தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு
(தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்- தொடர்ச்சி)
கல்லூரியில் சாதி விளையாட்டு
இனிய அன்பர்களே!
தாழி (292) மடலில் நான் படித்த குடந்தை அரசினர் ஆடவர் கலை அறிவியல் கல்லூரியைப் பற்றி தேம்சு கரையில் கேம்பிரிட்சு போலக் காவிரிக் கரையில் எங்கள் கல்லூரி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.
இந்த மடலின் முடிவில் இப்படி எழுதினேன்: “எப்படி இருந்த குடந்தைக் கல்லூரி இப்போது இப்படி ஆகி விட்டதே! என்ற ஆதங்கத்தால்தான் இவ்வளவு கதையும் சொன்னேன். அன்று பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதவர் என்று பிரிந்து நின்ற கல்லூரியில் இப்போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் சாதியால் பிரிந்து நிற்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.”
அக்காலத்தில் கல்லூரி மாணவர்களிடையே கட்சி அரசியல், பார்ப்பனர்-பார்ப்பனரல்லதார் அரசியல் இருந்தனவே தவிர சாதி மத அரசியல் என்று எதுவும் கண்டதில்லை. குடந்தை என்பதால் பார்ப்பன மாணவர்கள் ஒப்பளவில் கூடுதலாக இருந்தனர். அக்காலத்தில் அவர்களிடையே இராசகோபாலாச்சாரியாரின் சுதந்திராக் கட்சிக்கு ஓரளவு ஆதரவு காணப்பட்டது. அவர்களிலும் பலர் காங்கிரசு ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களிடையே கூடக் கிட்டத்தட்ட இதே நிலைதான். எப்படியும் சாதி அரசியலோ மத அரசியலோ காணப்படவில்லை. ஆர்எசுஎசு சார்புடையவர் என்று மாணவர்களிடையிலோ ஆசிரியர்களிடையிலோ யாரையும் கண்டதில்லை. முசுலிம் மாணவர்களும் இருந்த போதிலும் அவர்கள் எந்த இசுலாமியக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. காங்கிரசுக்கோ திமுகவிற்கோ ஆதரவாக இருந்தார்கள். இடதுசாரி அரசியல் என்றால் அப்போதுதான் துளிர் விட்டுக் கொண்டிருந்தோம்.
அக்கால நிலையுடன் ஒப்பிட்டால் இப்போது என்ன நடக்கிறது? அண்மையில் ஒரு வகுப்பறையில் நடந்ததாக அங்கு பயிலும் மாணவர் ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
அது புவியியல் வகுப்பு. முது அறிவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைப் பார்த்து உதவிப் பேராசிரியர் சொல்கிறார்:
“உலகில் முசுலிம்களுக்கென்று நாடுகள் உள்ளன. கிறித்தவர்களுக்கும் நாடுகள் உள்ளன. இந்துக்களுக்குத்தான் நாடே இல்லை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.”
இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி விரிவுரை ஆற்றி விட்டு, சாதியத்தின் தேவையைச் சொல்கிறார்: “சொந்த சாதிக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்வது நல்ல நீருடன் சாக்கடையைக் கலப்பது போன்றதாகும்.”
மாணவர்களில் தணிந்தவர்(தலித்துகள்) யார் என்று அந்த உதவிப் பேராசிரியருக்கு நன்கு தெரியும். அவர்களைப் பார்த்துப் பேசுகிறார்: “நீங்கள் எல்லாம் ஏன் படிக்க வருகின்றீர்கள்? பணம் இருந்தால் படிக்கலாம். நீங்கள் ஊரில் விவசாய வேலை பார்க்க வேண்டியதுதான்.”
அந்த உதவிப் பேராசிரியர் வகுப்பறையில் மட்டுமல்ல, தொடர்ந்து பொதுவெளியில் இந்தக் கருத்துகளைப் பரப்பி வந்தார். அவர் பார்ப்பனரல்ல. சாதிப் பெருமை பேசும் இடைச்சாதிக்காரர்.
