தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10
(தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9 – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)
காதை 10
என் பெயர் சிங்கனிமோய் சூ. குக்கி இனம், அகவை 25. என் கணவர் தங்கூலால் மணிப்பூரில் கடந்த இரு மாதக் காலமாக நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர். எனக்குத் தெரிந்தவரை நடந்ததைச் சொல்கிறேன்.
என் கணவர் பாசக சட்டமன்ற உறுப்பினர் உங்சாகின் வால்து என்பவரின் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மே 5ஆம் நாள் தலைநகரம் இம்பாலில் சட்டமன்ற உறுப்பினர் வால்த்தை ஒரு வன்முறைக் கும்பல் சூழ்ந்து கொண்டது.
இந்தத் தாக்குதலில் வால்து பிழைத்துக் கொண்டார். ஆனால் ஓட்டுநர் தங்கூலாலை அந்தக் கும்பல் மூர்க்கமாக அடித்தும் கத்தியால் குத்தியும் வீழ்த்தியது. மறுநாள் மே 6ஆம் நாள் அவர் உயிரிழந்தார்.
மே 3ஆம் நாள் பழங்குடி ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது அல்லவா? அதையொட்டி முதலமைச்சர் பிரேன் சிங்கு ஒரு கூட்டம் கூட்டினார். அந்தக் கூட்டத்துக்குச் சட்டமன்ற உறுப்பினரோடு என் கணவரும் போய் விட்டார்.
நான் தொலைபேசியில் அவரோடு பேசினேன். “இந்தக் கூட்டங்கள் ஆபத்தானவை, நீங்கள் ஏன் போனீர்கள்?” என்று கேட்டேன். “சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் முதலமைச்சர் அழைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்” என்றார். “வீடு திரும்பியதும் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்.
சிறிது நேரம் கழித்து அவரை அழைக்க முயன்றேன். தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரும் திருப்பி அழைக்கவில்லை. அவருடைய மற்ற எண்களும் வேலை செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ள வழியே இல்லை. சிறிது நேரம் கழித்து அவருடைய நண்பர்களின் தொடர்பு கிடைத்தது.
“கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது மெய்த்தி வன்முறைக் கும்பல் எங்களைத் தாக்கியது, நாங்கள் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
தங்கூலாலின் நண்பர்கள் அவரை உடனே கவனிக்கவில்லை. முதலில் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று, பிறகுதான் மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றுள்ளார்கள்.
”காயமுற்ற சட்டமன்ற உறுப்பினரை அவசர வானூர்தியில் தில்லி கொண்டுசெல்ல இருப்பதாகச் சொன்னார்கள். அவரோடு சேர்த்து என் கணவரையும் ஏற்றிச் செல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதே நாளில் சட்டமன்ற உறுப்பினரை தில்லிக்கு வான்வழி அவசர ஊர்தியில் கொண்டுசென்று விட்டனர். அதேபோது என் கணவரை இம்பால் (இ)ரிம்சு (வட்டார மருத்துவ ஆராய்ச்சிக் கழக) மருத்துவமனையில் வைத்திருந்தனர்.
“எங்களால் இம்பால் சென்று என் கணவரின் உடலைப் பெற்றுக் கொள்ளக் கூட முடியாது. இம்பால் செல்வது எங்கள் உயிருக்கும் ஆபத்தாகி விடும். கணவரின் உடல் இருக்கும் நிலை கூட எனக்குத் தெரியவில்லை.
தங்கூலாலின் உடலைக் கூட இது வரை நான் பார்க்கவில்லை. இந்தப் படங்களைப் பார்க்கப் பொறுக்கவில்லை. அவரது முகம் அறவே சிதைக்கப்பட்டுள்ளது. வயிற்றில் கத்திக்குத்து பட்டிருக்கிறார்.
சூரசந்துபூர் வீட்டில் கைக்குழந்தை உள்ளிட்ட என் இரு குழந்தைகளோடு இருக்கிறேன். வாசல் திறக்கும் போதெல்லாம் அப்பா வந்து விட்டாரா? என்று ஓடிச் சென்று பார்க்கிறான் என் மகன். அவர் இனி வரவே மாட்டார் என்பதை நம்புவது எனக்கே கடினமாகத்தான் உள்ளது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 265
Leave a Reply