தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு
(தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை – தொடர்ச்சி)
நாம் வந்த பாதை தவறு
அப்போதிருந்த மனநிலைப்படி ‘இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கருத்தே எனக்கு இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது.
உங்களுடன் கைதான மற்றத் தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்?
அப்போது நக்குசலைட்டு கைதிகள் பலருக்கு ‘இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்’ என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.
‘எழுபதுகளைப் புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்’ என்று சாரு மசூம்தார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அஃதாவது எண்பதுக்குள் புரட்சி வெற்றி பெற்று விடும் என்பதுதான் அதன் சாரம். அதை நாங்களும் நம்பினோம். 70ம் ஆண்டு இறுதியில் கைதாகி நான் சிறைக்கு வந்தேன். 71இல் புலவர் கலியபெருமாள் கைதாகிச் சிறைக்கு வந்தார். நீதிமன்றம் செல்வதைப் புறக்கணிப்பது, சிறையில் இருந்து தப்பிக்க முயல்வது போன்ற வேலைகளில் நாங்கள் ஈடுபடுவதை அவர் மிகவும் பாராட்டினார்.
அவர் சொல்வார், ‘இதுதான் சரி. ஏன்னா புரட்சி ரொம்ப சீக்கிரமா வந்துட்டிருக்கு. 80 எல்லாம் ஆகாது, 75ம் ஆண்டிற்குள் புரட்சி நடந்து முடிந்து விடும், அதான் சாரு சொல்லிட்டார்ல’ என்று சொல்வார்.
புலவரின் மனைவி அவரைச் சந்திக்க வருவார். அவர் சொல்வார், ‘நீங்க ஒரு நாலுபேர் இங்க, வள்ளுவன் இன்னும் நாலு பேர் வேலூர் சிறையிலே. இவ்வளவு பேருதான் சொல்லிட்டிருக்கீங்க. நாட்டுலே ஒரு புரட்சியும் காணோம்’ என்பார். புலவர் ‘அதெல்லாம் உனக்கு விளங்காது’ என்று சொல்லி விடுவார். அந்தளவுக்குப், புரட்சி மீதான தவறான நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
அந்த நேரத்தில்தான் இலெனினின் “புரட்சிகர வாய்ச்சொல்” என்ற புத்தகத்தைப் படித்தேன். அது என்னுள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற வெற்று நம்பிக்கைகளைத் தாக்கி எழுதப்பட்ட புத்தகம் அது. இரசியாவில் ஏற்பட்ட சனநாயகப் புரட்சிக்குப் பின், மக்கள் அமைதியை விரும்பினார்கள். ஆனால் கெரன்சுகி அரசு போரைத் தொடர்ந்து நடத்தியது. அதனாலேயே அது வீழ்ந்து நவம்பர் சோசலிசப் புரட்சி வென்றது. ‘உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்’ என்று இலெனின் விரும்பினார். அப்போது இரசியாவின் சில பகுதிகளைச் செருமனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதைப் போரின் மூலம் மீட்கும் வல்லமை இரசியாவிடம் இல்லை.
அந்த நேரத்தில் செருமனி இரசியாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. திராட்சுகிதான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர். அவரிடம் ‘போரின் மூலம் இரசியாவையே இழந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து போரை நடத்த வேண்டும்’ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கட்சிக்குள் மூன்று பிரிவுகள் உருவானது. இலெனினின் கருத்து கட்சிக்குள் சிறுபான்மையாகி விட்டது. சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு செருமனி என்ன மோசமான நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்றுக் கொண்டு போரை நிறுத்த வேண்டும் என்பதே இலெனினின் கருத்தாக இருந்தது.
‘நம்முடைய நாட்டின் சில பகுதிகளைச் செருமனி தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகிறது, எனவே தொடர்ந்து போரிடுவோம். தோற்றாலும் பரவாயில்லை, அது புரட்சிக்கு உதவும். மேலும் செருமனியில் பாட்டாளி வருக்கப் புரட்சி நடைபெறப் போகிறது. அந்தப் புரட்சி வெற்றி பெற்றால் செருமனி இரசியாவின் பகுதிகளை தன்னோடு இணைத்துக் கொள்ளாது. அதன் பிறகு நமக்கும் அவர்களுக்கும் பகை இருக்காது. அந்தப் புரட்சி வெற்றி பெறும் வரை நாம் தொடர்ந்து போரிடுவதுதான் சரி’ என்பது திராட்சுகியின் கருத்தாக இருந்தது.
