(தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை (5)


என் பெயர் தியன்ன வைப்பே சௌண்டாக்கு. மணிப்பூர் மாநிலம் பெய்டாச்சிங்கு சிற்றூரில் கிறித்துவ சமயக் குரு. மே 7ஆம் நாள் பெரிய வெறிக்கும்பல் ஒன்று எங்கள் ஊரைத் தாக்கியது.

மறுநாள் இரு குழந்தைகளின் தாயான 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்து கருகிய நிலையில் கிடக்கக் கண்டேன். உடலில் ஆடையில்லை. இம்பாலில் உள்ள ஓர் அரசு மருத்துவமனைக்கு அந்த உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அது இப்போது எங்குள்ளது என்று தெரியவில்லை.

மே 6ஆம் நாள் கருஞ்சட்டை அணிந்து ஆயதமேந்திய ஆட்கள் ஊருக்குள் வந்தார்கள். மணிப்பூர் காவல் துறையின் ‘அதிரடிப்படை’களும் வன்முறைக் கும்பலுடன் சேர்ந்து வந்திருந்தார்கள்.

பின்கதை: காங்குபோக்குபியில் பதியப்பெற்ற இன்னொரு சுழிய முதல் தகவல் அறிக்கையில் [ZERO FIR] கண்டுள்ளபடி, மே 4ஆம் நாள் இம்பால் கிழக்கில் இரு பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்து விட்டனர். அந்தப் பெண்களில் ஒருத்தியின் தாய் முறைப்பாடு செய்து முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளார். கோனுங்கு மாமாங்கு அருகிலுள்ள தங்களின் வாடகை வீட்டில் வைத்து நூறு இருநூறு பேர் கொண்ட வெறிக்கும்பல் தங்களைத் துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். கொலையுண்ட பெண்களின் உடல்கள் இது வரை கிடைக்கவில்லை. காவல்துறை “அடையாளந்தெரியாத குற்றவாளிகள்” மீது வழக்குப் பதிந்துள்ளதாம்!

தாழி: சுழிய முதல் தகவல் அறிக்கை [ZERO FIR] என்றால் என்ன? குற்றத்தால் பாதிப்புற்றவர் குற்றம் நடைபெற்ற சரகத்திற்குரிய காவல் நிலையத்தில்தான் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றில்லாமல், எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம், அதாவது முதல் தகவல் அறிக்கை பதியலாம் என்பதற்கான வழிவகைதான் சுழிய முதல் தகவல் அறிக்கை. மணிப்பூரில் நடந்த குற்றங்களுக்கு முறைப்பாடு செய்ய இது பெரிதும் பயன்பட்டு வருகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 261