தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (1) – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
“பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (2)
இந்துக் கூட்டுக் குடும்பத்துக்கு சலுகை தரும் சட்டங்கள்
இந்தியக் குமுகம் என்பது சாறத்தில் இந்துக் குமுகமாக உள்ளது. இந்திய நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மேலைநாட்டுச் சட்டமுறையும் மனுநீதிச் சட்டமுறையும் கலந்துள்ளன. இதற்குச் சான்றாக சொத்துடைமை பற்றிய சட்டங்களைக் குறிப்பிடலாம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையே சாதி காக்கும் சட்டம் என்று சொல்லி அதனை எரிக்கும் போராட்டத்தை 1957ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிக் கடந்த காலத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.
‘அவிபக்த’ என்ற சொல் இந்திய உரிமையியல் சட்ட நடைமுறையில் அடிக்கடி வரக்கூடிய ஒன்று. இந்து அவிபக்தக் குடும்பம் என்றால் பாகப் பிரிவினை செய்யப்படாத இந்து கூட்டுக் குடும்பம் என்று பொருள். UNDIVIDED HINDU FAMILY (UHF) என்பது பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே சொத்துடைமை பற்றிய பல சட்டங்களிலும் ஒரு பொருளியல் அலகாக அறிந்தேற்கப்படுகிறது.
சங்கங்கள் பதிவுச் சட்டம் – 1860, இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் – 1932, வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மைச் சட்டம் – 2005, நிறுவனங்கள் சட்டம் – 2013 இவ்வாறான பல சட்டங்களிலும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குத் தனியிடம் தரப்படுகிறது.
பொருளியல் ஆக்கமும் மீளாக்கமும்தான் (உற்பத்தியும் மறுவுற்பத்தியும்) குமுக வளர்சசிக்கு அடிப்படை. ஆக்கம், பொருளாக்கம் என்பது பண்டங்களை மட்டும் குறிப்பதன்று. அது மாந்தர்களையும் குறிப்பதாகும். பொருளியல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குடும்ப அமைப்பிலும் மணமுறையிலும் மாற்றங்களுக்கு அடிப்படையாகின்றன. பிரெடெரிக்கு எங்கெல்சின் “குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம், இராகுல் சாங்குருத்யாயனின் “வால்கா முதல் கங்கை வரை” ஆகிய நூல்களிலிருந்து இதனை அறியலாம்.
சரக்காக்கம் ஆட்சி செலுத்தும் குமுகத்தில் பொதுவாகச் சொன்னால் குழுமம் (சமூகம்) என்பது முழுக்க முழுக்க பொருளாக்கத்துக்கான தளமாகவும், இல்லம் அல்லது குடும்பம் என்பது நுகர்வுக்கான தளமாகவும் கருதப்படுகின்றன. இந்தியப் பொருளியலில் பெருங்குழுமங்களின் ஆளுமை வளர்ந்துள்ளது. இந்தப் பெருங்குழுமங்கள் பலவும் குடும்பத்தை மையமாகக் கொண்ட தொழில்வணிக இல்லங்களாகவும் உள்ளளன. பிருலா, அம்பானி, அதானி போன்றவை ஒரேநேரத்தில் குடும்பப் பெயர்களாகவும் பெருங்குழுமப் பெயர்களாகவும் உள்ளன. குழுமத்துக்கும் இல்லத்துக்குமான தொடர்பு தனி ஆய்வுக்குரியது.
முற்றுரிமைக் குழுமங்கள் (ஏகபோகங்கள்) முதல் திரட்டும் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. இந்தத் தொழில்வணிகக் குடும்பங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் ஆளுமை கொண்டுள்ளன. குடியேற்றக்(காலனியாதிக்கக்) காலத்திலிருந்தே இந்தியாவில் குழுமம் குடும்பத்துடன் பிணைந்து காணப்படுகிறது. அது தனக்கேயுரிய இரட்டைத் தன்மை கொண்டுள்ளது.
