(தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு-தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

இனிய அன்பர்களே!

காதை (1)

எனக்கு வயது 18, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண். கிழக்கு இம்பாலில் இது நடந்தது: ஆயுதமேந்திய மெய்த்திப் பெண்கள் குழு ஒன்று, அதன் பெயர் மீரா பைபிசு, பெண் சுடரேந்திகள் என்று பொருள். மற்றொரு பெயர் “மணிப்பூர் அன்னையர்” என்பதாகும். இந்தக் குழுவினர் என்னைப் பிடித்து கறுப்பு உடையணிந்த நான்கு இளைஞர்கள் கொண்ட ஒரு மெய்த்திக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

மே 15 மாலை 5 மணி இருக்கும். அந்த நான்கு இளைஞர்களும் நீலநிற மகிழுந்தில் என்னை வாங்கி அயங்பாலி என்ற இடத்துக்குக் கடத்திச் சென்றார்கள். என்னை மாறி மாறிக் குத்தவும் அடிக்கவும் செய்தார்கள். மீரா பைபிசு அமைப்பைச் சேர்ந்த பெண்களையும் உள்ளூர் ஆண்களையும் அழைத்தார்கள். அவர்களும் மாறி மாறி எங்களை அறைந்தார்கள், முகத்தில் குத்தினார்கள், கடுமையாக அடித்தார்கள். அந்தப் பெண்களில் ஒருத்தி ‘அரம்பை தெங்கோல்’-ஐ அழைக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டேன்.

கருஞ்சட்டை அணிந்த நால்வர் வந்து சேர்ந்தனர் சட்டையில் ஏதோ இலச்சினை பதித்திருந்தார்கள். துப்பாக்கி வைத்திருந்தார்கள். நால்வரில் இருவருக்கு 35 வயது இருக்கலாம், இருவர் 50க்கு மேல். கூட்டத்திலிருந்து பெண் ஒருத்தி என்னைக் கொன்று விடும் படி அவர்களுக்குக் கட்டளையிட்டாள். அந்த நால்வரும் என்னை வேறொரு மகிழுந்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்.

அவர்கள் என்னிடம் ஏதோதோ கேட்டுக் கொண்டே வந்தனர். நான் விடை சொன்னாலும், மௌனமாகவே இருந்தாலும், அறைவார்கள். ஓரிரு முறை துப்பாக்கிக் கட்டையால் மொத்தவும் செய்தார்கள். ஒரு மலையுச்சி போல் இருந்த இடத்தை அடைந்தோம். அங்குதான் என்னைக் கொலை செய்யத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் என்னை எப்படிக் கொலை செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்ததை நானே கேட்டேன். அவர்களுள் மூத்தவரின் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினேன். என்னை விட்டு விடுங்கள், ஓடிப்போகிறேன், இம்பாலுக்குத் திரும்பி வரவே மாட்டேன், என் தாய் தந்தையைப் பார்க்க வேண்டும்” என்று கதறினேன்.

மீண்டும் என்னை மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு, கொலை செய்யப் பொருத்தமான இடம் தேடினார்கள். சிறிது நேரம் சுற்றி விட்டு ஒரு மலை உச்சிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். என்னை மகிழுந்திலிருந்து இழுத்துப் போட்டு, உதைத்தும் குத்தியும் அறைந்தும் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஒரு முறை துப்பாக்கிக் கட்டையால் ஓங்கிக் குத்திய போது கொஞ்ச நேரம் எனக்கு எல்லாமே இருண்டு போயிற்று. கண்கள் திறந்த போது முகத்தில் தூறல் விழுவதை உணர்ந்தேன்.

எனக்கு உணர்வு வந்தவுடன் அவர்கள் மீண்டும் என்னை அறைந்து படுக்க வைத்து நால்வரில் மூவர் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வல்லுறவு கொண்டார்கள். என் செவிகளிலும் முகத்திலும் தலையிலும் குருதி வடிந்து ஆடைகளையும் முகத்தையும் நனைத்து விட்டது. அந்த மூவருக்கும் எஞ்சிய ஒருவருக்கும் இடையே என்னைக் கொன்று விடுவது பற்றி வாக்குவாதம் நடந்தது.

நாங்கள் உன்னைப் போக விட்டால் காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து விடுவாய், ஆனால் நீ அப்படிச் செய்தால் உன்னைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். என்னை விட்டு விடுவதா? கொன்று விடுவதா? என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் மகிழுந்தைத் திருப்ப முயன்று விபத்தாக என் மீது மோதி நான் ஓடையில் விழுந்து மலை உச்சியிலிருந்து உருண்டு விட்டேன்.

உருண்டு உருண்டு ஒரு சாலையில் வந்து விழுந்தேன். அவ்வழியாகச் சென்ற ஒரு மிதியுந்தை( ‘ஆட்டோ ரிக்சுசா’வை) உதவிக்கு அழைத்தேன். அந்த ஓட்டுநர் என்னைக் காய்கறிக் குவியலுக்குள் மறைத்து பிட்ணுபூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றார். என்னை வீட்டிலே கொண்டுபோய் விட வேண்டிய அந்தக் காவல் துறையினர் மெய்த்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் “என்னை இந்தக் காவல் நிலையத்தில் விட வேண்டா, என்னைப் புது இலாம்புலேன் பகுதியில் எங்கள் வீட்டில் விட்டு விடுங்கள், நான் காவல்துறையை நம்பவில்லை” என்று மான்றாடினேன்.

மே 16ஆம் நாள் விடிகாலை 4.30 அளவில் இம்பாலை விட்டு வெளியேறி சபோர்மீனாவுக்கு வந்து சேர்ந்தேன். பிறகு காங்குபோக்குபி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை மோசமானதால் நாகாலாந்திலுள்ள கோகிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். ஓரளவுக்குத் தேறி விட்டாலும் இவ்வளவு காலமும் காவல் துறையில் முறைப்பாடு செய்ய அஞ்சிக் கொண்டிருந்தேன்.

மே 4ஆம் நாள் தௌபாலில் மூன்று பெண்களை அம்மணமாக்கி வலம்விட்டு, அவர்களில் ஒருத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி அண்மையில் வெளிவந்த பிறகுதான் துணிச்சல் பெற்றுக் காவல்துறையில் முறைப்பாடு செய்ய முன்வந்தேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 258