தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்
(தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன் – தொடர்ச்சி)
கீற்று நேர்காணல் (1.2)
தோழர் தியாகு எழுதுகிறார்
பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்
குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விசயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்சானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் இலெனின், மார்க்குசு போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. [அமீர்சான் வீட்டில்தான் காரல் மார்க்குசு படம் பார்த்தேன். “காட்டுக்கு ஒரு சிங்கம், உலகத்துக்கு ஒரு காரல் மார்க்குசு” என்று சான் அவரை எனக்கு அறிமுகம் செய்தார்.]
அப்போதுதான் நமக்கான அரசியல் எது என்கிற கேள்வி ஏற்பட்டது. அமீர்சான் கம்யூனிசம்தான் சரி என்றார். முழுவதும் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுவது அவர்கள் மட்டும்தான் என்பார். ஆனாலும் இ.பொ.க.(சி.பி.ஐ.) மீது அவருக்கு வெறுப்பு இருந்தது. காங்கிரசின் வால் போல் அவர்கள் செயல்படுவதாகக் குறை கூறுவார்.
ஆனால் நீங்கள் காங்கிரசில் இணைந்து நீங்கள் பணியாற்றினீர்கள் அல்லவா?
1967 தேர்தல் நெருங்கும் நேரம். அமீர்சான் பணிமாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டார். வேறு பல காங்கிரசு நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரசாரை விட, காங்கிரசைப் பெரியார் அதிகமாக ஆதரித்து பேசிக் கொண்டிருந்தார்.
என்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் முதலில் காங்கிரசை ஆதரித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினேன். தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களில் பேச அழைப்பு வந்தது. 67 தேர்தல் தோல்விக்குப் பிறகு தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பைக் காமராசர் ஆரம்பித்தார். தஞ்சை இராமமூர்த்தி தலைவராகவும், வாழப்பாடி ராமமூர்த்தி பொருளாளராகவும் இருந்தனர்.
அதன் முதல் மாநாட்டில் பேசுவதற்காகத்தான் நான் முதன்முதலாகச் சென்னை வந்தேன். பெருந்தலைவர் காமராசரோடு சம்பத்து, தமிழ்வாணன், கண்ணதாசன், செயகாந்தன், பாலதண்டாயுதம் போன்ற பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது எனக்கென்று தனியாக மொழிக் கொள்கை எதுவும் கிடையாது. ‘இந்தியாவிற்கு இந்தி, தமிழ்நாட்டிற்குத் தமிழ், உலகத்திற்கு ஆங்கிலம்’ என்கிற மும்மொழிக் கொள்கைதான் சரி என்று கருதினேன். அதைத் தாண்டி மொழிப்பற்று என்பது போலியானது’ என்கிற அமீர்சானின் கருத்தை நான் அந்த மாநாட்டில் பேசினேன்.
மொழியின் காரணமாகத் தேர்தலில் காங்கிரசு தோற்று விட்டதாக கருதப்பட்ட நேரமது. எங்களுக்கு மொழிப்பற்று இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில், ‘மொழி என்பது விழி அல்ல, காலில் கிடக்கும் செருப்பு போன்றது. வீட்டிற்குப் போனதும் கழட்டி விடலாம். தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் மாட்டிக் கொள்ளலாம்’ என நான் பேச, மேடையில் இருந்த காமராசர் உட்பட அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்.
1965 மொழிப்போர் காரணமாகத்தான் காங்கிரசு தோற்றுவிட்டது என்று கருதி, நாங்களும் மொழிப் பக்கம்தான் எனக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு அது. மாநாட்டில் என் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் என்னுடைய பேச்சு இரசிக்கப்பட்டது. அதன்பிறகு எங்கு மாநாடு நடந்தாலும் காமராசர் முதலில் என்னைத்தான் பேசச் சொல்வார். அந்த அளவுக்கு அவர் என் பேச்சை விரும்பிக் கேட்கலானார்.
அதே போல்தான் மூப்பானாரும். என்னைப் பிரசங்கி என்றுதான் அழைப்பார். நான் அவரிடம் வேடிக்கையாகப் பல முறை கேட்டதுண்டு, ‘நாங்கதான் தலைவரா இருப்போம். நீங்க பிரசங்கியா இருங்கன்னு சொல்றீங்க, அப்படித்தானே?’. எனக்கு அப்போதே காங்கிரசு மீது விமர்சனம் இருந்தது. இது ஒரு பணக்காரக் கட்சி, பெயருக்குத்தான் காமராஜரைப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றியது. ஆனாலும் வாழப்பாடி இராமமூர்த்தி மீது பெரிய மரியாதை இருந்தது.
காங்கிரசில் அவர் ஒருவர்தான் இடதுசாரிச் சிந்தனையோடு செயல்படுபவர். 67 தேர்தலில் பெரியார் காமராசரைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். விருதுநகரில் காமராசர் தோற்ற போது காங்கிரசாரை விட அதிகம் அதிர்ச்சி அடைந்தது திராவிடர் கழகத்தினர்தான். தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பெரியாரைத் திருச்சியில் சந்தித்த அண்ணா, ‘இந்த ஆட்சி உங்களுக்கு சமர்ப்பணம்’ என்று சொன்னவுடன் ‘இப்போதுதான் திராவிட ஆட்சி மலர்ந்திருக்கிறது’ என்று அண்ணாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் பெரியார்.
பெரியாரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்து திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டவர்தான் வாழப்பாடி இராமமூர்த்தி. அப்போது மாணவர்கள் அதிகம் காங்கிரசில் இணைந்து கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக மேடைகளிலும் பேச வைக்கப்பட்டனர். தமிழ்வழிக் கல்வி குறித்து நான் அதிகம் மேடைகளில் பேசிய காலகட்டம் அது. என்னுடைய இந்தப் பேச்சுகளை காமராசர் விரும்பிக் கேட்பார்.
‘வெள்ளி நாக்கு’ (SILVER-TONGUED) சீனிவாச சாத்திரியின் ஊர் வலங்கைமான்தான். நானும் வலங்கைமானைச் சார்ந்தவன் என்பதால் காமராசர் என்னைச் சாத்திரி என்று அழைத்ததுண்டு. காமராசருக்குத் தமிழகத்தில் உள்ள சிற்றூர்கள் குறித்து அவ்வளவு விவரங்கள் தெரியும். எந்த வழியில் போனால் சீக்கிரம் போக முடியும், எந்தெந்த ஊரி்ல் எந்தப் பேருந்து நிற்கும், எங்குத் தொடர் வண்டி போகும் போன்ற அனைத்து விவரங்களும் அவருக்குத் தெரியும். அவருடன் கடைசியாக கொள்ளிடக் கரையில் உள்ள நாயகனைப் பிரியாள் என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
என்னுடன் கல்லூரி மாணவர் சம்பத்தும் வந்திருந்தார். அன்று காமராசர் வேறு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் முதலில் பேசிவிட்டுக் கிளம்புவதாகத் திட்டம். அவர் பேசி முடித்ததும் கூட்டத்தைப் பார்த்து, ‘எனக்குப் பிறகு கல்லூரி மாணவர்கள் பேசுவார்கள், அவர்கள் பேச்சைக் கேட்டபிறகு தான் நீங்கள் போக வேண்டும்’ என்று கூறிவிட்டு வண்டியை நோக்கிச் சென்றார். அவருக்குப் பின்னாலேயே மொத்தக் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.
காமராசருக்குக் கோபம் வந்து விட்டது. வேகமாகத் திரும்பி மேடையேறி ஒலிவாங்கியை வாங்கியதும் கூட்டம் திரும்பி வந்தது. ‘போகக் கூடாதுன்னேன், எல்லாரும் போயிட்டீங்கன்னேன், இப்ப நான் பேச்சை கேட்கப் போறேன்னேன், நீங்க யாரும் கேட்கக் கூடாதுன்னேன்’ என்றபடி மேடையில் அமர்ந்து விட்டார். கூட்டமும் மௌனமாக அமர்ந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும்போதே காமராசர் எழுந்து போனார். கூட்டம் கலையாமல் அப்படியே அமைதியாக கடைசிவரைக்கும் இருந்தது. அதுதான் நான் அவரை சந்தித்த கடைசிக் கூட்டம்.
நீங்கள் பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பியது எப்படி?
அப்போது காங்கிரசு கட்சிக்குள் பல அணிகளாக மோதல் உருவானது. நான், வாழப்பாடி இராமமூர்த்தி, பசுபதி போன்றோர் சோசலிசுட்டு அணி. இதேபோல் பல அணிகள் உருவானது. எனக்கு அப்போதே பொதுவுடைமைக் கட்சி நண்பர்களுடன் தொடர்பு இருந்தது. தஞ்சையில் ஒரு பகுதியில் குடிசைகள் தொடர்ச்சியாக எரிவது ஒரு சிக்கலாக இருந்தது. மதுரையில் இருந்து இலட்சுமிகாந்தன் என்பவர் அந்தப் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியினரால் மார்க்குசு, ஏங்கெல்சு, இலெனின், ஃகோசிமின் வாழ்க என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த இலட்சுமிகாந்தன் எங்கோ பிறந்த இலெனினுக்கு இங்கென்ன வேலை, குடிசைகளைக் கொளுத்துவது மா.பொ.க.(சி.பி.எம்மின்) வேலை என்று பேசினார்.
அந்தக் கூட்டத்தில் நான் கடைசியாகப் பேசினேன். ‘எங்கோ பிறந்த இலட்சுமிகாந்தன் இங்கு வந்து பேசுகிறார். இங்கு பிறந்த நேரு இசுபெயின் உள்விவகாரத்தில் தலையிடுகிறார் போன்ற பல செய்திகளைக் கூறி விட்டு இதுபோன்ற செய்திகளில் சர்வதேசப் பார்வை வேண்டும். இப்படிக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டு சோசலிசம் காண முடியாது. பொதுவுடைமையர் ஏழைகளின் குடிசைகளைக் கொளுத்துவதாக இலட்சுமிகாந்தன் பேசினார். பொதுவுடைமையர் கொளுத்துவார்கள், பங்களாக்களைக் கொளுத்துவார்கள், தானியப் போர்களைக் கொளுத்துவார்கள். ஒருபோதும் ஏழைகளின் குடிசைகளைக் கொளுத்த மாட்டார்கள்’ என்று பேசினேன்.
கூட்டத்தில் என்னுடைய பேச்சுக்கு நல்ல கரவொலி. கட்சிக் கூட்டத்தைப் பொதுவுடைமைக் கூட்டம் போல் நடத்துவதாக மூப்பனார் என்னிடம் குறிப்பிட்டார். மாணவர் காங்கிரசு சார்பில் மார்க்குசு பிறந்த நாள் கூட்டம் நடத்தினோம். இப்படி கட்சிக்குள் எனக்கு வேறு ஒரு முத்திரை சுலபத்தில் விழுந்தது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 295
Leave a Reply