இந்தியாவில் குடும்பத்திற்குச் சொந்தமான வணிகக் குழுக்கள் கூட்டுப் பங்குக் குழுமங்களாகவும், (பொதுத் துறையிலும் தனியார் துறையிலும்) பங்காளர் நிறுவனங்களாகவும், அறக் கட்டளைகளாகவும், வரையறுக்கப்பட்ட கடப்பாடுடைய ஏராளமான கூட்டாண்மை நிறுவன அமைப்புகளாகவும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறையே நிறுவனச் சட்டம், கூட்டாண்மைச் சட்டம், சங்கங்கள் பதிவுச் சட்டம், வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மைச் சட்டம் ஆகிய வெவ்வேறு சட்டங்களின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை ஆகும். இத்தகைய வெவ்வேறு விதமான பெருங்குழுமங்களை ஒழுங்குபடுத்தப் பல்வேறு சட்டங்கள் இருந்த போதிலும், இந்தக் குழுமங்கள் ஒன்றிணைந்த இயக்குநரகமும் பொதுவான பங்காளர்களும் கொண்டு இந்திய வணிகக் குழுக்களின் சமூக நிறுவனமாக அமைந்துள்ளன என்கிறார் தாசு குபுதா (2013),
1951ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இருபத்திரண்டு வணிக நிறுவனங்கள் இந்த பின்னிப்பிணைந்த அமைப்புகளின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த மூலமுதல் உருவாக்கத்தில் 25 விழுக்காட்டை நேரடியாகக் கட்டுப்படுத்தின. 1990களில், இஃது இந்தியாவின் மொத்த மூலமுதல் உருவாக்கத்தில் 28 விழுக்காடாக இருந்தது, இன்றைய அளவில் குறைந்தது 40 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு விழுக்காட்டிற்கும் குறைந்த அளவிலான உண்மை முதலீடுகளைப் பயன்படுத்தித் தொழில்வணிகக் குழுக்கள் இந்தளவுக்க்கு ஆளுமை பெறுவதற்கு இந்துக் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு பெரிதும் பயன்பட்டுள்ளது.
1965ஆம் ஆண்டில் நீதியர் கே.சி. தாசுகுப்தா தலைமையில் அமைந்த ஏகபோகங்களுக்கான விசாரணை ஆணையம் பெருங்குழுமங்களுக்கு இடையிலான முதலீடுகள் கொண்டும் ஒன்றிணைந்த இயக்குநரகம் கொண்டும் இந்தியாவில் ஏகபோக அதிகாரம் படைத்துள்ள குழுமமே ‘பெருங்குழுமம்’(கார்ப்பரேட்டு) என்று இனங்காட்டிற்று
இந்திய அரசின் முதல் இரு ஐந்தாண்டுத் திட்டங்களால் பயனடைந்தோர் யார் என்பதைக் கண்டறிய 1960ஆம் ஆண்டு மகலனோபிஸ் குழு அமைக்கப்பட்டது.
[1968ஆம் ஆண்டு திருவரங்கத்தில் நடைபெற்ற மாணவர் காங்கிரசு சோசலிசப் பயிற்சி முகாமில் ‘இளந்துருக்கர்’ சந்திரசேகர் இந்த மகலநோபிசு குழு அறிக்கையை எடுத்துக்காட்டி இந்தியப் பெருமுதலாளர்கள் கொழுத்து வளர்ந்திருப்பது பற்றி விரிவாகப் பேசினார். நான் அவரிடம் நிறையக் கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, அவர் கொண்டுவந்திருந்த அறிக்கைச் சுருக்கத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். அதிலிருந்து தெரிந்து கொண்டதை வைத்தும் மேலும் தகவல்கள் திரட்டியும் “பத்து அம்சத் திட்டம்” என்ற குறுநூல் அச்சிட்டு வெளியிட்டேன். நான் எழுதி அச்சேறிய முதல் நூல் அதுதான்.]
இந்தியாவில் குறுகிய காலம் நடப்பிலிருந்த ஒரு சட்டம் “ஏகபோகங்கள், கட்டுப்படுத்தும் வணிக நடைமுறைகள் சட்டம், 1969” என்பதாகும். இந்திரா காந்தியின் சோசலிச நடிப்புக்கு உதவியதற்கு மேல் இந்தச் சட்டம் எதையும் சாதிக்கவில்லை. புதுத் தாரளியம் ஆளத் தொடங்கிய பிறகு 1991இல் இந்தச் சட்டம் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டது.
ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் ஏகபோகங்களைக் கண்டறிவதற்கு ஒரே மேலாண்மை, ‘ஒன்றிணைந்த குழுமப் பொறுப்பு ஆகியவற்றை அளவுகோலாக்கியது. ஒரே மேலாண்மைக்கும் ஒன்றிணைந்த குழுமப் பொறுப்புக்கும் இந்துக் கூட்டுக் குடும்பம் எளிதான வழி ஆயிற்று.