மூன்றாவது தரப்பு, ‘இப்போது போரும் வேண்டா, சமாதானப் பேச்சுவார்த்தையும் வேண்டா, செருமனி புரட்சி விரைவில் வெற்றி பெறும், அதன்பின் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்து விடும்’ என்றது. ஆனால் இலெனின் இவை எல்லாவற்றையும் மறுத்தார். ‘போரினால் நிறைய இழந்து விட்டோம். எனவே எவ்வளவு அவமானம் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்’ என்றார். அதில் முக்கியமான கருத்தாக, ‘செருமானியப் புரட்சி எப்போது வெற்றி பெறும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்குப் பதிலாக அவரே, ‘செருமனியில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதிகளிலும் புரட்சி நடைபெறப் போகிறது, அது வெற்றிபெறப் போகிறது என்பதை நம்புவது வேறு. இந்தக் கோடைக் காலத்திற்குள் முடிந்து விடும், இந்தக் குளிர் காலத்திற்குள் நடந்து விடும் என்ற நம்புவது வேறு. இது வெறும் வாய்ச்சொல்’ என்று சொன்னார். அதன் பிறகு இலெனினுக்குக் கட்சிக்குள் ஆதரவு பெருகியது. அமைதி தான் சரி என்று பெரும்பாலானோர் ஒத்துக் கொண்டனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திராட்சுகி சென்றார். லெனினும், திராட்சுகியும் புரட்சியாளர்கள். மேடை நாகரிகமோ, உடை நாகரிகமோ, சரியான அலங்காரமோ அறியாதவர்கள். அதனால் அங்கிருந்து அவர் இலெனினுக்குத் தொலைவரி கொடுத்தார். ‘குறிப்பிட்ட உடையில் தான் வரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ என்று கேட்டிருந்தார். பதிலுக்கு இலெனின், ‘ஒருவேளை பெண்அங்கியில்(கவுனில்) வரச் சொன்னால் பெண்ணங்கி(கவுன்) அணிந்து கொண்டு போ. நமக்கு அமைதிதான் முக்கியம்’ என்று பதில் அனுப்பினார். நாட்டின் அமைதிக்காக அவமானகரமான அந்த ஒப்பந்தம் நிறைவேறியது.
‘புரட்சிக்கு நாள் குறிப்பது வெறும் வாய்ச்சொல்’ என்பதைப் படித்தவுடன் இந்தியாவில் புரட்சி 80க்குள் வரப்போகிறது என்ற வார்த்தைகளின் மீதே நம்பிக்கை போய்விட்டது. உருசியப் புரட்சியை மற்றத் தோழர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் ஆங்கிலத்தில் இருந்த புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தேன். புரட்சி குறித்த இலெனினின் கருத்துகள் எங்களுக்கு மிகப் புதியனவாக இருந்தன. அதைப் படிக்கப் படிக்க நம் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பெரிய தவறு நடந்து விட்டது புரிந்தது. ‘சீனத்தின் பாதை நமது பாதை’ என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது புரிந்தது.
இலெனின் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்துவார், ‘எவை புறநிலை உண்மைகளோ அவற்றிலிருந்துதான் முடிவுகளுக்குச் செல்ல வேண்டும். ஏற்கெனவே முடிவு செய்த கருத்தை வைத்துக் கொண்டு பேசக் கூடாது’ என்று. என்னுடன் இருக்கும் தோழர்கள் ஏற்கெனவே பல முடிவுகளை வைத்துக் கொண்டு நடக்கும் சம்பவங்களை அதில் பொருத்திப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். ‘இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீதே எனக்கு ஐயம் இருப்பதாக’ நான் கூறிய போது அவர்களுக்குக் கடுமையான கோபம் உண்டானது. எனவே நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தி விட்டுப் படிக்க ஆரம்பித்தேன்.
1973 அட்டோபர் 1 சீனப்புரட்சி நாளன்று ‘மா.இலெ.(எம்-எல்) கட்சிக்கு மறுப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில், கட்சியின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கி ஆராய வேண்டும் என்று விவாதித்திருந்தேன். ‘இப்போது மா.இல.(எம்-எல்) கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை ஆராய்கிற போது அத்திவாரம் இல்லாத கட்டடமாக அது எழுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பு எவ்வளவு அழகாக, ஈர்ப்புடையதாக, ஈகங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தாலும் அது உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று எழுதியிருந்தேன்.
