(தோழர் தியாகு எழுதுகிறார் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

“பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (1)

இசுலாமியர்களுக்குத் தனிச் சட்டம் உள்ளதா?

பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) அல்லது ஒரே சீரான சிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE) என்ற பேச்சை ஆர்எசுஎசு – பாசக கூட்டம் பெரிதாகக் கிளப்பி விட்டுள்ளது.

சிவில் என்பதைக் குடியியல் என்றோ உரிமையியல் என்றோ தமிழாக்கம் செய்யலாம். சட்டத் துறையில் குற்றவியல் என்ற வகைக்கு மாறாக உரிமையியல் ஆளப்படுகிறது. குற்றவியல் நீதிமன்றங்களுக்கு மாறாக உரிமையியல் நீதிமன்றங்கள் உள்ளன. வழக்கறிஞர்களில் குற்றவியல் வழக்கறிஞர்களும் உரிமையியல் வழக்கறிஞர்களும் உண்டு.

ஆனால் CIVIL RIGHTS என்பதைக் குடியியல் உரிமைகள் என்கிறோம். உரிமையியல் உரிமைகள் என்பது பொருத்தமாக இருக்காது. CIVIL LIBERTIES = குடியியல் தன்னுரிமைகள் (சுதந்திரங்கள்) CIVIL AND POLITICAL RIGHTS (குடியியல், அரசியல் உரிமைகள்) என்ற தொடர் ஐநா ஒப்பந்தங்களில் இடம்பெறுகிறது (e.g., INTERNATIOANL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS, 1966).

CIVIL SOCIETY என்ற தொடரை எகல் பயன்படுத்துகிறார். ஒவ்வோர் உறுப்பினரும் சட்ட நோக்கில் உரிமை படைத்த மாந்தராக இருக்கும் குடியியல் குமுகத்தை இது குறிக்கும். இவ்வாறான குமுகத்தில் அனைத்து உறுப்பினர்களும் சட்ட உரிமை படைத்த குடிமக்கள் ஆவர். எனவே நாம் CIVIL CODE என்பதைக் குடியியல் சட்டநெறி என்றே வைத்துக் கொள்வோம்.

பொதுக் குடியியல் சட்டம், ஒரேசீரான குடியியல் சட்டம் (COMMON CIVIL CODE, UNIFORM CIVIL CODE) ஆகிய இரு தொடர்களும் ஒரே பொருளில்தான் ஆளப்படுவதாக நினைக்கிறேன்.

சரி, பொது சிவில் சட்டம் என்று ஆர்எசுஎசு கிளப்பி விடுகிறதே, அதற்கான வரைவுச் சட்டம் என்று ஏதாவது வெளியிட்டுள்ளதா? இப்போது மட்டுமல்ல, இதுவரை ஒருபோதும் வெளியிட்டதில்லை. ஆர்எசுஎசு – பாசக பெருங்குறிக்கோள்களில் ஒன்று ‘பொது சிவில் சட்டம்’ என்னும் போது அது எப்படி இருக்கும்? அதன் விதிகளும் கூறுகளும் என்னவாக இருக்கும்? இதை ஆர்எசுஎசு – பாசக தெளிவாக்கியிருக்க வேண்டுமல்லவா? எங்காவது அப்படி ஒரு வரைவு இருக்கக் கூடும் என்று இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.

அண்மையில் “பொது சிவில் சட்டம் தேவையா?” என்ற தலைப்பிலான ஒரு கருத்தரங்கில் உரையாற்ற நானும் அன்பர் அரி பரந்தாமன் அவர்களும் சென்றிருந்த போது நான் அவரிடம் இந்த ஐயத்தைச் சொன்னேன். அவர் என் ஐயத்தை உறுதி செய்தார்: ஆம், வரைவுச் சட்டம் எல்லாம் ஒன்றுமில்லை. எந்தக் காலத்திலும் அவர்கள் அப்படி எதையும் வெளியிட்டதில்லை.

