(தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES)

கதை (11)

நாட்டைக் காத்தேன்! கட்டிய மனைவியைக் காக்க முடியாதவன் ஆனேன்! இந்த என் சொற்களை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இந்திய இராணுவத்தில் அசாம் படைப் பிரிவில் சுபேதாராகப் பணியாற்றினேன். கார்கில் போரில் நாட்டுக்காகப் போர் புரிந்தேன். இலங்கை சென்ற இந்திய அமைதிப் படையிலும் இடம் பெற்றேன்.

மே 4ஆம் நாள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுப் பாலியலாக மானபங்கம் செய்யப்பட்ட இரு பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. என் மனைவியையும் மற்றவர்களையும் அந்த வெறியர்கள் காவல்துறை வண்டியிலிருந்துதான் பறித்து இழுத்துச் சென்றார்கள். காவல் துறையினர் எவ்வகையிலும் அதைத் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் எனபதே உண்மை.

அந்தக் கொடுநிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து எங்களால் இன்னும் மீளமுடியவில்லை. என் மனைவி தன்னைத் தாக்கியவர்களின் பக்கத்திலேயே வாழ முடியாமல் தவிக்கிறாள். நடுத்தெருவில் தனக்கு நேரிட்ட மானக் கேட்டை இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்ற எண்ணமே அவளை வதைக்கிறது. இரவில் அடிக்கடிக் கொடுங்கனவு கண்டு விழித்து அலறுகிறாள். சில நேரம் தோலைக் கிழித்துக் கொள்கிறாள்.

வீடுகளை எரித்தவர்களும் பெண்களை மானபங்கப்படுத்தியவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக வேண்டும்.

இங்கே பெரும்பான்மைச் சமுதாயம் எங்களைப் போன்ற சிறுபான்மைச் சமுதாயங்களை எப்போதுமே ஒடுக்கித்தான் வைத்துள்ளது. அவர்களோடு எங்களால் இனியும் சேர்ந்து வாழ முடியாது. அரசு இப்போது நிலையான தீர்வு காண வேண்டும்.

பின்கதை: மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் இந்தக் கொடுநிகழ்வு நடைபெற்ற இடம் நோங்குபோக்கு செக்குமாய் காவல் நிலையத்திலிருந்து ஒரே ஒரு அயிரைப் பேரடி(கிலோ மீட்டர்) தொலைவில் உள்ளது. இந்தக் காவல் நிலையம்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம் என்று இந்திய அரசின் விருது பெற்றதாகும்.

அந்த மே 4 காணொளி பரவிய பிறகுதான் பல பாலியல் வன்கொடுமை நேர்வுகள் வெளியே தெரிய வந்துள்ளன. இந்தப் போரில் எப்படிப் பாலியல் வன்தாக்குதல் ஒரு கருவியாக ஆளப்படுகிறது என்பதை உலகம் பார்த்து வருகிறது. அதே போது இவை போன்ற இன்னும் பல நேர்வுகள் வெளிவராமல் உள்ளன என்பதை மறக்க வேண்டாம் என்று மூத்த குக்கி இனத் தலைவர் ஒருவர் சொல்கின்றார்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 266