தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – தொடர்ச்சி)
மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)
இனிய அன்பர்களே!
காதை (2)
நான் அங்குலால்முவன் வைப்பே, சூரசந்துபூர் கல்லூரியில் புவியியல் பட்டப் படிப்பு மாணவன். அகவை 21. சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவன். முகநூலில் இடுகை இடுவேன். பிடித்தமான பிறர் இடுகைகைகளைப் பகிர்வேன்.
ஏப்பிரல் 27க்குப் பின் சூரசந்த்பூர் மாவட்டமே பதறியது. குக்கி-சோ குழுக்கள் முதலமைச்சர் பிரேன் சிங்கை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தன. அவர் தொடங்கி வைப்பதாக இருந்த உடற்பயிற்சிக் கூடம் தீவைத்து எரிக்கப்பட்டது.
குமுக ஊடகங்களில் விரைந்து பரவிக் கொண்டிருந்த “பான் லீ” என்பவரின் முகநூல் இடுகை என் கருத்தைக் கவர்ந்தது. குக்கி-சோ மக்கள் அடைந்து வரும் இன்னலுக்கு முதலமைச்சர் பிரேன் சிங்கும் மெய்த்தி அரசியல் தலைவர்களுமே காரணம் என்று அந்த இடுகை குற்றஞ்சாற்றியிருந்தது. நான் இந்த இடுகையை என் முகநூல் பக்கத்தில் மீள்பதிவு செய்தேன். ஆனால் 24 மணி நேரத்தில் அதனை நீக்கி விட்டேன். ஆனால் அதற்குள்ளேயே காவல்துறை அதனைக் கவனித்து விட்டது. ஏப்பிரல் 30 என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. “பான் லீ” மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றாலும் என்னைக் கைது செய்தனர்.
“முதலமைச்சரின் ஆதரவுடன் மெய்த்தி சமுதாய அரசியல் தலைவர்கள் மலைப்பகுதிகளில் கசகசா பயிரிடத் தூண்டுகின்றனர், பழங்குடி மக்கள் மீது பழி போட்டு அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்காகவே இப்படிச் செய்கின்றனர்” என்பது அந்த முகநூல் இடுகையில் காணப்பெற்ற செய்தி. மெய்த்தி சமுதாயத்தை இனவாதிகள், “இந்தியாவுக்கு எதிரானவர்கள்”, மணிப்பூரின் துயரங்களுக்கு எல்லாம் காரணமானவர்கள் என்றெல்லாம் அதில் எழுதப்பட்டிருந்தது.
மே 3ஆம் நாள் இந்த வழக்கில் எனக்குப் பிணை விடுதலை கிடைத்தவுடனே, இம்பால் காவல் நிலையத்தில் இதே குமுக ஊடகப் பதிவுக்காக மீண்டும் ஒரு முதல் தகவல் அறிக்கை அளித்து என்னை முறைப்படித் தளைப்படுத்தினர். ஒரே முகநூல் இடுகைக்காக 24 மணி நேரத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன.
ஏப்பிரல் 30 காலை 10 மணிக்குப் பதிவு செய்த முதலாவது முதல் தகவல் அறிக்கை காலை 9.50க்கு பான் லீ முகநூலில் இடுகையிட்டதாகக் கூறியது, இந்த இரண்டாவது முதல் தகவல் அறிக்கையும் காலை 9.30க்கு முகநூல் இடுகை செய்யப்பட்டதாகக் கூறியது. என்மீதான வழக்கில் புலனாய்வு அதிகாரியான இம்பால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஞ்சீவ சிங்கு அளித்த முறைப்பாட்டின் பேரில்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருந்தது.
மே 4ஆம் நாள் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ சிங்கு என்னை நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அவர் தன் சொந்த ஊர்தியில் வந்து கொண்டிருந்தார். காவல் ஊர்தியில் என்னோடு வழிக்காவலாகக் காவல்துறையினர் வந்து கொண்டிருந்தனர்.
போறோம்பட்டு நடுவில் உள்ள பாப்புலர் உயர்நிலைப் பள்ளியை அடைந்து விட்டோம். ஆண்களும் பெண்களுமான சற்றொப்ப 800 பேர் கொண்ட கும்பல் சிறை செல்லும் சாலையில் வந்த ஊர்திகளை எல்லாம் மறித்து சோதனை செய்து கொண்டிருந்தது. காவலர்கள் உதவி கேட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தனர். திரும்பிச் செல்லவும் வழியில்லை. பின்புறம் இன்னொரு கும்பல் வழிமறித்து நின்றது. வேறு வழியின்றி முன்சென்றனர். வன்முறைக் கும்பல் வண்டியை மறித்து துவக்குகளையும் தோட்டாக்களையும் பறித்துக் கொண்டது.
அவர்கள் சஞ்சீவசிங்கையும் காவலர்களையும் கைதி வைப்பேயையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு அடிக்கலாயினர். அவர்கள் கையில் இரும்புத் தடிகளும் குச்சிகளும் உரிமம் பெற்ற துவக்குகளும் இருந்தன.
என்னைக் காப்பற்ற முயன்ற காவலர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அவர்கள் சேதமுற்ற ஊர்திகளில் ஏறி வெவ்வேறு திசையில் தப்பிச் சென்றனர். என்னை அந்த வெறிக்கும்பல் அடித்துக் கொல்லப் போகிறது.
+=+
பின் காதை (1):
நான் உதவிக் காவல் ஆய்வாளர் சஞ்சய் சிங்கு. மணிப்பூர் முதலமைச்சருக்கும் மெய்த்தி சமுதாய அரசியல் தலைவர்களுக்கும் எதிரான ஒரு முகநூல் இடுகையை மீள்பதிவு செய்த குற்றத்துக்காகத் தளைப்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் வைப்பே என் தலைமையிலான காவல்படையின் காவலில் இருந்து வெறிக் கும்பலால் பறித்துச் செல்லப்பட்டு, அடித்துக் கொலை செய்யபப்பட்டார். இந்நிகழ்வு நடந்து ஏழு மணிநேரம் கழித்து இரவு 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் என் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். குற்றஞ்சாட்டப்பெற்ற வைப்பேயை எங்களால் வன்முறைக் கும்பலிடமிருந்து காக்கவும் முடியவில்லை, அவரது உடலைக்கூட மீட்கவும் முடியவில்லை.
பின்காதை (2):
நான் வைப்பேயின் தந்தை. நானும் குடும்பத்தினரும் சூரசந்த்பூர் திங்கன்பாய் சோமி பெத்தலில் இருக்கிறோம். என் மகன் வைப்பேயின் உடல் எங்கே என்று தெரியவில்லை. இம்பாலில் சவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தில் அவன் உடல் இருப்பதாக காவல்துறை சொல்கிறது. ஆனால் இம்பால் செல்வது பற்றி எங்களால் எண்ணிப் பார்க்கவும் முடியாது.
காவல் உதவி ஆய்வாளர் சொல்வதை முழு உண்மை என்று எங்களால் ஏற்க முடியவில்லை. அவர் கடமை தவறியுள்ளார், அல்லது சதி செய்துள்ளார். மே 18ஆம் நாள் நான் இது குறித்து சூரசந்த்பூர் காவல்துறைக்கு முறைப்பாடு அனுப்பியுள்ளேன். வைப்பேயின் தாய் தந்தையாகிய நாங்களும் அவனுடைய தம்பி தங்கையும் காவல் துறை அவனைப் பிடித்துச் சென்ற நாளுக்குப் பின் அவனைப் பார்க்கவே இல்லை.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 259
Leave a Reply