அப்படியானால் ‘பொது சிவில் சட்டம்’ என்றால் என்ன? என்று நேர்நிறையாக விளக்காமலே, உடைத்துப் பேசாமலே இந்தச் சொற்றொடரை மட்டும் உச்சரித்துக் குழப்பம் விளைவிக்கும் ஆர்எசுஎசு – பாசகவின் உள்நோக்கம் என்ன?

மதத்துக்கு ஒரு சட்டம் இருக்கலாமா? இந்துக்களுக்கு ஒரு சட்டம், முசுலிம்களுக்கு வேறு சட்டமா? ஒரே நாட்டில் இரு சட்டங்களா? – இவையெல்லாம் இந்துத்துவக் கும்பல் எழுப்பும் வினாக்கள். இந்த வினாக்களைக் கொண்டு இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு எதிராக இந்துக்களை நிறுத்தி, இசுலாமியர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை இந்துக்களுக்குப் பகைவர்களாகக் காட்டி பாசகவை இந்துக்களின் காவலனாகக் காட்டிக் கொள்வது அவர்களின் நோக்கம்.

இப்போது இந்துக்களுக்கு ஒரு சட்டம், முசுலிம்களுக்கு ஒரு சட்டம் என்பது உண்மைதானா? என்று கேட்டுப் பாருங்கள். நாட்டின் அடிப்படைச் சட்டமாகிய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். அது உலகியச் சட்டம், சமயம் சாரா சட்டம். இந்த சமயச் சார்பற்ற சட்டம் யாருக்காவது ஆகாது என்றால், அது இந்துதத்துவக் கும்பலுக்குத்தான் ஆகாது. இந்து தேசம் அமைக்க விரும்புகிற கும்பல், அதற்காக வரிந்து கட்டிப் பாடுபடும் கும்பல் இசுலாமியர்கள் மீது வெறுப்புப் பரப்புவதற்காகவே “உனக்கொரு சட்டம் எனக்கொரு சட்டமா?” என்று கூச்சலிடுகிறது.

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்ற நடைமுறைச் சட்டம், இந்தியச் சான்றியச் சட்டம், சிறைச் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்களும் அனைவருக்கும் ஒன்றுதான். இசுலாமியர்கள் யாரும் தமக்குத் தனியாகக் குற்றவியல் சட்டம் கோரவில்லை. நாங்கள் குற்றம் செய்தால் ‘சரியத்’ சட்டங்களின் படி தண்டித்துக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. குற்றவியல் சட்டம் சரி, உரிமையியல் சட்டமும் ஒன்றுதானா? ஆமாம் ஒன்றுதான்!

CRIMINAL PROCEDURE CODE போலவே CIVIL PROCEDURE CODE அனைவருக்கும் பொதுவானதே. அப்படியானால் சிக்கல் எங்கே வருகிறது? குடியியல் சட்டத்தில் ஒரு சிறு பகுதி உள்ளது. அது ஆள்வகைச் சட்டம் அல்லது தனியாள் சட்டம் (PERSONAL LAW) எனப்படுகிறது. இது ஒருசில கூறுகளில் சமயத்துக்கு சமயம் மட்டுமன்று, சாதிக்கு சாதியும் மாறுபடுகிறது. தேசத்துக்கு தேசம், வட்டாரத்துக்கு வட்டாரமும் கூட மாறுபடுகிறது.

இசுலாமிய நாடுகள் என்று தம்மை அறிவித்துக் கொண்டு இசுலாமியச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் கூட குற்றவியல், உரிமையியல் சட்டங்கள் ஒன்றாகவோ ஒரேசீராகவோ இல்லை. அவை நாட்டுக்கு நாடு மட்டுமல்ல, காலத்துக்குக் காலமும் மாறுபடுகின்றன.

இந்தியாவில் அனைவருக்கும் ஒரு தனியாள் சட்டம், இசுலாமியர்களுக்கு மட்டும் தனியாக ஒரு தனியாள் சட்டம் இருப்பது போன்ற பொய்த் திரை விரித்துத் தமது வஞ்சக நோக்கத்தை மறைத்துக் கொள்ள ஆர்.எசு.எசு – பாசக முயல்கின்றன.

உண்மை என்ன? தொடர்ந்து பார்ப்போம்!
(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 284