(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக!

2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண் மகாலட்சுமி. அவர்களைப் பற்றி விசாரித்ததில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்: பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்த பறையர் சாதி மாரிமுத்துவும், கள்ளர் சாதி மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள்.

மகாலட்சுமிக்கு 18 வயது நிறைவடையாத நிலையில் அவர்கள் உடனடியாக மணம் புரிந்து கொள்ளச் சட்டம் தடையாக இருந்துள்ளது. மகாலட்சுமி ‘மைனர்’ என்பதைச் சாக்கிட்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மாரிமுத்து-மகாலட்சுமி காதல் நிறைவேற விடாமல் தடுத்து வந்துள்ளனர். ஆனால் உண்மையான காரணம் அவர்களின் சாதிவெறிதானே தவிர அவரது வயதல்ல என்பதற்கு அதே மகாலட்சுமியை இப்போதே தங்கள் சாதிக்குள் கட்டிக்கொடுக்க அவர்கள் செய்துள்ள முயற்சியே சான்றாக உள்ளது.

கடந்த காலத்தில் மகாலட்சுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாடுகளின் பேரில் மாரிமுத்து இரண்டு முறை சிறைப்படுத்தப்பட்டுள்ளார். மகாலட்சுமியின் குறைவயதினால் ஏற்படும் சட்டச் சிக்கலைப் புரிந்து கொண்ட மாரிமுத்துவும் மகாலட்சுமியும் திருமணத்தைத் தள்ளிப் போட தங்களுக்குள் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. 18 வயது நிறைவடைந்தவுடன் மாரிமுத்துவைத்தான் மணம்புரிவேன் என்று மகாலட்சுமி உறுதியாக இருந்துள்ளார். இந்த முடிவை மகாலட்சுமி தன் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் காவல் துறையிடமும் நீதித் துறையிடமும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகலட்சுமியின் பெற்றோர் அவரை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், இதற்குப் பெரியகுளம் காவல்துறையும் உடந்தை எனத் தெரிகிறது. அண்மையில் அண்ணல் அம்பேத்துகர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தணிந்த(தலித்து) மக்களைத் தாக்கியும், முருகன் மார்பில் பச்சை குத்தபட்டிருந்த அம்பேத்துகரை உதைத்தும் தம் சாதிவெறியைக் காட்டிக் கொண்ட பெரியகுளம் காவல் துறையினர் அதே சாதி வெறியுடன் மகாலட்சுமியின் மனத்தைக் கரைக்கவும் மாரிமுத்துவை மிரட்டிப் பணிய வைக்கவுமே முயன்றுள்ளார்கள்.

மகாலட்சுமி மாரிமுத்து இருவரையுமே கழுத்தறுத்துப் போட்டு விடுவோம் என்று மகாலட்சுமியின் தந்தை சம்பத்தும், அக்காள் கணவர் பாண்டியும் வெளிப்படையாக மிரட்டியுள்ளார்கள்.

நேற்று முன்தினம் கூட மகாலட்சுமி தன்னைப் பெற்றோர் அடித்துத் துன்புறுத்துவதாகவும், தனக்கு இன்னும் சில மாதங்களில் 18 வயது நிறைவடைந்து விடும் என்றும், அதுவரை தன்னைக் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறும் பெரியகுளம் காவல் நிலையக் காவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாரிமுத்துவும் மகாலட்சுமியும் சடலமாகத் தொங்கியதன் பின்னணி இதுதான். ஏறி நிற்க எவ்வித ஏந்தும் இல்லாத காட்டுப் பகுதியில் உயரமான மாமரக் கிளையிலிருந்து இருவரின் சடலங்களும் தரைதட்டியபடி தொங்கிக்கொண்டு இருந்தன. செய்தியறிந்து ஓடிவந்து பார்த்த ஊர்மக்கள் எவரும் இதைத் தற்கொலை என்று நம்பவிலை. ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்து) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார். மாரிமுத்துவும் மகாலட்சுமியும் பிணமாகத் தொங்கிய காட்சியை மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து விடாமல் தடுத்து, மக்களை இழிசொற்களால் வசைபாடியும் மிரட்டியும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் காவல்துறையிடம் அளித்துள்ள முறைப்பாட்டில், பறையர் சாதியைச் சேர்ந்த தன் மகன் மாரிமுத்து கள்ளர் சாதியைச் சேர்ந்த மகாலட்சுமியைக் காதலித்ததால், மகாலட்சுமியின் குடும்பத்தார் பல முறை சண்டையிட்டு சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிபிட்டுள்ளார். மகாலட்சுமியின் தந்தை சம்பத்தையும் மகாலட்சுமியின் அக்காள் கணவர் பாண்டியையும் குறிப்பிட்டுப் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும் பெரியகுளம் காவல்துறையினர் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் ‘சந்தேக மரணம்’ என்றுதான் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சடலங்கள் காணப்பட்ட இடத்தில் சட்டப்படியான மரண விசாரணை (INQUEST) கூட செய்யாமல் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் எடுத்துச் சென்று க.விலக்கு மருத்துவமனையில் சடலக் கூறாய்வு செய்வித்துள்ளனர். அதற்குப் பின்னரும் கூட மகாலட்சுமியின் உடலைப் பெற அவர் குடும்பத்தினர் வரவில்லை எனத் தெரிகிறது. அந்நிலையிலும் காவல் துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை அவசர அவசரமாக அனுப்பி எரிக்கச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

மாரிமுத்துவின் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் மகாலட்சுமியின் பெற்றோர்தாம் மாரிமுத்துவையும் மகாலட்சுமியையும் கொலைசெய்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ப.சா.(எசுசி) ப.கு.(எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை, மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து, மாரிமுத்துவின் பெற்றோரும் முற்போக்கு இயக்கங்களும் போராடி வருகின்றன.

மாரிமுத்து-மகாலட்சுமி இருவரையும் மகாலட்சுமியின் தந்தை, தாய்மாமன் உள்ளிட்டவர்கள் சதி செய்து கூலிக் கொலையாட்களைக் கொண்டு கொலை செய்து விட்டதாகவும், கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சியும் தேனி மாவட்டக் காவல் துறையினரும் முயல்வதாகவும் மக்கள் நம்புவதில் நியாயம் இருப்பதாகக் கருதுகிறேன்.

இந்த வழக்கில் உண்மையைக் கண்டறியவும் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றவும் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கும் படியும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். பெரியகுளத்தில் நீதிக்கான போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் முற்போக்கு இயக்கங்களுடனும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தோழமை கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 273