இந்த உதவிப் பேராசிரியரின் மதவாத, சாதியப் பரப்புரை தணிந்த(தலித்து) மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஈட்டியது. அவர்களும் இடதுசாரி மாணவர்களும் இந்த உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராடினார்கள். அவர் குடந்தையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அதே மதவாத, சாதியக் கருத்துகளைப் பேசப் போய் மாணவர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் அவரை மாற்றினார்கள் – பழைய இடத்துக்கே!
அவரும் அவர் சாதியத்துக்குத் துணை போகும் அதே துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதை வெற்றியாகக் கொண்டு, தணிந்த(தலித்து) மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஆசிரியர்களையும் பழிவாங்க முற்பட்டார்கள். மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்தது. உதவிப் பேராசிரியர் மீண்டும் மாற்றப்பட்டார்.
பேராசிரியர்களின் இந்தச் சாதி விளையாட்டுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககமும் உடந்தையோ? என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் சாதியப் பேராசிரியரை மாற்றினால் அவர் விரும்பும் வசதியான ஊருக்கு மாற்றுவது, அதே நேரம் தணிந்த சாதியினராகவோ(தலித்தாகவோ) தணிந்தோர்க்கு (தலித்துக்கு) ஆதரவாகவோ இருக்கக் கூடிய பேராசிரியரைத் ‘தண்ணியில்லாக் காட்டுக்கு’த் தூக்கியடிப்பது என்ற நடைமுறைதான் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குடந்தைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடர்பான பணியிட மாற்றல்கள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும், தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்துதேசப் பக்தராகிய சாதியப் பேராசிரியர் குறித்து மாணவர் இளந்தென்றல் தமிழக அரசுக்கும் மாநில எசுசி எசுடி ஆணையத்துக்கும் முறைப்பாடு செய்தார்.
எசுசி எசுடி ஆணையம் அவரை நேரில் அழைத்தும் விசாரித்தது. சாதியப் பேராசிரியர் வகுப்பறையிலும் வெளியிலும் செய்துவரும் இந்துத்துவ, சாதியப் பரப்புரை பற்றி இளந்தென்றல் விரிவாக எடுத்துரைத்தார். ஆனால் ஆணையத்தின் தலைவர் ‘நீதியரசர்’ பொ. சிவக்குமார் தமது ஆணையில் இளந்தென்றலின் முறைபாடுகளைப் பதிவு செய்து விட்டு, முடிவில் கூறுகிறார்:
“மேற்சொன்ன ஆசிரியர் மாணவர்களிடம் பிற்போக்குக் கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்பதைத் தவிர வேறு எந்த வகையில் இவ்வாணையத்தினால் மனுதாரரது மனு பரிசீலிக்கத்தக்கது? என்பதை மனுதாரரால் தெளிவுபடுத்த இயலவில்லை.”
ஆக, எசுசி எசுடி ஆணையத்துக்கு மேற்சொன்ன ஆசிரியரின் பிற்போக்குப் பேச்சு பரிசீலனைக்குரிய ஒரு முறைப்பாடாகவே தெரியவில்லை.
எசுசி எசுடி ஆணையத்தின் இந்த அணுகுமுறை கல்விக் கூடங்களில் மதவாதத்துக்கும் சாதிவெறிக்கும் உரிமம் வழங்குவதாகவே புரிந்து கொள்ளப்படும்.
இதே குடந்தை கல்லூரியில் தணிந்த(தலித்து) மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஆசிரியர்களும் சாதிய ஆசிரியர்கள் சிலரால் குறிவைத்துப் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாகப் பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டப்படுகினறன. தமிழ்க் குமுக ஓர்மையைச் சிதைக்கும் மாணவர்களின் கல்வியைச் சிதைத்து கல்விச் சூழலை நஞ்சாக்கியும் வருகிறது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 302
Leave a Reply