தோழர்கள் கொதித்துப் போனார்கள். மீண்டும் நான் தெளிவாக ‘நீங்கள் கோபப்படுவதில் எந்த அருத்தமுமில்லை. இது சுக்குநூறாக உடையத்தான் போகிறது. ஓர் அமைப்பாகக் கூட இது நீடிக்காது. ஏனெனில் இதன் அடிப்படையே தவறு’ என்று கூறினேன். இதைக் கேட்டதும் அடுத்த சிற்றறையில்(செல்லில்) இருந்த தோழர் குருமூர்த்தி கதறி அழுதார். இன்னுமொரு தோழர், சுவரில் படிந்த இரத்தக் கறைகளை நினைவுபடுத்தி ‘போன வருடம் இதே இடத்தில்தானே போராட்டம் நடத்தி, இரத்தம் வருமளவுக்கு அடிபட்டுத் துன்பப்பட்டோம். எதற்காக இத்தனைத் துயரங்களையும் தாங்கினோமோ அதுவே தவறா?’ என்று திக்கித் திணறிப் பேசியவர் கலங்கி நின்று விட்டார். அவரால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு நான் அலெக்குசாண்டரைப் பற்றிக் கூறினேன்.
இலெனினின் தமையனார் அலெக்குசாண்டர்(Alexander) ஒரு குமுக உணர்வமைப்பர்(Narodnik). சார் மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார். இது இலெனினை மிகவும் பாதித்தது. இந்த நிகழ்ச்சி இலெனினின் வாழ்க்கை வரலாற்று நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இலெனின் வீட்டிற்கு வருகிறார். பக்கத்து வீட்டில் அவரிடம் ஒரு செய்தித்தாளைக் காண்பிக்கிறார்கள். அதில் ‘Alexander Hanged’ என்று இருக்கிறது. அடுத்த நொடி இலெனின் சொல்வார், ‘இதற்கான விலையை அவர்கள் செலுத்தியே ஆகவேண்டும்’ என்று. அலெக்குசாண்டர்தான் இலெனினுக்குப் புரட்சிப் பாதையைக் காண்பித்தவர். ஆனாலும் அண்ணனின் பாதையை இலெனின் மறுதலித்தார். விலை பெறுவதற்காகச் சார் மன்னரையோ, நீதிபதியையோ, அதிகாரிகளையோ தேடிச் சென்று கொலை செய்யவில்லை. மாறாக மன்னராட்சியை ஒழிப்பதற்காக இரசிய மக்களைத்தான் திரட்டினார். எது நடைமுறைக்குச் சரியான தத்துவமோ அதை எடுத்துக்கொண்டார்.
அதேபோல் மாவோவின் மேற்கோளையும் உதாரணமாகக் காட்டினேன். ‘தனிமனிதனா அமைப்பா என்று வரும் போது அமைப்பு தான் முக்கியம். அமைப்பா, அரசியலா என்று வரும்போது அரசியல்தான் சரி. கடந்த காலத்தில் தனிமனிதனா அமைப்பா என்ற கேள்வி வந்த போது அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் சிறையில் இருக்கிறோம். இப்போது அமைப்பா, அரசியலா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அமைப்பு என்பதே அரசியலுக்காகத்தான். அரசியல் தவறாகப் போன பிறகு அமைப்பைத் தூக்கிப் பிடிக்க முடியாது’ என்று சொன்னேன்.
‘சரியான ஒன்றுக்காகத் தூக்கில் தொங்கப் போகிறோம் என்ற நிறைவில் தூக்குக் கயிற்றின் அடியில் நிற்கும்போது தான் செய்தது தவறு என்று தெரிந்தால் எப்படித் தாங்கிக் கொள்வது’ என்று கேட்டார் தோழர். உண்மையில் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கணம் எனக்கும் சீரணிக்க முடியாததாகவே இருந்தது. ‘தூக்கில் போனாலும் பரவாயில்லை, இனி வரும் தலைமுறைக்கு நாம் வந்த பாதை தவறு என்பதை சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும்’ என்று கூறினேன்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 297
Leave a Reply