமாகவும் 33 ஆண்டு நீண்ட காலத்தாழ்வு ஏற்பட்டு 1880ஆம் ஆண்டுதான் காலுடுவெல் நெல்லை உதவி ஆயராகப் பொறுப்பேற்ற பின் தூய திரித்துவ ஆலயம் கட்டிமுடிக்கப்பெற்று திருநிலைப்படுத்தப்பட்டது.

காலுடுவெல் கல்விப்பணி ஆற்றிய காலத்தில்தான் குடியேற்ற ஆட்சியில் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கல்வி நிலையங்கள் என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றது. குடியேற்ற அரசும் பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. காலுடுவெல் இடையன்குடியிலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் ஒன்பது பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு இந்தச் சூழல் ஏற்றதாக இருந்தது. பள்ளி மாணவர்களுக்குப் பகலுணவுத் திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார். பகலுணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தது யார்? என்ற போட்டியில் இனி நீங்கள் காலுடுவெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

காலுடுவெல்லின் துணைவியார் எலிசாவும் கல்விப் பணியில் துணைநின்றார். இடையன்குடியில் தையல் பள்ளி தொடங்கினார். பெண்களுக்கான உறைவிடப் பள்ளியும் அமைத்தார்.

காலுடுவெல் குறித்து அவரது ஒப்பாய்வு மொழியியலுக்கு அப்பாலும் சொல்ல வேண்டியவை எவ்வளவோ இருப்பினும், முடிவில் நான் பதிவு செய்ய விரும்புவது அவரது சுற்றுச் சூழல் உணர்வையே. இதற்கு இடையன்குடியில் அவர் நட்ட மரங்களே உயிர்ச் சான்று. நெல்லை மாவட்டத்தின் வறட்சிக்கும் தேரிக்காட்டின் வெப்பத்துக்கும் அவ்வப்போது வாட்டிய பஞ்சத்துக்கும் காலுடுவெல் கண்ட விடை மழைவளம் பெற மரம் வளர்க்க வேண்டும் என்பதே.

“இன்னும் சில இடம் பார்க்க வேண்டும்” என்று அருள்திரு கிப்புசன் நினைவூட்ட இறங்கு பயணம் தொடங்கிற்று. ஏறுவதை விட இறங்குவது எளிது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக் கோபுரத்தின் படிக்கட்டுகளில் மாறிமாறி முன்னோக்கியும் பின்னோக்கியும் அமர்ந்தும் எழுந்தும் திரும்பியும் ஒரு வழியாகக் கீழே வந்து சேர்ந்த போது ‘அப்பாடா’ என்று இருந்தது, எனக்குத்தான்!

திட்டமிட்ட படி உவரி சென்று கடற்கரையில் உட்கார்ந்து வெளியிலிருந்தே அந்தோணியார் கோயில் பார்த்து, வழியில் கப்பல் மாதா கோயில் பார்த்து விட்டு, நெல்லை புறப்பட்டோம்.

இந்த அருமையான இடையன்குடிப் பயணத்தை எளிதும் இனிதும் ஆக்கித்தந்த அருள்திரு கிப்புசன், உடன் வந்த பீட்டர், ஓட்டுநர் பாலு அனைவருக்கும் நன்றியறிகிறேன்! நெல்லையில் இது என் விருப்பம் என்று சொன்னவுடனே பார்த்துப் பார்த்து நிறைவேற்றிய பிரிட்டோவை மட்டும் மறந்து விட்டேன், பாருங்கள்!


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 241