இந்தியாவில் முற்றுரிமை மூலமுதல் (ஏகபோக மூலதனம்) என்பது ஒருசில குடும்பங்களுக்குச் சொந்தமான தொழில்வணிகக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் குடும்பம் ஒவ்வொன்றும் ஓர் இந்துக் கூட்டுக் குடும்பமாகவே உள்ளது. மூலமுதல் திரட்டலிலும், ஒருங்கிணைந்த இயக்குநரகத்தின் கீழ் முற்றுரிமையும் கட்டுப்பாடும் செலுத்துவதிலும் குழுமத்தின் குடும்ப அடிப்படை பெரிதும் பயன்படுகிறது.
முகன்மையான செய்தி என்னவென்றால், இந்த உரிமையும் கட்டுப்பாடும் வரி ஏய்ப்புக்கு உதவுகின்றன. பெருங்குழுமச் சட்டம், வரிச் சட்டங்கள் எனப் பல சட்டங்கள் மூலம் ‘தொழில்வணிக இல்லம்’ என்ற அமைப்பு சட்டமுறைப்படி அனுமதிக்கப்பட்டு, பெருங்குழும நிருவாகத்தில் கணக்கில் கொள்ளப்பட்ட போதும், ‘குடும்பம்’ என்ற நிறுவனம் ‘தனியாள் சட்ட நெறிகளின்’ ஆளுகையில்தான் வைக்கப்பட்டுள்ளது என்கிறார் தாசு குப்தா. இந்தத் தனியாள் சட்டம் (PERSONAL LAW) சட்டப் படியான இந்துகளுக்கு மட்டுமே உரியது. அரசமைப்புச் சட்டம் யாரையெல்ல்லாம் இந்துக்கள் என்று இனங்காண்கிறதோ அவர்களுக்கு மட்டுமே உரியது.
தனியாட்கள், பெருங்குழுமங்கள் போலவே, இந்துத் தனியாள் சட்டத்தின் அடிப்படையிலான இந்துக் கூட்டுக் குடும்பமும் (HUF) சட்டமுறைப்படி வரி செலுத்தும் நிறுவனமாக அறிந்தேற்கப்படுகிறது. செல்வ வரி, சொத்து வரி, வருமான வரி ஏய்ப்புக்கு இது வாய்ப்பாகிறது.
குழுமங்களும் குடும்பங்களும் முறையான சட்டக் கட்டமைப்புகள் மூலம் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது சட்ட ஏய்ப்புக்கும வழிதிறக்கிறது. பெருங்குழும ஆளுகைக் கட்டமைப்புகளையும், குடும்பச் சட்டங்களையும், வரிச் சட்டநெறிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் இந்துக் கூட்டுக் குடும்ப (HUF – Hindu Undivided Family) வகையினத்திற்குச் சட்ட முத்திரை குத்தப்பட்டு விட்டது. இவ்வாறு வணிகக் குழுக்களின் நிறுவனக் கட்டமைப்பின் மீதான குடும்பத்தின் கட்டுப்பாடும், இந்தக் கட்டமைப்புகள் மூலம் உருவாக்கப்படும் செல்வத்தின் மீதான உரிமையும் சட்டமுறைப்படி பேணிக் காக்கப்பட்டன என்கிறார் தாசுகுப்தா.
இந்துத் தனியாள் சட்டப்படியான குடும்பம் என்ற ஏற்பாட்டைப் பொருளியல் சட்டங்களான நிறுவனச் சட்டத்திலும் பல்வேறு வகையான வரிவிதிப்புச் சட்டங்களிலும் ஒரு காரணியாகக் கணக்கில் கொண்டதன் மூலம் இந்தியச் சட்ட அமைப்பு இந்து மதத்துக்குத் தனிச் சலுகை வழங்குகிறது. இந்தச் சலுகை இந்து அல்லாதவர்களுக்குக் கிடையாது. இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குள்ள சீராட்டு இசுலாமிய அல்லது கிறித்துவக் கூட்டுக் குடும்பத்துக்குக் கிடையாது.
ஆர்எசுஎசு – பாசக கோருகின்ற பொதுக் குடியியல் சட்டம் (அல்லது ஒரேசீர் குடியியல் சட்டம்) இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்குள்ள சலுகைகளை நீக்குமா? அல்லது இந்தச் சலுகைகளை இந்து அல்லாத குடும்பங்களுக்கும் வழங்குமா?
ஆர்எசுஎசு – பாசக இப்போதுள்ள குடியியல் சட்டங்களைத்தான் அனைவருக்கும் பொதுவாக்க விரும்புகிறதா? இந்தச் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவாக்கத்தக்க சட்டங்கள்தாமா? அல்லது இந்துச் சட்டங்களை எல்லார் மீதும் திணிக்க முற்படுகிறதா? இப்போதுள்ள சட்டங்கள் எங்கிருந்து வந்தன?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும். தொடர்வோம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 285
Leave a Reply